பெரியார் குறித்த எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை: தமிழக பா.ஜ.க - விரிவான தகவல்கள்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்,
  • பிபிசி தமிழ்
பெரியார் குறித்த எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை: தமிழக பா.ஜ.க - விரிவான தகவல்கள்

பெரியாரின் நினைவு தினமான இன்று, அவரைப் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் வெளியிட்ட பா.ஜ.க., கடும் எதிர்ப்பின் காரணமாக அந்தப் பதிவை நீக்கியுள்ளது. இருந்தபோதும் அந்தக் கருத்தில் தங்களுக்கு மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளது.

பெரியாரின் நினைவு தினமான இன்று, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதி கொள்வோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

பா.ஜ.கவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காமாலைக் கண்கள்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.கவின் இந்த ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

"தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!" என்று கூறினார்.

புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?

இதற்குப் பிறகு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அப்பதிவைப் போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி

அ.தி.மு.கவைச் சேர்ந்த மாநில அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாடு ஒன்றுபட்டு இருப்பதற்கு வித்திட்ட பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரை மறக்க முடியாது. இவர்களை யார் இழிவுபடுத்தினாலும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி " என்று கூறினார்.

எங்களுக்கு உடன்பாடுதான்

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு பா.ஜ.கவின் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார், "கூட்டணித் தலைவர்களும் எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில் தெரிவிக்கப்பட்ட கருத்தில் எங்களுக்கு உடன்பாடுதான்" என்று கூறினார்.

பெரியார் பற்றிய பதிவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் தி.கவிலிருந்து தி.மு.க பிரிந்தபோது அறிஞர் அண்ணாவும் மு. கருணாநிதியும் தெரிவித்த கருத்துகள்தான் எனக் கூறிய நிர்மல்குமாரிடம், போக்ஸோ சட்டத்தை அந்தப் பதிவில் எதற்காகக் குறிப்பிட்டீர்கள் எனக் கேட்டபோது, "பெரியார் நினைவு நாளில் ஒரு நல்ல கருத்தைத் தெரிவிக்கலாம்" என்று நினைத்தோம் என்று கூறினார்.

பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுபோல தலைவர்களை அவதூறு செய்து பதிவுகளை வெளியிடுவது சரியா எனக் கேட்டபோது, "நடந்ததைத்தான் கூறியிருக்கிறோம்" என்றும் பெரியார் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.

பெரியார் குறித்த ட்விட்டர் பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களும் இந்தப் பதிவு குறித்து அதிருப்தி தெரிவித்ததாலேயே அதனை பா.ஜ.கவின் ஐ.டி. பிரிவு நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.

இருந்தபோதும் நீக்கப்பட்ட பா.ஜ.க. ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை தன்னுடைய சொந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிர்மல்குமார், "ராமர் - சீதை, மற்றும் இந்து கடவுள்கள் பற்றி தவறாக பேசி சிரித்த கூட்டம்..சாவர்க்கர் பற்றி பொய்களை பரப்பிய கூட்டம்.. இந்த கூட்டம் புரிந்து கொள்ளவேண்டியது, நீங்கள் எறியும் பந்து தான் உங்கள் மீது திரும்பியுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும்" என்று கூறியிருக்கிறார்.

வருத்தம் தெரிவித்த எச். ராஜா

பா.ஜ.க பெரியார் குறித்து ட்வீட் பகிர்ந்து சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்தாண்டு மார்ச் மாதம் எச்.ராஜா தனது சமூக ஊடக பக்கத்தில், "பெரியார் சிலையை உடைக்க வேண்டும் " என கருத்து பகிர்ந்தார்.

பட மூலாதாரம், H.RAJA BJP

இதற்கு கண்டனங்களை எழுந்ததை அடுத்து, தன் பக்கத்தை நிர்வகிப்பவர் தமது அனுமதி இன்றி அவ்வாறு பதிவிட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது அவர், "திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin, என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்துவிட்டேன். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயப் பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல." எனக் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: