என்.ஆர்.சி, நீட் திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? - ப.சிதம்பரம் பிரத்யேக பேட்டி

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரம் ஆகியவை இந்தியா முழுவதும் பெரும் விவாதங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சட்டங்கள் குறித்தும், பொருளாதார நிலை குறித்தும், கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் பிபிசியிடம் விரிவாகப் பேசினார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபடி பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:

கே. நீங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். ஆனால், இந்தச் சட்டத்தால் இந்தியக் குடிமக்கள் அச்சப்பட ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க மூன்று அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை மதத்தினரை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டம் என்கிறது மத்திய அரசு.

ப. இது வேடிக்கையான வாதம். இந்தச் சட்டத்தில் ஒரு இறுதி நாள் - cut off date - இருக்கிறது. 31.12.2014 என்பதுதான் அந்தத் தேதி. அந்தத் தேதிக்குள் இந்தியாவிற்குள் குடியேறியவர்களைப் பற்றிய சட்டம்தான் இது. அவர்கள்தான் இங்கே குடியேறிவிட்டார்களே.. இங்கே வந்துவிட்டார்களே.. அப்படியானால் இங்கு இருப்பவர்களைப் பற்றிய சட்டம்தானே இது? இனி குடியேறப் போகிறவர்களைப் பற்றிய சட்டமல்ல இது. ஏற்கனவே வந்தவர்களைப் பற்றிய சட்டம்.

இப்படி வந்தவர்களை எப்படி நடத்துவது? சமநோக்கோடு நடத்துவதா அல்லது பாரபட்சமாக நடத்துவதா என்பதுதான் கேள்வி. அவர்களை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் எனப் பிரிப்பதா அல்லது சமநோக்கோடு நடத்துவதா என்பதுதானே சர்ச்சை? அப்படியிருக்கும்போது இந்தியாவில் இருப்பவர்களைப் பற்றிய சட்டமில்லையென்று சொன்னால், இவர்கள் என்ன காது குத்துகிறார்களா?

கே. அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களைப் பற்றிய சட்டம் இது. இந்திய முஸ்லிம்களைப் பற்றி ஏதுமில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனைத் திரிக்கின்றன என்பது அரசின் வாதம்..

ப. நான் மீண்டும் சொல்கிறேன். இது ஏற்கனவே வந்தவர்களைப் பற்றியது. அவர்கள் இங்கேதானே இருக்கிறார்கள். 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா இல்லை வெளிநாட்டில் இருக்கிறார்களா? அப்படியானால் இந்தியாவில் இருப்பவர்களைப் பற்றிய சட்டம்தானே இது? ஏன் அப்படி இல்லை என்கிறார்கள் எனப் புரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

கே. ஏற்கனவே இந்தியக் குடிமக்களாக இருப்பவர்களைப் பற்றி இந்தச் சட்டம் கூறவில்லையே..

ப. யார் குடிமக்கள், யார் குடிமக்கள் அல்ல என்பதே பிரச்சனையாக இருக்கிறது. அசாமில் 19 லட்சம் பேரை அடையாளம் கண்டிருக்கிறீர்கள். முதலில் 40 லட்சம் பேரை அடையாளம் கண்டீர்கள். அவர்கள் குடிமக்கள் அல்ல என்றீர்கள். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்றீர்கள். அதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், மற்ற மதத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் குடிமக்களா இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடையாது. அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தால் இவ்வளவு பேருக்கும் என்ன ஆகும்னு கேட்கிறோம். அதற்கு பதில் சொல்லவில்லை. யாரை சேர்த்துக்கொள்ளப் போகிறீர்கள், யாரை வெளியேற்றப் போகிறீர்கள் என்பதுதான் பெரிய கேள்வி. அதில் இந்துக்களை சேர்த்துக்கொள்வேன், இஸ்லாமியர்களை வெளியேற்றுவேன் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கே. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களை முறைப்படுத்துவதற்கு ஒரு சட்டம் தேவைதானே?

ப. யார் இல்லை என்று சொன்னது? அகதிகளுக்கான ஒரு சட்டத்தைக் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு அகதிகள் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள் அறிஞர்கள். யார் அகதி, எந்த நிபந்தனைக்குட்பட்டு ஒரு அகதிக்கு அடைக்கலம் தரலாம், எந்த நிபந்தனைக்குட்பட்டு ஒரு அகதிக்கு குடியுரிமை தரலாம் என விவாதங்கள் நடந்து பல முன் மாதிரிச் சட்டங்கள் இருக்கின்றன.

அதைப் போல ஒரு அகதிகள் சட்டத்தைக் கொண்டு வரலாமே. அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவராமல், பழைய குடியுரிமைச் சட்டத்தை எடுத்து அவசர, அவசரமாக ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து, அதை பாரபட்சமான திருத்தமாகச் செய்யும்போது நாட்டில் அச்சம் ஏற்படுகிறதா, இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

கே. பாரபட்சமில்லாமல் ஒரு சட்டத்தை கொண்டுவரச் சொல்லலாம். ஏன் முழுமையாக இதனை எதிர்க்க வேண்டும்?

ப. இந்தச் சட்டம் குறை என்பதால் எதிர்க்கிறோம். குறையில்லாவிட்டால் ஏன் எதிர்க்கப் போகிறோம்? முழுமையான சட்டமாக இருந்து, பொருத்தமான சட்டமாக இருந்து, எல்லாத் தேவைகளையும் உணர்ந்து அதற்கான பரிகாரங்களைக் கண்டிருந்தால் ஏன் எதிர்க்கிறோம்? சட்டத்தை ஞாயிற்றுக் கிழமை மாலை அமைச்சரவையில் நிறைவேற்றி, திங்கட்கிழமை மக்களவையில் புகுத்தி, அதே நாள் இரவு 12 மணிக்கு நிறைவேற்றுகிறீர்கள். அப்போதுதானே அந்தச் சட்டத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிகிறது?

அந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு, திருத்தம் கொண்டுவரச் சொல்வதற்கு ஒரு நாள்தானே கிடைத்தது? அந்த ஒரு நாளில் பல திருத்தங்களை மக்களவையில் கொண்டுவந்தோம். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முரட்டுப் பெரும்பான்மையோடு அந்தச் சட்டத்தை நிறைவேற்றினீர்கள். மாநிலங்களவையிலும் நிறைவேற்றினீர்கள். ஆகவே இந்தச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் எதிர்க்கிறோம்.

கே. அசாமில் நீண்ட காலமாகவே, குறிப்பாக 1985லிருந்தே வெளிநாட்டவர் எனக் கருதப்படுவர்களை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. சிறப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன. இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?

ப. இது போன்ற சட்டம் அல்ல, அது. 1971 மார்ச் மாதம் 21ஆம் தேதிக்கு முன்னாள் வந்தவர்கள் - பின்னால் வந்தவர்கள் என்ற பாகுபாடு மட்டும்தான் அதில் உண்டு. மத ரீதியான பாகுபாடு இல்லை. யார் வந்திருந்தாலும் சரி, மார்ச் 21ஆம் தேதிக்கு முன்பு வந்தால் அடைக்கலம் தந்தோம். பின்னால் வந்தால் அடைக்கலம் இல்லையெனச் சொன்னோம். மத ரீதியான வேறுபாடு இல்லை. இந்தச் சட்டம் மத ரீதியான வேறுபாட்டைக் கொண்டுவருகிறது. அது சட்ட விரோதம் என்கிறோம்.

கே. இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

ப. கோளாறுகள் நிறைந்த, குறையான இந்தச் சட்டத்தைக் கைவிட்டுவிட வேண்டும். மாறாக, முழுமையான ஒரு அகதிகள் சட்டத்தைக் கொண்டுவந்து, அந்தச் சட்டத்தை வரையறுக்க வேண்டும். அதில் யோசனை கேட்டால், நாங்கள் யோசனை சொல்வதற்கு தயார்.

பட மூலாதாரம், BIJU BORO VIA GETTY IMAGES

கே. பிரதமர் மோதி, என்ஆர்சியை காங்கிரஸ் கட்சிதான் கொண்டுவந்ததாகச் சொல்லியிருக்கிறார்...

ப. நாங்கள் கொண்டுவரவில்லை. என்ஆர்சி உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் அசாம் மாநிலத்தில் மட்டும் நடத்திய ஒரு சோதனை. அதன் விளைவைப் பாருங்கள்.

முதலில் 40 லட்சம் பேர் சட்ட விரோதமாக வந்தவர்கள் என அறிவித்தார்கள். பிறகு மறு பரிசீலனை என்ற பெயரில் அது 19 லட்சமாக குறைந்தது. இந்த 19 லட்சம் பேரை வெளியேற்றப் போவதாக சொல்கிறார் உள்துறை அமைச்சர். எப்படி வெளியேற்றப் போகிறீர்கள் என நாங்கள் கேட்கிறோம். ரயிலிலா, பஸ்ஸிலா, கப்பலிலா, விமானத்திலா? எந்த நாடு அவர்களை ஏற்றுக்கொள்ளப் போகிறது?

இதற்கெல்லாம் பதில் கிடையாது. 2024க்குள் ஒவ்வொருவரையும் நான் தூக்கியெறிவேன் என்கிறார். எங்கே தூக்கிப் போடுவீர்கள்? வங்கக் கடலிலா? இதெல்லாம் என்ன பேச்சு? 19 லட்சம் பேரை வெளியேற்ற முடியுமா? இதை யாராவது யோசித்துப் பார்த்தார்களா?

கே. இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை இந்தச் சட்டம் புறக்கணிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் சொன்னீர்கள். இங்கே உள்ள இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப. குடியுரிமை வேண்டுமா, வேண்டாமா என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை, நாங்கள் அகதிகளாக வந்திருக்கிறோம். எங்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைக்க வழி செய்யுங்கள்; எங்கள் தாயகத்தில் குடியுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தர வேண்டுமெனக் கேட்கிறார்கள்.

அதற்குத்தான் இந்திய அரசு உதவி செய்கிறது. அதையும் மீறி இங்கே சிலர் தங்கிவிட்டார்கள். "நாங்கள் இனி தாயகத்திற்குச் செல்லவில்லை. இங்கே குடியுரிமை தாருங்கள்" என்று சொன்னால் அதைப் பரிசீலிக்க வேண்டும். இந்தச் சட்டம் அதைத் தடுக்கிறது. அதுதான் குற்றச்சாட்டு. அகதிகளாக வந்த இந்துக்களை அனுமதிப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களை - இந்துக்கள், முஸ்லிம்களை - அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கு. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட தீங்கு. இதுதான் பாகுபாடு. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

கே. நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை ஆதரிக்கிறீர்களா?

ப. அவர்கள் கேட்டால் தர வேண்டும் என்றுதான் சொல்கிறோம். ஆனால், பெரும்பகுதியினர் குடியுரிமை கேட்கவில்லை. அவர்கள் தாயகம் திரும்பிச் செல்ல வழிவகை செய்யுங்கள் என்கிறார்கள். சமீபத்தில் அவர்களின் பிரதிநிதி ஒருவர் பேசும்போது, நாங்கள் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறோம். இரட்டைக் குடியுரிமை வேண்டாம் எனக் கூறினார். அதையும் மீறி, யாராவது குடியுரிமை கேட்டால், அதைப் பரிசீலிக்க வேண்டும். அதை இந்தச் சட்டம் தடுக்கிறது.

கே. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி ஆகிய விவகாரங்கள், அதில் எழுந்திருக்கும் எதிர்ப்பு ஆகியவற்றை மத்திய அரசு கையாளும் விதம் எப்படி இருக்கிறது?

ப. முரட்டுத்தனமான அணுகுமுறையோடு கையாளுகிறார்கள். ஊரே போராடுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் போராடுகிறார்கள். பிரதமர் என்ன சொல்கிறார் என்றால், என்னுடைய சட்டம் 1,000 மடங்கு சரி என்கிறார். 99 சதவீதம் சரி என்றால்கூட, அவர் மனதில் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது என்று சொல்லலாம். 1000 சதவீதம் சரி என்றால் என்ன சொல்வது? அன்று மாலையே உள்துறை அமைச்சர், எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்த்துக்கொள்ளுங்கள்; இந்தச் சட்டத்தை அமல்செய்து, 2024க்குள் அனைத்து நபர்களையும் தூக்கியெறிவேன் என்கிறார். இந்த மாதிரி பேச்சு, முரட்டுத்தனமான பேச்சு. ஆணவப் பேச்சு.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

கே. தற்போது பா.ஜ.க. அரசை பல விஷயங்களுக்காக விமர்சிக்கிறீர்கள். ஆனால், அவற்றில் பெரும்பாலான திட்டங்கள்,சட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் துவக்கி வைக்கப்பட்டன..

ப. காங்கிரஸ் அரசு முட்டாள் அரசு. அதைத்தான் தூக்கியெறிந்துவிட்டீர்களே. அதைப் பற்றி இப்போது பேசி என்ன செய்வது? அவர்கள் செய்தது தவறு என்றால், தேர்தலிலே தோற்கடிக்கப்பட்டார்கள். பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். இப்போது அமெரிக்காவில் ட்ரம்ப் செய்வதைப் பற்றிக் கேட்டால், ஆபிரகாம் லிங்கன் செய்ததைப் பற்றியா சொல்ல முடியும்?

கே. நீட், என்ஐஏ போன்றவற்றை காங்கிரஸ்தானே கொண்டுவந்தது..

ப. நீட் சட்டத்தை நாங்கள் செய்யவில்லை. அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அது தமிழர்களுக்கு தீங்கிழைத்தது. அதை நீக்குவோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னோம். கோச்சிங் கிளாஸ் இல்லாமல் நீட்டில் தேர்ச்சியடைந்தவர்கள் சொற்பமானவர்கள்தான். தமிழக மாணவர்கள் கோச்சிங் கிளாஸிற்கு பல லட்ச ரூபாய் கொடுத்துதான் நீட்டில் வெற்றிபெற்றிருக்கிறார்களே ஒழிய, கிராமத்தில் உள்ள, கோச்சிங் கிளாஸ் போக முடியாத மாணவன், மாணவிக்கு நீட்டில் வாய்ப்பே கிடையாது. மாநகரத்தில் உள்ள, கோச்சிங் கிளாசிற்கு செல்லும் வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு சாதகமாக இல்லை.

(இந்தியாவின் பொருளாதார நிலைமை, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து ப. சிதம்பரம் பேசிய பகுதிகள் அடுத்ததாக வெளியாகும்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: