தமிழகத்தில் லட்சக்கணக்கில் குறையும் நாட்டு மாடுகள் எண்ணிக்கை

நாட்டு மாடுகள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: தமிழகத்தில் குறைந்துவரும் நாட்டு மாடுகள்

2012 மற்றும் 2018 ஆண்டுக்கு இடையில் தமிழகத்தில் நாட்டு இன கால்நடைகள் 6.65 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிற கால்நடை வகைகளின் எண்ணிகையில் 13.21 லட்சம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 20வது கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் உள்நாட்டு இனத்தை சேர்ந்த கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாகக் குறைகிறது.

2012ம் ஆண்டு, 24.59 லட்சமாக இருந்த உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த கால்நடைகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டு 18 லட்சமாக குறைந்துள்ளது.

இதில் 6.6 லட்சமாக இருந்த எருமை மாடுகளின் எண்ணிக்கை 5.18 லட்சமாக குறைந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் கூறுகையில், "பால் உற்பத்தியை பெருக்க செயற்கையாக வெளியூர் கால்நடைகளின் விந்துகள் செலுத்தப்பட்டு இனப்பெருக்கம் செய்யும் முறை 1980ல் துவங்கப்பட்டது. இதன் பிறகு உள்ளுர் கால்நடை இனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது," என்றார்.

தினத்தந்தி: தமிழ் முறைப்படி தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் 2020, பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்ட 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், தமிழ் முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என கூறுகின்றனர் என தினத்தந்தி செய்தி விவரிக்கிறது..

பட மூலாதாரம், Getty Images

1997ம் ஆண்டு பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். எனவே தற்போது பரிகார பூஜைகளும் தமிழ் முறைப்படி நடைபெற வேண்டும். கோவில் கருவறையில் பூஜை செய்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் , யாக பூஜைகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடைபெற வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் சிவனடியார்கள் கோரிக்கை வைக்கவுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்து தமிழ் - விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணியாற்ற வேண்டும்

உள்ளாட்சி தேர்தலில் விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் விரும்பினால் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

அனைத்து அரசுப் பணி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகளை மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், விருப்பம் இல்லாத மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் இந்த ஆணையத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகளின் திறன் மற்றும் விருப்ப அடிப்படையில் மட்டுமே அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: