தமிழ்நாடு அரசியல் முதல் வரலாறு வரை: 2019இன் ஆச்சரியங்களும் அபத்தங்களும்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
கீழடி அகழ்வாய்வு

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் கொந்தளிப்பு மிகுந்த ஓர் ஆண்டாக இருந்தது. பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். கைதுகளின் மூலம் பலர் ஒடுக்கப்பட்டனர்.

ஆனால், 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்ததால், போராட்டங்கள் சற்று ஓய்ந்திருந்தன. தமிழகத்தின் இரு பெரும் தலைவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்தினர். சிலரது அரசியல் வாழ்வில் கரு மேகங்கள் சூழ்ந்தன. எல்லா ஆண்டுகளையும்போல பல பரபரப்பான, ஆச்சரியமான சம்பவங்களும் நிகழ்ந்தன. சில அபத்தங்களும் நிகழ்ந்தன.

பட மூலாதாரம், Getty Images

இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆண்டாக இருந்ததால், வருடத் துவக்கத்திலிருந்தே அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் எல்லாம் தேர்தலை மையப்படுத்தியே இருந்தன. அ.இ.அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றுவதிலும் தி.மு.கவைப் பொறுத்தவரை, மு. கருணாநிதிக்குப் பிறகான தன் பலத்தை நிரூபிப்பதிலும் கவனம் செலுத்தின. ஒருவகையில் இரு கட்சிகளுமே தங்கள் இலக்குகளை எட்டின.

2016ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.கவில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆன நிலையிலும் டி.டி.வி. தினகரனின் எதிர்ப்பு, பல தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஆகிய காரணங்களால் பலவீனமான நிலையிலேயே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நீடித்து வந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எடப்பாடி பழனிசாமி

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. போதுமான இடங்களைக் கைப்பற்றியது. இது முதலமைச்சரின் நிலையை வலுப்படுத்தியதோடு, தினகரனின் நிலையையும் மிகவும் பலவீனப்படுத்தியது. இதனால், கடந்த இரு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் பெரும் தன்னம்பிக்கையோடு ஆட்சியை நடத்த ஆரம்பித்தார் முதலமைச்சர் பழனிச்சாமி.

இந்தத் தன்னம்பிக்கை அவரது பல செயல்களில் வெளிப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டார். ஆட்சியும் கட்சியும் தன் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்துவிட்ட நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

2018ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மறைந்த பிறகு, அக்கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். ஏற்கனவே 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்துது, மு.க. ஸ்டாலின்தான் எனச் சொல்லப்பட்டாலும் தந்தையின் நிழலிலேயே அதனைச் செய்தார் என்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால், இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி, 38 இடங்களைக் கைப்பற்றியது.

இது வெறும் தி.மு.கவின் தேர்தல் வெற்றியாக மட்டும் பார்க்கப்படவில்லை; மு.க. ஸ்டாலினின் தலைமைப் பண்புக்கும் கூட்டணிகளை அமைக்கும் திறனுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கட்சிக்குள் எவ்வித எதிர்ப்பும் இல்லாத தலைவராக, கட்சியின் அனைத்துப் பிரிவாலும் ஏற்கப்பட்ட தலைவராக உருவெடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மு.க. ஸ்டாலின்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் பலம் முதல் முறையாக பரிசோதனைக்குள்ளாயின. அ.தி.மு.கவுக்கு எதிராக டிடிவி தினகரனால் நடத்தப்பட்டுவந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் கமல்ஹாசனின் தலைமையில் இயங்கிய மக்கள் நீதி மய்யம் ஆகியவை இவற்றில் முக்கியமானவை. ஆனால், இரண்டு கட்சிகளுமே தங்களது எதிர்பார்ப்புக்குக் கீழாகவே சாதித்தன.

குறிப்பாக, டிடிவி தினகரனுக்குக் கிடைத்த தோல்வி, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பும் அளவுக்கு ஆழமானதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.கவில் சேர்ந்தார். அமமுகவின் அமைப்புச் செயலாளரும் தென்காசியைச் சேர்ந்தவருமான இசக்கி சுப்பைய்யா, அ.தி.மு.க.வில் இருந்தபடியே, தினகரனுக்கு ஆதரவளித்துவந்த ரத்தினசபாபதி ஆகியோர் அ.தி.முகவுக்குத் திரும்பினர். 2021ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களே இனி அவரது அரசியல் எதிர்காலத்தை இறுதியாகத் தீர்மானிக்கும் என்ற நிலைக்கு இந்த ஆண்டில் தள்ளப்பட்டார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரனைப் போலவே, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் மிக இக்கட்டான ஒரு சூழலில் நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக, கூட்டணி அமைப்பதிலிருந்தே விமர்சனங்களுக்குள்ளான தே.மு.தி.க., நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்வியிருந்து இதுவரை மீளவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சியினர் எந்த அளவுக்கு சாதிக்கிறார்கள், 2021ல் இக்கட்சியின் வெற்றி வாய்ப்புகள் ஆகியவை இக்கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது தே.மு.தி.க.

பட மூலாதாரம், Twitter

இந்த ஆண்டும் தமிழக அரசியல் களத்தை உலுக்கிய பல பிரச்சனைகள் இருந்தன. புதிய கல்விக் கொள்கை, பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவை தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டவை என்றாலும் தமிழக அரசியல் களத்திலும் இந்தப் பிரச்சனைகள் தீவிரமாக ஒலித்தன. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மூன்று விவகாரங்களிலும் எதிர் நிலையிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு நிலையிலும் இந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டன.

2019ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையிலும் இந்த விவகாரங்கள், இன்னும் தீவிரமான, நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளாகவே நீடிக்கின்றன.

இவை தவிர, ஆளும்கட்சி தொடர்புடைய இரு விவகாரங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக எதிரொலித்தன. முதலாவது விவகாரம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்தது தொடர்பானது. இதில் ஆளும் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

இரண்டாவது விவகாரம், ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் இல்லத் திருமணத்திற்கு வரும் துணை முதலமைச்சரை வரவேற்று சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான சம்பவம். இந்த இரண்டு விவகாரங்களிலும் ஆளும் கட்சியினர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயினர்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

சுபஸ்ரீ

இதற்கு நடுவில், சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் திடீரென மாயமான விவகாரம் மார்ச் மாதத் துவக்கத்திலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முகிலன், அதற்குப் பிறகு திடீரெனக் காணாமல் போனார். முகலன் எதிர்த்து வந்த நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், சொந்தப் பிரச்சனையின் காரணமாகவே அவர் தலைமறைவானதாக சிலர் தெரிவித்தனர்.

முடிவில் ஜூலை 6ஆம் தேதியன்று திருப்பதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்த முகிலனை ஆந்திர காவல்துறையினர் கைதுசெய்தனர். இதற்குப் பிறகு பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றும் அவர் மீது தொடரப்பட்டது இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.

வருடத்தின் மையப்பகுதியில் சென்னையில் ஏற்பட்ட குடிநீர்ப் பஞ்சம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்த குடிநீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இந்தப் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஜோலார்ப்பேட்டையில் இருந்து ரயில் மூலமும் குடிநீர் கொண்டுவரப்பட்டது. கழிவுநீரைச் சுத்திகரித்து விநியோகிக்கும் முயற்சிகளும் துவங்கின. முடிவில், பருவமழை பெய்ய ஆரம்பித்ததும் இந்தச் சிக்கலில் இருந்து தற்காலிகமாக விடுபட்டிருக்கிறது சென்னை.

பட மூலாதாரம், Getty Images

வேறு சில விசித்திரமான காரணங்களுக்காகவும் உலக அளவில் தமிழகம் பேசப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அமிர்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் அத்திவரதர் வைபவம் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் அத்திவரதரை தரிசித்தனர். கூட்ட நெரிசலில் சில மரணங்களும் நிகழ்ந்தன.

அத்திவரதரை நிரந்தரமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மறுக்கப்பட்டு, உரிய காலத்திற்குப் பிறகு மீண்டும் குளத்திற்குள் வைக்கப்பட்டார் அத்திவரதர்.

அதேபோல, மே மாத இறுதியில் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்ற பொருள்படும் #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டாக் உலக அளவில் டிரெண்ட் ஆக ஆரம்பித்தது. மிக அபத்தமான காரணங்களுக்காக துவக்கத்தில் ட்ரெண்டாக ஆரம்பித்த இந்த ஹேஷ்டேக், அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

அதிகார மட்டத்தில் நடந்த வேறு சில சம்பவங்களும் இந்த வருடத்தை குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றின. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இட மாற்றத்தை ஏற்க மறுத்த தாஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மற்றொரு பக்கம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் ஓய்வுக் காலத்திற்குப் பிறகும் தமிழக காவல்துறையில் தொடர்ந்து பணிநீட்டிப்புப் பெற்றிருந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேல், தொடர்ந்து பணியாற்ற விரும்பினாலும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அந்தப் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.

சில மரணங்களும் இந்த ஆண்டில் தமிழகத்தை உலுக்கியெடுத்தன. திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுஜித் வில்சன் என்ற இரண்டு வயதுச் சிறுவன் தம் குடும்பத்தினருக்குச் சொந்தமான வயல்வெளியில் பயனற்று இருந்த ஆள்துளைக் கிணற்றில் விழுந்தான்.

இந்த விவகாரம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த நிலையில், சிறுவனை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த முயற்சிகள் குறித்து பாராட்டுகளும் கிடைத்தன; விமர்சனங்களும் எழுப்பப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆள்துளைக் கிணறு பிரச்சனைக்கு சுஜித் வில்சனின் மரணம் ஒரு முற்றுப் புள்ளியை வைக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல மாநிலத்தை உலுக்கிய மற்றொரு மரணம், சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் தற்கொலை. அவரது தற்கொலையின் பின்னணியில் ஐஐடியின் பேராசிரியர்களே இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில் இந்த மரணமும் நாட்டை பரபரப்புக்குள்ளாக்கியது.

அரசியல், சினிமா, போராட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி இந்த ஆண்டில் பெரும் கவனத்தை ஈர்த்த நிகழ்வு என்றால், கீழடியில் மாநில அரசால் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டதுதான்.

கீழடியில் மத்திய அரசு நடத்திவந்த ஆய்வுகள் தொடரப்படாத நிலையில், மாநில அரசு அந்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியின் காலம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்றன. அதே அளவு பழமையான பானை ஓடுகளில் கிடைத்த பிராமி எழுத்துகள், இந்தியாவில் எழுத்து வடிவம் தோன்றிய வரலாறு குறித்த விவாதத்தை எழுப்பின. மேலும் தமிழகத்தில் கிடைத்த முதல் நகர நாகரிகமாகவும் கீழடி இருக்கக்கூடும் என்பதற்கான முதல்கட்டத் தரவுகளும் இந்த ஆய்வில் கிடைக்கப்பெற்றன.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ராக்கிகடியில் கிடைத்த எலும்புக்கூட்டின் டிஎன்ஏ ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டிய உண்மைகளும் கீழடி ஆய்வு முடிவுகளும் சிந்துச் சமவெளி நாகரீகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த கருத்துகளை மேலும் வலுப்படுத்தின.

கடந்த பல ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து பூடகமாக கருத்துகளைத் தெரிவித்தார். 2021ல் அதிசயம் நிகழும் என்றும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: