ப.சிதம்பரம் பேட்டி - 'நரேந்திர மோதி சொல்லும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் தவறு'

பா சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரம் போன்றவை குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய பகுதிகள் நேற்று வெளியாகின.

இந்தியப் பொருளாதாரம் குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும், பா.ஜ.கவை எதிர்கொள்வது குறித்தும் பிபிசியின்செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியவை:

கே. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாதாளத்தில் கிடந்த பொருளாதாரத்தை தாங்கள் மேம்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோதி சொல்கிறார்.

ப. அவர் சொல்லும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் தவறு. அவருடைய அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களின்படியே, 2013-14ல் 6.4 சதவீத வளர்ச்சியோடு இந்த நாட்டின் பொருளாதாரத்தை நரேந்திர மோதியின் கையில் ஒப்படைத்தோம்.

கே. 2013-14ன் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சியே இருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ப. வருட முடிவில் எவ்வளவு இருந்தது என்பதைத்தானே பார்க்க வேண்டும். அந்த வருட முடிவில் வளர்ச்சி 6.4 சதவீதம். வருட முடிவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஒன்றரை சதவீதம். அந்த வருட முடிவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. மோதி வந்த பிறகும் ஒன்றரை ஆண்டுகள் சரியாகத்தான் இருந்தது. 'பரவாயில்லை, நரேந்திர மோதி பழைய பாதையிலேயே நடந்து போகிறார்' என்று நானே குறிப்பிட்டேன். ஆனால், 2016 நவம்பர் 8ஆம் தேதி திடீரென்று பண மதிப்பிழப்பு என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அன்றிலிருந்து எல்லாம் குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

கே. பொருளாதாரம் மோசமானதற்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும்தான் காரணமா?

ப. அதுதான் முழு முதல் காரணம். பிறகு, ஜி.எஸ்.டி. அது நல்ல திட்டம். ஆனால், அதனைச் சரியாகச் செயல்படுத்தவில்லை. தவறான சட்டங்களைக் கொண்டுவந்து, தவறான வரி விகிதங்களைக் கொண்டுவந்து, தவறான படிவங்கள், முறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தகத் துறையையே சீர்குலைத்தது ஜி.எஸ்.டி. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பல தவறுகள்.

கார்ப்பரேட் வரியை குறைப்பது, மறைமுக வரியை கூட்டுவது, இறக்குமதி வரியைக் கூட்டுவது, சர் சார்ஜ் போடுவது போன்றவையெல்லாம் தவறு. இவையெல்லாம் தாராளமயமாக்கும் கொள்கைக்கு விரோதமானவை. 1991ல் துவங்கி தாராளமயமாக்கும் கொள்கைதான் இந்தியாவுக்குப் பெரும் பலனைத் தந்தது. இவர்கள் தாராளமயமாக்கும் கொள்கைகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்த நிலைக்கு பொருளாதாரத்தைக் கொண்டு செல்கிறார்கள். இது தவறு.

கே. இந்த அரசு மீது இவ்வளவு குறைகளை எதிர்க்கட்சிகள் சொல்லும் நிலையில், பா.ஜ.கவை எதிர்க்கும் முயற்சியில் அக்கட்சிகள் சரியாகச் செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

ப. சரியாக முயற்சிக்கிறார்கள் என நினைக்கிறேன். இவற்றில் பல கட்சிகள் மாநிலக் கட்சிகள். சொல்லப்போனால், காங்கிரசைத் தவிர அனைத்துமே மாநிலக் கட்சிகள். ஒரு மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள். அந்ததந்த மாநிலத்தில் மட்டும்தான் அவர்கள் செயல்பட முடியும். ஆனால், அக்கட்சிகளை மிரட்டுகிறார்கள். அச்சுறுத்துகிறார்கள். வழக்குப் போடுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

அந்த அச்சுறுத்தல்களுக்கு இடையே அக்கட்சிகள் சில சமயங்களில் வெற்றிபெறுகிறார்கள், ஜார்க்கண்டில் வெற்றிபெற்றதைப் போல. ஹரியானாவில் தோற்றதைப்போல சில நேரத்தில் தோற்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் பா.ஜ.கவுக்கு ஓர் எதிர்ப்புணர்வை காட்ட வேண்டுமென்றால், அதை காங்கிரஸ் கட்சிதான் எடுத்துச் செய்ய வேண்டும். மற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக நிற்க வேண்டும்.

கே. பா.ஜ.கவை காங்கிரஸ் முழுமையாக, தன் முழு பலத்தோடு எதிர்த்தது என்று சொல்வீர்களா?

ப. காங்கிரஸ் முழுமையாக எதிர்த்தது. ஆனால், முழு பலம் இன்னும் வரவில்லை. இருக்கிற பலத்தோடு எதிர்த்தது. இருக்கும் பலம் குறைவு. முதலில் வலிமையைக் கூட்ட வேண்டும். பிறகு, அந்த வலிமையோடு எதிர்க்க வேண்டும். அந்த வலிமை அதிகரிக்க வேண்டுமென நினைக்கிறேன். அது கூடிக்கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் நினைத்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதை நான் ஏற்கிறேன். ஆனால், இருக்கும் வலிமையோடு எதிர்க்கிறோம்.

கே. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது பிரதான எதிர்க்கட்சி இடைக்காலத் தலைவரோடு செயல்படுகிறது..

ப. அது ஒன்றும் விஷயம் கிடையாது. இடைக்காலத் தலைவர் என்றாலும் தலைவர்தான். "தலைவர் பதவியை இடைக்காலமாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் அடையாளம் காணுங்கள்" என்று சோனியா சொன்னார். நாங்கள் அடையாளம் காண்கிறோம் என்று சொன்னோம். மூத்த தலைவர்களின் குறைதான் அது. 25-30 பேர் உட்கார்ந்து பேசி, ஒரு முடிவுக்கு வர வேண்டும். இன்னும் வரவில்லை. ஆனால், இது சோனியா காந்தியின் குற்றமல்ல. ஓர் இடைக்காலத் தலைவராக தங்களால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

கே. தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் ராகுல் காந்தி இப்படி ராஜினாமா செய்திருப்பதை அவருடைய பலவீனமாக நீங்கள் பார்க்கவில்லையா?

ப. இது அவருடைய பலமா, பலவீனமா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய முடிவு இது. ஒரு தனி மனிதன், 'கட்சிக்கு நான் இனி தலைமை தாங்க இயலாது, கட்சி தோல்வியடைந்திருக்கிறது, நான் தார்மீகப் பொறுப்பேற்று விலகுகிறேன்' என்று சொன்னால் அதை எப்படி தவறு எனச் சொல்ல முடியும். இங்கிலாந்தில் லேபர் கட்சியின் தலைவர் கார்பைன் தார்மீகப் பொறுப்பெடுத்து பதவி விலகியிருக்கிறார். அப்படி தார்மீகப் பொறுப்பெடுப்பதை எப்படி தவறு எனச் சொல்ல முடியும்.

கே. காங்கிரஸ் கட்சியை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தில் அவர் கட்சியைக் கைவிட்டுவிட்டுப் போனதாக நினைக்கத் தோன்றுகிறது..

ப. நாங்கள் சொல்லிப் பார்த்தோம். நீங்கள் விலக வேண்டிய அவசியமில்லை. நீங்களே தொடர்ந்து இருங்கள் என்றோம். 'அவர் முடியாது, நான் தார்மீகப் பொறுப்பெடுக்கிறேன்' என்கிறார். வேறு என்ன வழியிருக்கிறது? அவர் முடிவுக்குத்தானே விடவேண்டியிருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

கே. தற்போதைய தமிழக அரசைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப. இது கைப்பாவை அரசு. மத்திய அரசு சூத்திரதாரி. அந்த நூல் எப்படி ஆட்டப்படுகிறதோ, அதற்கேற்றபடி இந்தப் பொம்மை ஆடும். இவர்களுக்கென்று தனியாக ஒரு கொள்கை கிடையாது. ஒரு நிலைப்பாடு கிடையாது. இவர்களுக்கென ஒரு நிலைப்பாடு இருந்தால், இலங்கைத் தமிழர்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய ஒரு சட்டத்தை ஆதரித்து, எப்படி 11 பேர் வாக்களிக்க முடியும்? வாக்களிக்கலாமா? 'முதல்ல இலங்கைத் தமிழர்களையும் சேருங்கள்' என்று நிபந்தனை விதித்திருக்க வேண்டுமல்லவா. அந்த நிபந்தனையைப் போட்டு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தால் அ.தி.மு.க. மீது தவறு இல்லை என்று சொல்லலாம்.

ஆனால், அந்தச் சட்டத்தில் குறை இருக்கிறது. நான் பேசும்போது இதைச் சுட்டிக்காட்டினேன். இந்துக்களை அனுமதிப்போம் என்கிறீர்கள்; ஆனால், இலங்கை இந்துக்களை அனுமதிக்கவில்லை. இது என்ன நியாயம் என்று கேட்டேன். அ.தி.மு.கவினர் அமர்ந்திருந்தார்கள் அல்லவா, அவர்கள் கேட்டிருக்க வேண்டாமா, ஏன் கேட்கவில்லை?

மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போது இந்த ஷரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்து, கிறிஸ்தவர், பார்சி, சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோரை சேர்க்கும்போது இலங்கை இந்துக்களைச் சேர்க்க வேண்டுமெனச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா. ஏன் சொல்லவில்லை? இதற்கு எடப்பாடியும் பதில் சொல்லவில்லை. பா.ஜ.கவும் பதில் சொல்ல மறுக்கிறது. அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இது ஒரு பழக்கம். சங்கடமான ஒரு கேள்வி வந்தால் அதற்குப் பதில் சொல்வது கிடையாது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

கே. மாநிலக் கட்சிகளை கையாளுவதில், ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

ப. மாநிலக் கட்சிகளைக் கையாளாமலா பத்தாண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்தினோம்? 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகளுக்கு பல மாநிலக் கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி ஆட்சி நடத்தினோம் என்பதை மறந்துவிட்டீர்களா?

கே. இனிவரும் ஆண்டுகளில் பா.ஜ.கவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ப. இன்னும் நான்காண்டுகள், ஐந்து மாதங்கள் இருக்கின்றன. நீண்ட காலம் இருக்கிறது. ஆனால், இடையில் மாநிலத் தேர்தல்கள் வருகின்றன. தில்லி, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல்கள் வருகின்றன.

இந்தத் தேர்தல்கள் அனைத்தையும் கண்ணும் கருத்துமாக அணுகி, பா.ஜ.க. அல்லாத கட்சிகள் அனைத்தும் ஒரணியில் கூடுமானவரை நின்று பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும். ஜார்க்கண்டில் நடந்ததை மற்ற மாநிலங்களில் நிறைவேற்றிக்காட்டுவதுதான் புத்திசாலித்தனம். அதைச் செய்ய முடியும். செய்ய வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: