பிரியங்கா காந்தி: “உத்தர பிரதேச காவலர்கள் என் கழுத்தைப் பிடித்து திருகினர்” - போலீஸ் மறுப்பு

பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் குடும்பத்தை சந்திக்க அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது இவ்வாறு நடந்ததாகக் கூறினார் பிரியங்கா காந்தி.

76 வயதாகும் ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரி இந்த வாரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரியங்கா சென்றிருக்கிறார். ஆனால், அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காரிலிருந்து இறங்கி அவர் நடக்க ஆரம்பித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.

பிரியங்கா காந்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளிக்கு மேலே அவர், "உத்திர பிரதேச மாநில காவல் துறையினர் என்ன செய்கிறார்கள்? இப்போது நாங்கள் எங்கேயும் சென்று வருவதுகூட தடை செய்யப்படுகிறது. நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சமூக சேவகர் தாராபுரியின் வீட்டுக்குச் சென்றேன். உத்திர பிரதேச மாநில காவல்துறையினர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியதற்காக அவரை கைது செய்தனர். இப்போது ஒரு பெண் காவல்துறை அதிகாரி என் கழுத்தைப் பிடிக்கிறார். ஆனால் என்னுடைய லட்சியம் திடமானது. காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான அனைத்து குடிமக்களுடனும் நான் நிற்கிறேன். " எனப் பதிவிட்டுள்ளார்.

பின்னர் அதிகாரி தாராபுரியின் வீட்டுக்குச் செல்வதற்காக இருசக்கர மோட்டார் வாகனத்தின் பின்னே அமர்ந்து சென்றார் பிரியங்கா.

மறுக்கும் காவலர்

இதனை அந்த காவலர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் காவலர் மேலதிகாரிகளுக்கு கொடுத்துள்ள விளக்கக் கடிதத்தில், பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

"காங்கிரஸார் அனுமதி வாங்கிய பாதையில் செல்லாமல், வேறு பாதையில் சென்றனர். அதனால் அவர்களை தடுக்க வேண்டியதாகிவிட்டது." என்று விளக்கம் அளித்துள்ளார்.

போலீஸ் அறிக்கை

பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டை தொடர்ந்து, லக்னோ போலீஸார் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோ வருவதாக தகவல் கிடைத்து. அதிகாரி அர்சனா சிங் அங்கு பணியில் இருந்தார், அப்போது பிரியங்கா காந்தி, தான் அனுமதி வாங்கிய பாதையில் செல்லாமல், வேறு பாதையில் சென்றதாக எனக்கு கடிதம் அளித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு கருதி, அவரது கான்வாய் நிறுத்தப்பட்டு, எந்த வழியாக செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ஆனால், அவரது கட்சிக்காரர்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை. பிரியங்காவின் கழுத்தை நெருக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது" என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

"பிரியங்கா காந்தியிடம் பெண் காவலர்கள் முறையற்ற வகையில் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. ஒருவர் பிரியங்காவின் கழுத்தை பிடிக்க, மற்றொருவர் அவரை கீழே தள்ளிவிட்டார். அதிர் பிரியங்கா கீழே விழுந்துவிட்டார். ஆனால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரியின் குடும்பத்தை பார்க்க, அவர் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். நாள் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் செய்தது சரி. துயரத்தில் இருப்பவர்களுடன் இருப்பதில் எந்த தவறும் இல்லை" என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா கூறியுள்ளார்.

உ.பி காவல்துறையின் மீது கோபத்தில் உள்ள காங்கிரஸ்

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து இந்திய மகிலா காங்கிரஸின் தலைவர் சுஷ்மிதா தேவ், உத்தரபிரதேச போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சுஷ்மிதா, "உத்தர பிரதேச காவல்துறை தாக்கியதில் பிரியங்கா காந்திக்கு காயம் ஏற்பட்டது. நான் முதல்வர் யோகியிடம் கேட்கிறேன், மாநிலத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 12 பேர் தோட்டக்களால், அதாவது துப்பாக்கிச்சூட்டில் உயிரிதுந்தது எப்படி? பிரியங்கா காந்தியை தாக்கியவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

உத்தரபிரதேசத்தின் அமைதியை குலைக்கும் விதமாக பிரியங்கா என்றும் எதும் செய்ததில்லை. போராட்டக்காரர்களை தோட்டாக்கள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று யோகி அரசு நினைக்கிறது. ஆனால், அதை அவர்களால் செய்ய முடியாது. உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவர்களது எல்லைகளை தாண்டிவிட்டனர்" என்றார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: