தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 76.19 சதவீதம் வாக்குப் பதிவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 515 ஊராட்சி வார்டுகளில் 260 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல, மொத்தமுள்ள 315 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக 156 ஒன்றியங்களுக்கும் மொத்தமுள்ள 5090 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் முதல் கட்டமாக 2546 ஒன்றிய வார்டுகளுக்கும் மொத்தமுள்ள 9624 ஊராட்சிகளில் முதல் கட்டமாக 4700 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது.

தமிழ்நாட்டில் தற்போது 76776 ஊராட்சி வார்டுகள் இருக்கின்றன. இதில் முதல் கட்டமாக 37,830 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 24680 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 231890 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 18570 பேர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியோடு வாக்குப் பதிவு நிறைவுபெற்றாலும், ஐந்து மணிக்கு முன்பாக வாக்குச் சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சில இடங்களில் சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டாலும், பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் ஒரு கும்பல் இரு வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரகத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: