ஹைதராபாத் என்கவுண்டர்: மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட நால்வர் உடல்கள்

ஹைதராபாத் என்கவுண்டர்: மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட நால்வர் உடல்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்பு காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்கள் மறுபிரதேச பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடத்தப்பட்ட இந்த பிரேத பரிசோதனையை, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட மருத்துவ குழு செய்தது.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் அடையாளம் காட்டிய பிறகு தொடங்கிய இந்த மறுபிரேத பரிசோதனை சுமார் நான்கு மணிநேரம் நீடித்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முழு மறுபிரேத பரிசோதனையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

மறுபிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் இன்று (திங்கட்கிழமை) மாலை ஐந்து மணியளவில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரையின்படி, மறுபிரேத பரிசோதனை குறித்த அறிக்கை, காணொளியுடன் இரு நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு பேர் போலியான என்கவுண்டர் மூலம் சட்டத்துக்கு புறம்பாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடர்பாக மறுபிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படியிலேயே தெலங்கானா உயர்நீதிமன்றம் இந்த மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கின் பின்னணி

படக்குறிப்பு,

இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம் 27 தேதியன்று கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்தபோது நவம்பர் 30ஆம் தேதி இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டனர்

சில அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு அந்த நால்வரையும் டிசம்பர் 4 அன்று விசாரணைக்காக போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்தனர். அவர்களை விசாரித்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் சில பொருட்களை இந்த பகுதியில் வைத்திருப்பதாக அவர்கள் கூறியதும் அந்த நால்வருடன் 10 போலீசார் என்கவுன்டர் நடந்த இடத்துக்கு சென்றனர். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்ததோடு அங்கிருந்த கல், கம்பு போன்றவற்றால் காவல்துறையினரை தாக்க முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அதிகாரிகளிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் என்கவுன்டர் நடத்தியதாகவும் ஹைதரபாத் காவல்துறை ஆணையர் வி.சி. சஜநார் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: