தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்: ஒரு கிராமப்புற வாக்காளருக்கு நான்கு வாக்குகள் ஏன்?

தமிழக உள்ளாட்சி தேர்தல்

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR / GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

தமிழகத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

சென்னை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பான மாநகராட்சிக்குள் வருவதால் அங்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் எதுவும் இல்லை.

இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர் ஒவ்வொருவரும் நான்கு வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் எவையெவை?

எந்தெந்த பதவிகளுக்கான வேட்பாளர்களுக்கு இன்று மக்கள் வாக்களிப்பார்கள் என்று பார்க்கும் முன்னர் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் எவை என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது.

1. கிராம ஊராட்சி

2. ஊராட்சி ஒன்றியம்

3. மாவட்ட ஊராட்சி

சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் அனைத்திலும் சேர்ந்து தமிழகத்தில் 12, 618 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் புதிய மாவட்டங்களுடன் சேர்த்து 36 மாவட்ட ஊராட்சிகள் தமிழகத்தில் உள்ளன.

படக்குறிப்பு,

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது மாநில தேர்தல் ஆணையம்.

புதிய மாவட்டங்களுக்கு ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான வார்டுகள் மறுவரையரை செய்யப்படவில்லை என்பதால் அவற்றில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை.

அந்த மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் டிசம்பர் 6ஆம் தேதி உத்தரவிட்டது.

ஒரு வாக்காளருக்கு நான்கு வாக்குகள் ஏன்?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றில் இருக்கும் வாக்காளர்கள் அவற்றுக்கான தேர்தல் நடத்தப்படும்போது ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.

காரணம் பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதாவது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு உறுப்பினர்களை மட்டுமே வாக்காளர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்ய முடியும்.

தேர்வாகும் வார்டு உறுப்பினர்கள் அவர்களுக்குள் ஒருவரை பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர் அல்லது மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்வார்கள்.

2011இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலைப் போல இப்பதவிகளுக்கும் நேரடித் தேர்தல் முறை பின்பற்றப் பட்டிருந்தால், வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுடன், பேரூராட்சித் தலைவர் / நகராட்சித் தலைவர் / மாநகராட்சி மேயர் வேட்பாளர்களுக்கும் சேர்த்து நகர்ப்புற வாக்காளர்கள் இரண்டு வாக்குகள் அளிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், ஊரக உள்ளாட்சி அமைப்பான கிராம ஊராட்சியில் இருக்கும் வாக்காளர்கள் தங்கள் வார்டு உறுப்பினர் மட்டுமல்லாது கிராம ஊராட்சியின் தலைவரையும் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images

இவற்றுடன் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்கான வார்டு உறுப்பினர் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கலாம் என்பதால் ஓர் ஊரக வாக்காளர் நான்கு தனித்தனி வாக்குகளை செலுத்த முடியும்.

ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

சுமார் 10 முதல் 40 வரையிலான கிராம ஊராட்சிகளை ஓர் ஊராட்சி ஒன்றியம் கொண்டிருக்கும்.

அரிதாக சில ஊராட்சி ஒன்றியங்களில் 10க்கும் குறைவான அல்லது 40க்கும் மேலான கிராம ஊராட்சிகள் இருக்கும்.

ஓர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள வார்டுகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை ஒன்றாக இருக்காது.

மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படும் என்பதால் ஒரே ஊராட்சி ஒன்றிய வார்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைக் கொண்டிருக்கலாம். அல்லது அதிக மக்கள்தொகை கொண்ட ஒரே கிராம ஊராட்சி ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

சில ஊராட்சிகள் 500க்கும் குறைவான மக்கள்தொகையும் கொண்டுள்ளன என்றும், சில ஊராட்சிகளில் மக்கள்தொகை 25,000க்கும் மேலாக உள்ளது என்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துரையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கையைவிட அந்த மாவட்ட ஊராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். இதற்கும் காரணம் மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படுவதுதான்.

ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகியவற்றுக்கான தலைவர்களும் நகராட்சி தலைவர், மேயர் போன்று வார்டு உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதில் தேர்வாகும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றபின் மேற்கண்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படும். அப்போது எந்த அரசியல் கட்சி எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றியது என்பது தெரியவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: