உத்தரப்பிரதேச வன்முறை: கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; தொழுகை செய்தபோது காப்பாற்றிய நபர்

அஜய்குமார் மற்றும் ஹஜ்ஜி காதிர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

அஜய்குமார் மற்றும் ஹஜ்ஜி காதிர்

உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறை கும்பலிடம் இருந்து, ஹஜ்ஜி காதிர் என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரைக் காப்பாற்றியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 20ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது அஜய் குமார் என்ற போலீஸ் அதிகாரியை வன்முறை கும்பல் ஒன்று சுற்றி வளைத்து மோசமாக தாக்கியது.

அப்போது காதிர், அஜய் குமாரை காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு, அவரை காவல் நிலையம் வரை கூட்டிச்சென்று விட்டு வந்துள்ளார்.

"ஹஜ்ஜி காதிர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். என் கைவிரல்கள் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எனக்கு தண்ணீர் கொடுத்து, மாற்றுத் துணியும் கொடுத்தார். நான் அங்கு பத்திரமாக இருப்பேன் என்று வாக்குறுதியும் அளித்தார். பின்னர் என்னை காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றார்," என்கிறார் பாதிக்கப்பட்ட அஜய் குமார்.

"என் வாழ்வில் தேவதை போல அவர் வந்தார். அவர் இல்லை என்றால் நான் அங்கேயே கொலை செய்யப்பட்டிருப்பேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த சம்பவம் குறித்து நினைவுகூர்ந்த காதிர், தான் தொழுகை செய்து கொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் அதிகாரியை கும்பல் சுற்றி வளைத்து அடிப்பதாக தனக்கு தகவல் வந்தது என்றார்.

"அந்த போலீஸ் அதிகாரிக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. நான் அவரை காப்பாற்றுவதாக அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அப்போது அவர் பெயர்கூட எனக்கு தெரியாது. நான் மனிதநேயத்தின் அடிப்படையில்தான் உதவினேன்," என்று ஹஜ்ஜி காதிர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: