இறக்குமதி பொம்மைகளால் குழந்தைகளுக்கு புற்றுநோயா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

toys படத்தின் காப்புரிமை Getty Images

"என் குழந்தைக்கு பொம்மை மிகவும் பிடிக்கும். எனவே நான் அதை வாங்குகிறேன். இதைத்தவிர வேறு எதிலும் அதிக கவனம் செலுத்தவில்லை. பொம்மைகளில் ஏதேனும் தீங்கு இருக்கும் என்று தோன்றவில்லை. அதில் ஜெல்லி இருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்பேன். பொம்மையுடன் விளையாடிய பிறகு கைகளை கழுவ வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன்"

டெல்லியில் வசிக்கும் ஷீபாவைப் போலவே, பல பெற்றோர்களும் பொம்மைகளால் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பதோடு பொம்மைகளின் தரம் மட்டுமே முக்கியம் என்று நினைத்து பொம்மைகளை வாங்குகிறார்கள். வேறு எதையும் சரிபார்க்க அவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.

ஆனால், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் 66.90 சதவீதம் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று இந்திய தர கவுன்சில் அறிக்கை கூறுகிறது.

Image caption டெல்லியில் வசிக்கும் ஷீபா

இந்திய தரக் கவுன்சில் (கியூ.சி.ஐ ) மேற்கொண்ட ஒரு ஆய்வில், இயந்திர, ரசாயன மற்றும் பிற சோதனைகளில் பல பொம்மைகள் தோல்வியடைந்துள்ளது கண்டறியப்பட்டது, ஆச்சரியமான ஆனால் அதிர்ச்சியான உண்மை.

கியூ.சி.ஐயின் கூற்றுப்படி, இந்த பொம்மைகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட ரசாயன கலப்பு மிகவும் அதிகமாக இருந்தது, இதன் காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது பற்றி அதிகம் தெரியாது. டெல்லியில் பொம்மைகளை விற்கும் கடைக்காரர் ஒருவர், சிறு குழந்தைகளின் சில பொம்மைகளில் நச்சு மற்றும் நச்சு அல்லாதவை எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார், ஆனால் எல்லா மக்களும் இதில் ஆர்வம் காட்டவில்லை.

பெரும்பாலான மக்கள் தாங்கள் விரும்பும் பொம்மையை வாங்குவதாகவும், விலை மற்றும் அதை எப்படி இயக்குவது போன்ற அடிப்படைத் தகவல்களைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை என்றும் அந்தக் கடைக்காரர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆய்வு எப்படி இருந்தது?

இந்த ஆய்வு குறித்து, கியூ.சி.ஐ பொதுச்செயலாளர் டாக்டர் ஆர்.பி.சிங் கூறுகையில், "இந்தியாவுக்கு வரும் பல பொம்மைகளை மாதிரி அடிப்படையில் (Sample base), அதாவது ஏதாவது ஒன்றை எடுத்து சோதனை செய்யும் முறையின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதை பார்த்தோம். அதற்கு குறிப்பிட்ட காலவரையறையும் இல்லை. இதனால் அந்த சோதனை அறிக்கையுடன் வரும் பொம்மைகளின் சரக்கு குறித்து ஆராயப்படவில்லை. இது குறித்து நிறைய விவாதம் நடைபெற்றது, பின்னர் சந்தையில் இருக்கும் பொம்மைகளை ஆய்வு செய்ய கியூ.சி.ஐ-யிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கியூ.சி.ஐ டெல்லி மற்றும் என்.சி.ஆரிலிருந்து பொம்மைகள் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பல்வேறு கடைகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட இந்த பொம்மைகள், என்.ஏ.பி.எல் (சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டன. 121 வகையான வெவ்வேறு வகையான பொம்மைகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Image caption டாக்டர் ஆர்.பி.சிங், பொதுச் செயலாளர், கியூ.சி.ஐ

தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மைகளின் வகை:

 • பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொம்மைகள்
 • மென்மையான பொம்மைகள் / உள்ளே பொருட்கள் அடைக்கப்பட்ட பொம்மைகள்
 • மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள்
 • உலோகத்தால் செய்யப்பட்ட பொம்மைகள்
 • மின்சார பொம்மைகள்
 • குழந்தைகள் உள்ளே செல்லக்கூடிய பொம்மைகள். உதாரணமாக பொம்மை கூடாரம்
 • அணிகலன்கள்

பொம்மைகளில் அதிக அளவு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதை சோதனை முடிவுகள் கண்டறிந்தன. பல பொம்மைகள் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யவில்லை. குழந்தைகளுக்கு அவற்றால் காயம் ஏற்படலாம். அதுமட்டுமல்ல, தோல் தொடர்பான நோய்களையும் இந்த பொம்மைகள் ஏற்படுத்தக்கூடும்.

படத்தின் காப்புரிமை Getty Images

முடிவு என்ன?

 • மாதிரி இயந்திர சோதனைகளில் 41.3 சதவீதம் தோல்வியடைகின்றன
 • மாதிரிச் சோதனையில் 3.3 சதவீதம் ரசாயன சோதனையில் தோற்றுப்போயின
 • சிறப்பு இயந்திர மற்றும் பலைட் சோதனைகளில் 12.4 சதவிகித பொம்மைகள் தோல்வியடைந்தன
 • எரித்து செய்யப்படும் சோதனையில் 4 7.4 சதவீத பொம்மைகள் தோல்வியடைந்தன
 • சிறப்பு இயந்திர மற்றும் எரிப்புச் சோதனையில் 2.5 சதவிகித பொம்மைகள் தோல்வியடைந்தன.

என்ன பாதிப்பு ஏற்படும்?

பொம்மைகளில் இயந்திர மற்றும் ரசாயன பரிசோதனையையும் கியூ.சி.ஐ மேற்கொண்டது, அதைத் தொடர்ந்து வண்ணப்பூச்சுகள், ஈயம் மற்றும் கனரக உலோக சோதனைகளையும் மேற்கொண்டது. இந்த விசாரணையில் 33 சதவீத பொம்மைகள் மட்டுமே சரியானவை என்று தெரியவந்தது.

நச்சு பொம்மைகளால் ஏற்படக்கூடிய சேதம் குறித்து டாக்டர் ஆர்.பி. சிங் கூறுகையில், "இயந்திர விசாரணையில் நிறைய பொம்மைகள் தோல்வியடைந்துள்ளன. இயந்திர சோதனை என்றால், உலோக பொம்மையில் குழந்தை விளையாடும்போது, அதற்கு ரசாயன பாதிப்பு ஏற்படக்கூடாது, கீறல் ஏற்படக்கூடாது. வாயில் வைத்தால் தொண்டையில் சிக்கிக்கொள்ளக்கூடாது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன.

"ரசாயனச் சோதனையில், எந்த வகையான ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது, அவற்றின் அளவு என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்." உதாரணமாக, மென்மையான பொம்மைகளில் இருக்கும் தேலட் (Thalate) என்னும் ரசாயனம் புற்றுநோயையும் ஏற்படுத்தும். அதிலிருந்து வரும் இழைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படக்கூடாது. பொம்மைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் தோல் நோய்களை ஏற்படுத்தும். வாயில் தொற்று ஏற்படலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இவற்றைத் தவிர, ஈயம், பாதரசம் மற்றும் ஆர்செனிக் போன்ற கனரக உலோகங்கள் பொம்மையில் இருக்கக்கூடாது. குழந்தைகளின் கூடார வீடுகள், பொம்மைக்கான அணிகலன்கள் விரைவில் தீப்பிடிக்கக்கூடியவை என்று கண்டறியப்பட்டது.''

பொம்மைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய அளவும் சர்வதேச மற்றும் இந்திய தரத்தின்படி நிர்ணயிக்கப்பட்டன. அளவு அதிகமாக இருந்தால் அவை குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

டாக்டர் ஆர்.பி.சிங்கின் கருத்துப்படி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) ஒரு அறிவிப்பில் திருத்தம் ஏற்படுத்தியது. அதன் பிறகு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சரக்குகளும் இந்திய துறைமுகங்களுக்கு வந்த பிறகு, அவற்றில் இருந்து மாதிரி பொம்மைகள் எடுத்துச் செல்லப்பட்டு, எம்.ஏ.பி.எல் ஆய்வகத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அங்கு மேற்கொள்ளப்படும் சோதனையில் வெற்றிபெற்றால் மட்டுமே, அந்த பொம்மைகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படும்.

இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து வந்தவை. இதைத் தவிர, இலங்கை, மலேசியா, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு பொம்மைகள் வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: