தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய மாணவர் - அரசியல் ஆர்வத்தின் பின்னணி

  • மு.ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
நாகர்ஜூன்

கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் இளைஞர் நாகர்ஜூன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இவர்களில் இளம் வேட்பாளராக கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தின் மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் நாகர்ஜூன்.

''நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை மில் ஊழியர், தாய் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதலே எனக்கு அரசியல் ஆர்வமுண்டு. தினமும் நாளிதழ்கள் வாசிப்பேன், நாட்டுநடப்புகள் குறித்து எனது பகுதியில் உள்ள அரசியல் விமர்சகர்களோடு கலந்தாலோசிப்பேன். இதனால், அரசியல் மீது ஆர்வம் அதிகமானது. இதன் தொடர்ச்சியாகவே இதழியல் துறையில் முதலாமாண்டு முதுகலை படித்து வருகிறேன்,'' என்கிறார் இவர்.

21 வயது இளம் வேட்பாளரான நாகர்ஜூன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆய்வுகள் செய்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்தோடு, 'மீம்ஸ்' உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

''எல்லா இளைஞர்களைப் போலவே எனக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம். மீம்ஸ் உருவாக்குவது எனக்கு மிகவும் பிடித்த செயல், அரசியல் குறித்த மீம்ஸ்களை அதிகம் உருவாக்கி பகிர்ந்து வருகிறேன். இதற்கு பாராட்டும், ஆதரவும் கிடைத்தது. இதையே, ஏன் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என யோசனை செய்து, தற்போது எனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய வடிவமாக மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறேன்,'' என்கிறார் இவர்.

தான் வெற்றிபெற்றால் நீலாம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குவது, பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிப்பதற்கான பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளை இவர் தனது பிரசாரத்தில் முன்னிலை படுத்திவருகிறார்.

''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 21 வயது நிரம்பியிருந்தால் போதும் என்ற அடிப்படை தகுதியே பலருக்கும் தெரிவதில்லை. வெற்றி பெறுவது மட்டுமே எனது இலக்கல்ல, என்னைப் பார்த்து அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக அளவில் இளைஞர்கள் போட்டியிட வேண்டும் என்பதே எனது ஆசை,'' என தெரிவித்த நாகர்ஜூன், பரபரப்பாக தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: