NPR: தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் குறிக்கோள் என்ன? ஆவணங்கள் தேவையா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரின் அடையாளங்களையும் பதிவு செய்யத் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டைப் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.
"இதற்காக யாரும் எந்த ஆவணங்களையும் கொடுக்கத் தேவையில்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதில் சேர்க்கப்படுவார்கள்," என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு என்றால் என்ன? இதன் நோக்கம் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது நாட்டில் உள்ள அனைத்து மக்கள் குறித்த பதிவேடு.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) எந்த தொடர்பும் இல்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பிரகாஷ் ஜவடேகர்
இது உள்ளூர் அளவில் தயாரிக்கப்படுகிறது. குடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை விநியோகம்) ஆகியவற்றின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமம்/சிறு நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் இது தயாரிக்கப்படுகிறது.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தங்கள் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்வது இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாகும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்கள் வசித்துவந்த அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு அவ்விடத்தில் வசிக்கும் வாய்ப்பு, எண்ணமுள்ளவர்களை அப்பகுதியில் வசிப்பவராகக் கணக்கில் கொண்டு தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவர் குறித்தும் ஒரு விரிவான தரவு தளத்தை உருவாக்குவதே தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் நோக்கமாகும். இந்த தகவல் தளத்தில் தனிமனிதர்களின் 'பயோமெட்ரிக்' தகவல்களும் உள்ளடக்கப்படும்.
மற்ற தகவல்கள் என்ன?
பயோமெட்ரிக் தகவல்கள் தவிர நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு நபர் குறித்த கீழ்க்கண்ட முக்கிய தகவல்களும் இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் சேர்க்கப்படுகிறது.
- நபரின் பெயர்
- வீட்டின் தலைவருக்கு அவர் என்ன உறவு
- அப்பாவின் பெயர்
- அம்மாவின் பெயர்
- துணையின் பெயர் (திருமணமாகி இருந்தால்)
- பாலினம்
- பிறந்த தேதி
- திருமணம் ஆகிவிட்டதா?
- பிறந்த இடம்
- நாட்டுரிமை
- தற்போதைய வசிப்பிட முகவரி
- தற்போதைய வசிப்பிடத்தில் வசிக்கும் காலம்
- நிரந்தர வசிப்பிட முகவரி
- தொழில்/நிலை
- கல்வி தகுதி
2011 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குத் தகவல்கள் சேகரிக்கும்போது, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்குத் தேவையான தகவல்கள் 2010-இல் சேகரிக்கப்பட்டது.
கடந்த 2015-இல் வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு இதில் சில மேம்படுத்தல் பணிகள் நடந்தன. மேம்படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தற்போது 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குத் தகவல்கள் சேகரிக்கும்போது, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு தேவையான தகவல்கள் சேகரிப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் தவிர நாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நடக்கும். இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: