NRC - NPR: இந்தியா முழுவதும் என்.ஆர்.சி கொண்டு வருவதற்கு முதல் படியாக என்.பி.ஆர் உள்ளதா? - பிபிசி ஆய்வு

  • கீர்த்தி துபே
  • உண்மை சரிபார்க்கும் குழு, பிபிசி
NPR

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக இந்திய அரசு சேகரிக்கும் தரவுகளை தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் பயன்படுத்துவதன் மூலம் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் கேட்கப்படலாம் என்ற எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. அதாவது, என்.பி.ஆர்-ஐ மேம்படுத்த மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

இதனால், இது குறித்து சர்ச்சைகள் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) கொண்டு வருவதற்கான முதல் படி இது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த கூற்றை அரசாங்கம் நிராகரிக்கிறது.

அசாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி நடவடிக்கை மூலம் போதிய ஆவணங்கள் இல்லாத சுமார் 19 லட்சம் பேர் இந்தியக் குடிமக்கள் இல்லை என்று இந்திய அரசு கூறி இருப்பதால் இந்த அச்சம் எழுந்துள்ளது.

அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இந்திய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உடன் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்.பி.ஆர்) எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டின் விதிகளும் வேறுபட்டவை. என்.பி.ஆர்-இன் தரவை என்.ஆர்.சி-க்கு பயன்படுத்த முடியாது. மாறாக இது 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடையது,'' என்று கூறினார்.

செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் முதல் முறையாக என்.பி.ஆர்-ஐ உருவாக்கியது என்று கூறினார். அந்த சமயத்தில், இந்த நடவடிக்கை வரவேற்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, 2014 முதல் தற்போது வரை என்.ஆர்.சி என்ற சொல் தனது அரசாங்கத்தில் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதால், இதுபோன்ற விளக்கத்தை அரசு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

அதோடு, குடியுரிமை திருத்த சட்டம் அமலான பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவருவதன் மூலம் நாட்டில் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க விரும்புவதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.

என்.ஆர்.சி - என்.பி.ஆர் பற்றிய இந்திய அரசின் கூற்றுகளை பிபிசி ஆராயத் தொடங்கியது. உள்துறை அமைச்சகம் 2019 ஜூலை 31ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிட்ட ஓர் அறிவிக்கையின்படி, 2020 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 2020 செப்டம்பர் 30க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஆர்.சி செயல்முறை அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் முதல் முறையாக என்.பி.ஆர் உருவாக்கப்பட்டது என்பதும், அது 2015இல் புதுப்பிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. ஆனால் 2003ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பேயி அரசாங்கத்தில் நடைமுறைக்கு வந்தது .

1955ஆம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தை திருத்திய அன்றைய வாஜ்பேயி அரசாங்கம், அதில் புதிதாக "சட்டவிரோத குடியேறி" என்ற வரையறையையும் சேர்த்தது. 2003 டிசம்பர் பத்தாம் தேதியன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், என்.சி.ஆர் எவ்வாறு என்.பி.ஆரின் தரவுகளின் அடிப்படையில் அமையும் என்பது மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், CENSUSINDIA.GOV.IN

இந்த சட்டத்தின் நான்காவது விதியில் இது எழுதப்பட்டுள்ளது, "மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள இந்திய என்.ஆர்.சி தரவு சேகரிப்பு செயல்முறைக்காக வீட்டுக்கு வீடு சென்று பணியைத் தொடங்கலாம். இதை செய்வதற்கான கால வரையறைப் பற்றி, குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரல் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வழங்குவார்."

மக்கள்தொகை பதிவேட்டிற்காக சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பம் மற்றும் நபரின் தரவை உள்ளூர் பதிவாளர் சரிபார்ப்பார். ஒரு நபரின் குடியுரிமை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது மக்கள் தொகை பதிவேட்டில் குறிக்கப்படும். மேலதிக விசாரணை மற்றும் சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபருக்கு இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும்.

இதைத்தவிர, பிஐபி- இன் ஒரு ட்வீட்டில், 2014 ஜூன் 18, அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "என்.பி.ஆர் திட்டத்தை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும், இது என்.ஆர்.ஐ.சியின் (National Register of Indian Citizens) தொடக்கமாகும்" என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Pib / twitter

2014 நவம்பர் 26ஆம் தேதியன்று, ஒரு கேள்விக்கு பதிலளித்த அப்போதைய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, "தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பிஆர்) என்பது ஒரு பதிவு, இதில் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் விவரங்களும் இருக்கும். அவர்கள் இந்திய குடிமக்களா இல்லையா என்பது வேறு விஷயம். இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை (என்.ஐ.ஆர்.சி) நோக்கிய முதல் படியாக என்.பி.ஆர் இருக்கும், இதில் ஒவ்வொரு நபரின் குடியுரிமையும் சரிபார்க்கப்படும்'' என்றார்.

இது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று குறைந்தது ஒன்பது முறையாவது நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி அரசு கூறியுள்ளது.

பட மூலாதாரம், Pib india

இந்த அறிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதற்கு முன்பெல்லாம் அவர் என்.பி.ஆர் என்று குறிப்பிடப்பட்ட போதெல்லாம், அதன் தரவுகள் என்.ஆர்.சிஉடன் தொடர்புடையதாகவே இருந்தது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக பெயர், பிறந்த தேதி, பாலினம், தாயின் பெயர், தந்தையின் பெயர், பிறந்த இடம் போன்ற தகவல்கள் கேட்கப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இந்த தகவல்கள் கோரப்படுகின்றன. ஆனால் மேற்கு வங்கத்தில் ஒரு என்.பி.ஆர் 'கேள்வித்தாள்' பிபிசிக்கு கிடைத்தது. அதில் 'தாயின் பிறந்த இடம்' என்ன என்று கேட்கப்படுகிறது. இது குறித்து, கேள்வி எழுப்பும் பல மக்கள்தொகை வல்லுநர்கள், அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அதன் அறிக்கைக்கும் இடையிலான முரண்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விஷயத்தை புரிந்து கொள்ள, மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் மனித உரிமைகள் அமைப்பின் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் ரஞ்சித் சுர் என்பவருடன் பேசினோம்.

"உள்துறை அமைச்சர் நாட்டை முட்டாளாக்குகிறார்" என்று அவர் கூறினார். என்.பி.ஆர் என்பது என்.ஆர்.சியின் முதல்படி என்று 2003ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உண்மையில், மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் இந்திய அரசு கொள்கை முடிவுகள் எடுக்க மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வழக்கில், என்.பி.ஆர்- இன் கீழ் சேகரிக்கப்பட்ட தரவு மட்டுமே நாடு முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கும் என்.ஆர்.சியில் பயன்படுத்தப்படும். என்.பி.ஆர் இரண்டு கட்டங்களாக இருக்கும். உங்கள் தகவல்களை நீங்களே கொடுங்கள், எங்களுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று இப்போது அரசு சொல்கிறது, ஆனால் அதன் பிறகு இந்த தகவலை சரிபார்க்க அவர்கள் உங்கள் ஆவணங்களை கேட்பார்கள்.''

2010இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதன்முறையாக இதை செய்தபோது, ஏன் ஆட்சேபனை எழவில்லை? இந்த கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித் சுர், "2010இல் அனைவரும் பதிலளிக்கவில்லை என்பது உண்மைதான், நாங்கள் இப்போது தருகிறோம். இதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால், மக்களுக்கு என்.ஆர்.சி பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. இப்போது அசாமில் என்.ஆர்.சி.யைப் பார்த்தபிறகு, நாங்களும் மக்களும் இந்த முழு விஷயத்தையும் புரிந்துகொள்கிறோம். 2015ஆம் ஆண்டில் இது மோதி அரசால் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தற்போது, அசாமில் என்.ஆர்.சி பட்டியலில் இருந்து 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் 2019, நாட்டில் வேறுபட்ட சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் மக்கள் என்.பி.ஆர் தொடர்பாக உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுகிறார்கள்" என்று கூறுகிறார்.

காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் 2010ஆம் ஆண்டில் உள்துறை இணையமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையை தெளிவுபடுத்தும அவர், "மோதி அரசாங்கத்தின் என்.பி.ஆர், எங்கள் என்.பி.ஆர்-இலிருந்து முற்றிலும் மாறுபட்டது" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Twitter

மத்திய அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள், தத்தமது மாநிலங்களில் என்.பி.ஆர் செயல்முறையை நிறுத்தியுள்ளன.

உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

"இரு மாநிலங்களும் (கேரளா, மேற்கு வங்கம்) அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அந்த மாநில முதலமைச்சர்களிடம் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் இது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும். மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களின் ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களுக்கு இது அடிப்படையானது. அரசியலுக்காக ஏழைகளை வளர்ச்சித் திட்டத்திலிருந்து வெளியே தள்ளி வைக்க வேண்டாம். அவர்களையும் இதில் சேர்க்க வேண்டும்," என்று அமித் ஷா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமித் ஷா

"என்.பி.ஆர் என்பது மக்கள் தொகை பதிவு, இதில் இந்தியாவில் வசிப்பவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன." இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு திட்டங்கள் எந்த அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் எந்த அடிப்படையில் நாட்டின் குடிமகன் என்பதை சொல்வதற்காக ஆவணங்கள் என்.ஆர்.சி.க்காக கேட்கப்படுகின்றன. இந்த இரண்டு செயல்முறைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டு கணக்கெடுப்புகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று எந்தப் பயனையும் பெறாது.''

''2015ஆம் ஆண்டில், சோதனை அடிப்படையில் குறைந்த அளவிலான தரவுகள் புதுப்பிக்கப்பட்டது. முழுமையாக செய்ய வேண்டுமானால் இது பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய ஒரு செயல். இதற்கிடையில், நாட்டில் வாழும் மக்கள் தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இதே (என்.பிஆர்) நடவடிக்கையை எடுத்தது. அப்போது யாரும் கேள்விகளை எழுப்பவில்லை. அரசாங்கம் ஓர் இலவச செயலியைக் கொண்டுவரப் போகிறது, அதில் மக்கள் தங்கள் தகவல்களை பூர்த்தி செய்து, அதில் சுய சான்றளிக்க வேண்டும். எங்களுக்கு எந்தவித ஆவணங்களும் தேவையில்லை,'' என்கிறார் அமித் ஷா.

பிபிசியின் இந்த உண்மை சரிபார்க்கும் ஆய்வில், நாடு முழுவதும் என்.ஆர்.சி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போதைய விதிகளின்படி, நாடு முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும். அதில், என்.பி.ஆரின் தரவு மட்டுமே பயன்படுத்தப்படும். விதிகளை மாற்றுவதன் மூலம் என்.பி.ஆர்-ஐ என்.ஆர்.சி-யில் இருந்து அரசாங்கம் பிரிக்கலாம். ஆனால் அதுவரை என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் இரண்டையும் பிரித்துப் பார்ப்பது தவறு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: