குடியுரிமை திருத்த சட்டப் போராட்டம்: இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஜெர்மன் மாணவர் கூறியது என்ன?

திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட போராட்டம் ஜெர்மன் மாணவர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Chintabar

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டி.யில் போராடிய ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லின் டென்தல், விசா விதிகளை மீறியதாக கூறி ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார்.

சென்னை ஐ.ஐ.டி யில், இயற்பியல் பயின்று வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவர், இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டார்.

போராட்டத்தின்போது ''யூத இன அழிப்பு '' குறித்தும் இந்தியக் காவல் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையிலும் பதாகைகளை அவர் ஏந்தியிருந்தார்.

இன்று (புதன்கிழமை) டெல்லி விமானநிலையத்தில் பேசிய அவர், "திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்ளலாம் என முடிவெடுத்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. என் நண்பர்கள் இந்த சட்டம் மக்கள் விரோதமானது என்றார்கள். மக்களின் போராட்டம் என்னை அசைத்துப் பார்த்தது. போராட்டத்தில் பங்கெடுத்தது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. மனிதநேயத்துக்கு எதிரான எந்த குற்றத்தையும் ஆதரித்துவிடக் கூடாது என்ற செய்தியை தெரிவிக்கத்தான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன்,"என்றார்.

பட மூலாதாரம், chintabar

அந்த போராட்டம் அனுமதியின்றி நடக்கும் போராட்டமென எனக்குத் தெரியாது. விசா தொடர்பாக சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டேன். நான் மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவர்கள் அது எதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. என்னை நாட்டைவிட்டு வெளியேற சொன்னார்கள்," என்று கூறினார்.

போராட்டத்தின் போது அவர் ஏந்தி இருந்த பதாகை ஒன்று, "எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை," என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.

ஜெர்மனியில் உள்ள கல்வி நிலையங்களில் வெளிநாட்டு மாணவர்கள்கூட அமைதி போராட்டங்களில் பங்கேற்பார்கள்." என்றார் ஜேக்கப்.

எனக்குப் பல நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள், நான் மீண்டும் இந்தியா வர விரும்புகிறேன் என்றும் கூறினார்.

இது தொடர்பாக அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாணவர் ஜேக்கப்பிற்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ஜேக்கப் வெளியேற்றப்பட்டதற்குப் பல மாணவ கூட்டமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: