சுனாமி நினைவலைகள்: 'அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது'

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
சுனாமி

டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.

கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் மீனாவ கிராமத்தை சேர்த்தவர் பலராமன். சுனாமியால் தனது மனைவி காந்திமதி, மூன்று குழந்தைகள் சுசித்ரா, மஞ்சு, கிஷோர் மற்றும் உடன்பிறந்த சகோதரி மேகலா என தனது குடும்பத்தில் ஐந்து நபர்களை சுனாமியால் பறிகொடுத்தவர் பலராமன்.

மகளுக்கு திருமணம் முடித்த கையோடு அவரின் திருமண வரவேற்பு வேலையில் மும்பரமாக இருந்த பலராமன், சுனாமி வருவதற்கு முன்பு காலையில் தனது இரண்டாவது மகள் சோபிலாவை வேலைக்கு விடுவதற்காக கடலூர் நகர பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

தனது மகளை வேலையில் விட்டுவிட்டு வீடுதிரும்பிய பலராமன் ஒட்டு மொத்த மீனவ கிராம மக்களும் அலறிக்கொண்டு ஓடிவருவதைக் கண்டு அவர் தனது மனைவி பிள்ளைகள் என்ன ஆகினர் என்பதறியாது தனது வீட்டை நோக்கி ஓடினார்.

படக்குறிப்பு,

சுனாமியால் தனது மனைவி, 3 பிள்ளைகள், மற்றும் உடன்பிறந்த சகோதரியை இழந்த பலராமன்

ஆனால் அவரது வீட்டில் மனைவி, திருமணம் முடித்து வரவேற்பிற்காக வந்த மூத்த மகள் மற்றும் பிள்ளைகள் யாருமே வீட்டில் இல்லாததைக் கண்டு பிறகு சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கின்றனர்களா என்று தேடினார்.

நீண்ட நேரத்தேடுலுக்கு பிறகு ஓரிடத்தில் இருந்த கருவேல மரத்தில் உள்ள முற்களில் தலை மூடிகள் மாட்டிக்கொண்டு தனது மனைவி கையில் மகனை பிடித்தவாரு இறந்தநிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ந்துப்போனார்.

அவரை சென்று தூக்கும் போது தனது தங்கை மேகலா அருகே இறந்து கிடப்பதை அறிந்தார். அனைவரையும் தூக்கிக்கொண்டு கடலூர் பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது, அங்கே திருமணம் முடித்து வரவேற்பிற்காக வந்த தனது மூத்த மகள் சுசித்ரா மற்றும் இளைய மகள் மஞ்சு சடலமாக இருப்பதை கண்டார் பலராமன்.

குடும்பம், வீடு, வாழ்வாதரமான மீன்பிடி தொழிலின் மூலதனங்கள் என அனைத்தையும் சுனாமியில் பறிகொடுத்துவிட்டு தற்போது இறுதியாக இருந்த தனது இரு பெண் பிள்ளைகள் சோபியா மற்றும் நஸ்ரினா இவர்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தனது அன்றாடம் வாழ்வாதரத்திற்கு தினம் தினம் மீன்படித் தொழிலுக்கு சென்று, அதில் வரும் வருவாயில் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் பலராமன்.

மீனவர் பலராமன் அவரது இழப்பு குறித்து கூறுகையில், "குடும்பம் பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்போது அனைத்தையும் இழந்து தனியாக நிற்கிறேன். எனது மூத்த மகள் சுசித்ராவின் திருமணம் முடிந்து வரவேற்பிற்காக கடலூர் வந்திருந்தாள், திருமண வரவேற்பிற்கு ஒருவாரம் இருக்கும் நிலையில் மகளின் விஷேச ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தேன். ஆனால் அன்று வெளியே சென்று வருவதற்குள் இந்த சுனாமியால் எனது குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர்," என்கிறார்.

"அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் உழைத்து வந்தேன். ஆனால் இப்போது யாரும் என்னுடன் இல்லை தனியாக இருக்கிறேன். சுனாமி நினைவு தினம் வரும் பொழுதெல்லாம் அவர்கள் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று யோசிப்பேன். ஆனால் அனைத்தையும் கடந்து சுனாமியில் எஞ்சிய என் இரு மகள்களை திருமணம் செய்வதற்காக வாழ்ந்து வந்தேன் அவர்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தற்போது இழந்த எனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளின் நினைவோடு வாழ்ந்து வருகிறேன்," என வேதனையுடன் தெரிவித்தார் பலராமன்.

சுனாமியில் சிக்கி உயிர்ப்பிழைத்து வந்த கடலூர் மாவட்டம் சிங்காரத்தொப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி.

இவர் சுனாமி வந்த தினத்தன்று வழக்கம் போல வீட்டில் குடும்பத்துடன் தனது வேலைகளை செய்துவந்த இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது சுனாமி அலை பெரும் உயரமாக வருவதை கண்டு தனது இரு மகள்களைக் கூட்டிக்கொண்டு ஓடியிருக்கிறார்.

அவரை தொடந்து வந்த சுனாமியில் சிக்கி அடித்து செல்லப்பட்ட உமாமகேஸ்வரி தப்பித்தோமா பிழைத்தோமா என்பதறியாது இருந்திருக்கிறார். பிறகு மரத்தை பற்றிக்கொண்டு இருந்த இவரையும் இவரது மகள்கள் இருவரையும் காப்பற்றினர் கிராம மக்கள். இதில் உமா மகேஸ்வரியுடன் வந்த தாயார் சுனாமியால் காணாமல் சென்று இரு தினங்களுக்குப் பிறகு சடலாமக கடற்கரையில் ஒதுங்கினார். சுனாமியால் தங்களது வாழ்வாதரமான வீடு, படகு, வலைகள் என அனைத்தையும் இழந்த இவர் அதன் பிறகு கடந்து வந்த காலங்களை மீள்வதறியாது மீண்டு வந்துள்ளார் உமாமகேஸ்வரி.

படக்குறிப்பு,

உமாமகேஸ்வரி

"வழக்கம் போல அன்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதைக் கண்டு வெளியே வந்து பார்த்தபோது தான் தெரிந்தது கடல் மிகு உயரமாக வந்துக்கொண்டிருந்தது. அதனைக்கண்டு எனது இரு மகள்கள் மற்றும் எனது தாயாரை அழைத்துக்கொண்டு ஓடினேன். ஆனால் சுனாமியில் சிக்கி தண்ணீர் எங்களை அடித்துச்சென்று விட்டது பிறகு எப்படி பிழைத்தோமென்று தெரியவில்லை. கிராம மக்கள்தான் எங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால் எனது தாயார் சுனாமியால் அடித்துச்செல்லப்பட்டு இரு தினங்கள் கழித்து கரையொதிங்கினார். எங்களது அனைத்து வாழ்வாதரத்தையும் இழந்துவிட்டோம் இந்த சுனாமியால், எங்களின் உயிர் மட்டுமே மிஞ்சியது," என கண்ணீர் மல்க தெரிவித்தார் உமாமகேஸ்வரி.

இவ்வாறு சுனாமியால் பாதிக்கப்பட்டு உறவுகளையும், உடைமைகளுயும் இழந்த மீனவ கிராம மக்களுக்கு அப்போதைய சூழ்நிலைக்கு எங்களுக்கு நிதியுதவி செய்து தமிழக அரசு உதவினாலும், எங்களது வாழ்வாதரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்கள்.

அரசு தங்களுக்கு கட்டிக்கொடுத்த சுனாமி குடியிருப்புகளும் வேறு கிராமத்தில் இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் இந்த மீனவ கிராம மக்களால் தங்கள் படகுகளை விட்டு தனியே அங்கு சென்று வசிப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்துள்ளனர்.

மேலும் குடியிருப்பிற்கு அருகே கெடிளம் ஆற்றின் படுக்கை இருப்பதால் மழைக்காலங்களிலும், புயல் காலங்களிலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் எங்கள் சுனாமி குடியுருப்புகள் அனைத்து நீரில் மூழ்கிவிடுவதால் அங்கே சென்று வாழமுடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் வாழ முடியாமல் மழையானாலும் புயலானாலும் தங்கள் மீனவ கிராமங்களிலேயே தங்கிவிட்டனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் மீனவர்களுக்கு அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீடுகளில் குடிபோக முடியாத நிலைக்குறித்து சோனாங்குப்பம் மீனவர் சுப்புராயன் கூறுகையில், "சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்கள் கிராம மக்களுக்கு 600க்கும் மேற்பட்ட வீடுகளை தமிழக அரசு கட்டிக்கொடுத்தது. ஆனால் அதில் ஒரு பகுதிகளுக்கு மட்டும் மின் இணைப்புகள் கொடுத்தனர், மீதமுள்ள பகுதிகளில் மின் இணைப்பு இல்லாமல் இருந்ததினால் மக்கள் இங்கே வந்து தங்குவதற்கு அச்சப்பட்டனர். எங்கள் மீனவ கிராம மக்கள் அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீடுகளில் வாழமுடியாமல் சொந்த கிராமங்களிலேயே தங்கிவிட்டனர். எங்களுக்கு இந்த குடியிருப்புகளை மறுசீரமைத்து செய்து எதிர்காலத்தில் எந்த பிரச்சனைகள் ஏற்படாதவாறு அரசு உதவ வேண்டும்," என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: