மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விவகாரம்: 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்

மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விவகாரம்: 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழ் புலிகள் கட்சியின் இந்த முயற்சியை இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பிற்கு காரணமான ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் நாகை திருவள்ளுவன் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் டிசம்பர் 22 ஆம் தேதி, மேட்டுப்பாளையத்தில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த 3000 தலித் இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முத்துக்குமார், ''சுவர் இடிந்து 17 உயிர்களைக் கொன்ற நபர் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார், தாழ்த்தப்பட்ட மக்களின் நீதிக்காக போராடியவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதை கண்டித்தும், தலித் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதும், ஒடுக்கப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதை எதிர்த்தும், எங்கள் கட்சியைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்கவுள்ளோம்.''

படக்குறிப்பு,

முத்துக்குமார்

''முதற்கட்டமாக, ஜனவரி 5ஆம் தேதி, கட்சி உறுப்பினர்களான 100 பேர் இஸ்லாமியராக மாற திட்டமிட்டுள்ளோம், இதில் சிலர் சுவர் இடிந்த சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கான பெயர் பட்டியலை தயாரித்து வருகிறோம். இந்து மதத்தின் அடையாளத்தால் தலித் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இஸ்லாம் மதத்தை ஏற்று அதன் அடையாளங்களை பெற்றால் அனைவரையும் போல சமமாக தலித்துகளும் நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இஸ்லாம் மதத்திற்கு மாறும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,'' என கூறினார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறவுள்ளவர்கள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு,

தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட நடூர்: பிரிவினை அகலுமா?

இஸ்லாம் மதத்திற்கு மாறுவது பற்றி நடூர் பகுதி மக்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. ''இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என எங்களை யாரும் வற்புறுத்தவில்லை. சொந்த விருப்பத்தில் சிலரும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் சிலரும் முஸ்லிமாக மாறவுள்ளனர். எந்த மதத்திற்கு மாறினாலும் உயிரிழந்தவர்களை மீட்டுக்கொண்டுவர முடியாது. தலித்துகளையும் சமமாக மதித்து நடத்தும் எண்ணம் அனைவரிடத்திலும் தோன்ற வேண்டும், அதுதான் இங்கே அடிப்படைத் தேவை,'' என அவர்கள் தெரிவித்தனர்.

"தமிழ் புலிகள் போன்ற கட்சிகள், தலித் இந்துக்களை வேறு மதங்களுக்கு மாற்றும் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டுவருகின்றன. தமிழகத்தில் தீண்டாமை பல மடங்கு குறைந்துள்ளது. இந்து அமைப்புகளிலேயே தலித் மக்கள் பலர் இருக்கிறார்கள். எனவே தீண்டாமை என்ற பெயரில் மற்ற மதத்தினரிடம் காசு வாங்கிக்கொண்டு மதம் மாற்றும் வேலையை இவர்கள் செய்து வருகின்றனர்," என்கிறார் இந்து முன்னணியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குணா.

படக்குறிப்பு,

குணா

தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த தலித் மக்கள் மதம் மாற திட்டமிட்டிருப்பது குறித்து கேட்டபோது, ''3000 பேர் முஸ்லிம்களாக மாறுவது குறித்து முறையான தகவல்கள் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை,'' என பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவை உலுக்கிய மீனாட்சிபுரம் மதமாற்றம்

1981ல் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்தவுடனேயே அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி அங்கு சென்றார். வாஜ்பேயி மட்டுமல்லாது பல இந்து அமைப்புகளும் அவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. மதம் மாறிய 180 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்து மதத்திற்கு மீண்டும் திரும்பவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிபிசி தமிழ் உடனான பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :