அமித் ஷா: ‘’ஒவைஸி சூரியன் மேற்கே உதிக்கிறது என்பார்”

அமித் ஷா

பட மூலாதாரம், ANI

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) எந்த தொடர்பும் இல்லை. இதை நான் இன்று தெளிவாகக் கூறுகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர் இவ்வாறாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமித் ஷா பதிலளித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது, ''சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று நாங்கள் கூறினால், ஒவைஸி அவர்கள் இல்லை, சூரியன் மேற்கே உதிக்கிறது என்று கூறுவார். ஆனாலும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவருக்கும் நான் உறுதியாகக் கூறுகிறேன்'' என்று அமித் ஷா மேலும் குறிப்பிட்டார்.

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்கட்சிகள் தூண்டுதலால்தான் இந்தப் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தை கைவிடும்படி அரசு கேட்டது."

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்கு கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக வந்த செய்திகள் குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''இந்த இரு மாநில முதல்வர்களுக்கும் பணிவாக நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், இம்மாதிரியான முடிவை எடுக்கவேண்டாம். உங்கள் முடிவுகளை தயவுசெய்து பரிசீலனை செய்யவும். உங்கள் அரசியலுக்காக வளர்ச்சி திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடையாமல் தடுக்கவேண்டாம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கலந்துரையாடலும் நடக்காததால் அது தொடர்பாக எந்த விவாதமும் நடத்த தேவையில்லை. அமைச்சரவை கூட்டம் அல்லது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதமும் நடக்காததால் இது குறித்த பிரதமர் மோதியின் கருத்து சரியானதே'' என்று அமித் ஷா மேலும் கூறினார்.

''தேசிய குடிமக்கள் பதிவேடு அல்லது குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், தடுப்புக் காவல் மையத்துக்கும் எந்த தொடர்புமில்லை. பல் ஆண்டுகளாக தடுப்புக் காவல் மையங்கள் உள்ளன. சட்ட விரோதமாக நாட்டில் நுழையும் குடியேறிகளுக்காக இந்த மையங்கள் உள்ளன. இது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன'' என்று இந்த பேட்டியில் அமித் ஷா தெரிவித்தார்.

''தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் சில பெயர்கள் விடுபட்டு போக வாய்ப்புண்டு. ஆனால் அதற்காக அவ்வாறு பெயர் விடுபட்டு போனவர்களின் குடியுரிமையை திரும்பப் பெறப்போவதில்லை. ஏனெனில் இது தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான பணி நடைமுறை அல்ல. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் வேறு ஒரு நடைமுறை. தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்'' என்று அவர் கூறினார்.

காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து பேசும்போது, "காவல்துறையினருக்கு இதுபோன்ற சூழலில் பதட்டத்தைக் கையாளும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் சில உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் அவர்களுக்குத் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு பிற உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். பாதுகாப்பான சூழலில் அமர்ந்து கொண்டு பேசுவதும் கலவரத்தில் நின்று நிலைமையைச் சமாளிப்பதும் முற்றிலும் வேறுபட்டது." என்றார் அமித் ஷா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: