இந்தியாவில் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி நோய்: மத்திய அரசு உத்தரவு

நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: வெறிநாய்க்கடி நோய் அதிகரிப்பு

வெறிநாய் கடி நோய் அதிகரிப்பதால், தடுப்பூசிகளை இருப்பு வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் 'ரேபீஸ்' எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமின்றி நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்நோயால் சராசரியாக ஆண்டுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மட்டும் இந்நோய் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ரேபீஸ் நோய் அதிகரித்து வருவதையொட்டி, இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அளவு தடுப்பூசியை கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் ''வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் கடித்தால் அலட்சியமாக இருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : ஜெர்மன் மாணவர் இந்தியாவிலிருந்து வெளியேற்றம்

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி யில், இயற்பியல் பயின்று வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவர் , இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டார்.

பட மூலாதாரம், facebook

போராட்டத்தின்போது ''யூத இன அழிப்பு குறித்தும் இந்திய காவல் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையிலும் பதாகைகளை ஏந்தியிருந்தார்.

சென்னை சேப்பாக்கம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டங்களில் ஜேக்கப் கலந்துகொண்டார்.

இந்த புகைப்படங்கள் வெளியான பிறகு, சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் அவரை இந்திய நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து திங்கள் கிழமை மாலை ஜேக்கப் இந்தியாவை விட்டு வெளியேறினார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி : தமிழக ரைவு வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர் என்கிறது தினத்தந்தி செய்தி.

இதில் ஆண்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேர். பெண்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர். மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேர். ஆண்களைவிட பெண்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 831 பேர் அதிகம்.

மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 3,25,028 ஆண்கள், 3,20,963 பெண்கள், 82 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்களுடன் துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 88,483 ஆண்கள், 81,087 பெண்கள், 50 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: