NRC - CAA: உத்தர பிரதேசம் - "முஸ்லிமாக இருந்தால் இந்தியாவில் வாழக்கூடாதா?" #GroundReport

உத்தர பிரதேசம்: "முஸ்லிமாக இருந்தால் இந்தியாவில் வாழக்கூடாதா?"

பட மூலாதாரம், Getty Images

டெல்லியிலும், உத்தர பிரதேசத்தின் பல இடங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போலீஸ் போராடும் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் தற்போதைய களநிலவரத்தை அங்கிருந்து வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயே.

கான்பூர் , முசாஃபர்நகரில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு முதியவர்களும் தாக்கப்படுகின்றனர்.

மீரட்டில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை காவல்துறையினரே அடித்து நொறுக்கும் காணொளிகள் வெளியாகிறது.

முஸ்லிம் போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடும் காணொளிகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உத்தர பிரதேத்தில் போராட்டங்களில் பங்கேற்ற 16 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பொதுமக்கள்.

உயிரிழந்த மொஹமத் மோசினை போலவே அவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கால்நடைகளுக்குத் தீவனம் வாங்க சென்றபோது, நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து என் மகன் உயிரிழந்து விட்டார் என மொஹமத் மோசினின் தாய் கூறுகிறார். 28 வயதாகும் மொஹமத் மோசினுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இதுகுறித்த காணொளியை காண:

''எங்களுக்கு நீதி வேண்டும். காவல்துறையினர் எங்கள் மகனை கொன்றுவிட்டனர். இனி அவர் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்?'' என அவரது தாய் கேள்வி எழுப்புகிறார்.

படக்குறிப்பு,

மொஹமத் மோசினின் தாய்

காவல்துறையினர் தரப்பில் தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் போராட்டக்காரர்களில் சிலர் துப்பாக்கி வைத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நாள் இரவில் ஒரு வீடு முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்து அறைகளிலும் எந்த சாமான்களும் விட்டுவைக்கப்படவில்லை, எல்லாம் நொறுங்கிக் கிடந்தது.

''இந்த பெட்டியில் நகைகளும், இதில் பணமும் இருந்தது. அவை அனைத்தும் திருடப்பட்டுவிட்டன'' என ஹுமைரா பர்வீன் கூறுகிறார். போலீசார் பலர் அங்கு வந்ததாகவும், அவர்களில் சிலர் சீருடையில் இல்லை என்றும் ஹுமைரா கூறுகிறார். இந்த வீடு விரைவில் அவர்களுக்கு சொந்தமானதாகும் என்றும் நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் சொல்கிறார்கள் என்று ஹுமைரா மேலும் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

ஹுமைரா

"நான் முஸ்லிமாக இருந்தால் என்ன? நான் இந்தியாவில் வாழக்கூடாதா?" என்றும் கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார்.

இங்குள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் சூறையாடப்பட்ட வீடுகள் குறித்து மக்கள் புகார்களை முன்வைக்கின்றனர். தற்போது ஆளும் கட்சியின் இந்து தேசியவாத கொள்கைக்கு ஏற்றவாறு, காவல்துறையும் சட்டமும் செயல்படுவதாக இங்குள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அரசாங்கம் கூறுகிறது. மேலும் வன்முறைக்கு போராட்டக்காரர்கள்தான் காரணம் எனவும் அரசு குற்றம் சாட்டுகிறது.

போராட்டங்கள் குறித்து பாஜக எம்.பி சஞ்ஜிவ் கூறுகையில், ''சாலைகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் களம் இறங்கி கற்களை வீசி, பொது உடைமைகளுக்கு தீவைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். காவல்துறையினர் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க, அவர்கள் மக்களின் வீடுகளுக்குள் செல்ல வேண்டியிருந்தது. சில நேரத்தில், சண்டைகளின்போது சாமான்களும் உடைகின்றன'' என்று கூறுகிறார்.

படக்குறிப்பு,

சஞ்ஜிவ்

கடந்த சில வாரங்களாக அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளால், இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினரின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இந்த சட்டம் குறித்த அச்சங்களை போக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பே போராட்டங்களை இவர்கள் கையாண்ட விதம், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத ரீதியாக பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இம்மாநிலத்தின் பல பகுதிகளில் அச்சமும் கோபமும் நிலவுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: