தமிழ் தொல்லியல், கல்வெட்டுகள் மீது ஆர்வமா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான்

தமிழ் கல்வெட்டுகள் மீது ஆர்வமா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "தமிழ் கல்வெட்டுகளை படிக்க விருப்பமா?"

இந்தியாவில் கண்டெடுக்கப்படும் தமிழ் கல்வெட்டுகளைப் படிக்கத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருவதாக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பாக முதல் மொழி எனும் தமிழ் வளர்ச்சி அமைப்பு சனிக்கிழமை சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட த.உதயசந்திரன் பேசியது:

தமிழுக்கான அமைப்பு தற்போது பொறியியல் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்க் கல்வி பயின்றவர்களுக்கோ தமிழாசிரியர்களுக்கோ மட்டும் தமிழ் சொந்தமானது அல்ல. தமிழ் அனைவருக்கும் பொதுவானது. இந்த அமைப்பு செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல்களுள் ஒன்று கலைச்சொற்களை உருவாக்குதல்.

எளிமையான கலைச்சொல் தேவை: கலைச் சொல் உருவாக்கத்தில் புலவர்கள் புலமைக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறான கலைச்சொற்கள் காலம் கடந்து நிற்கும். உதாரணமாக பை சைக்கிள் என்ற வார்த்தைக்கு புலவர்கள் வழங்கிய சொல் ஈருருளி. மிதிவண்டி என்ற சொல்லைக் கொடுத்தவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் காலம் அதைத் தான் அங்கீகரித்தது. அதே போல் காபிக்குக் கொடுக்கப்பட்ட குழம்பி என்ற சொல்லுக்குப் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. புலமைக்கு எடுத்துக்காட்டாக இச்சொல் இருந்தாலும் சமூகத்தில் எடுபடவில்லை. எனவே கலைச் சொல்லைப் பொருத்தவரை எளிமை வெற்றி பெறும்.

கல்வெட்டுகளை கற்கும் பணி தீவிரம்: எந்த விஷயத்தையும் தொழில்நுட்பத்தின் மூலமாக எடுத்துச் செல்லும்போது அதன் வீச்சு பல மடங்கு அதிகமாக இருக்கும். இதை முன்னெடுத்து தொல்லியல் துறை ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 52 சதவீத கல்வெட்டுகள் தமிழில் கிடைக்கின்றன. இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் சோகமான செய்தி என்னவென்றால் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் படிக்கப்படவில்லை. படித்து தற்கால தமிழில் அவை மாற்றி எழுதப்படவில்லை. தற்போது பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களில் இந்தக் கல்வெட்டுகளைப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு இதனை முற்றிலுமாக

படிக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். இதற்குத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருகிறோம். இதன் தொடர்ச்சியாகக் கல்வெட்டுகளை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து, அதிலுள்ள அனைத்து எழுத்துகளையும் தற்கால எழுத்துகளாக மாற்றம் செய்து வருகிறோம். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துகள் காலத்துக்கேற்றவாறு மாறுபட்டிருக்கும். மேலும் இவை மண்டலத்துக்கும் ஏற்பவும் மாறுபடும். இவை அனைத்தையும் அதில் பதிவேற்றம் செய்து கிட்டத்தட்ட 80 சதவீத எழுத்துகளைக் கண்டறிந்தால் பணி மிகவும் எளிமையாகிவிடும் என்றார்.

குழந்தைகளுக்குத் தமிழை வழங்க வேண்டும்: நிகழ்வில் முதல் மொழி அமைப்பைத் தொடக்கி வைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.முருகேசன் பேசியது:

குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே தமிழ் மீது ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான பெற்றோர் ஆங்கிலத்தில் குழந்தைகள் பேச வேண்டும் என விரும்புகின்றனர். இதில் தவறில்லை. ஆனால் அதற்கிணையாக தமிழையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வாரம் ஒரு முறை தமிழை அவரவர் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து அதனைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.

இந்து தமிழ்: 'பொருளாதார மந்தநிலைக்கு பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியே காரணம்'

படத்தின் காப்புரிமை Getty Images

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய பொருளா தார நடவடிக்கைகள் தற்போதைய சூழலில் தேவைதான் என்றாலும், உரியத் திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்று நிதி ஆயோக் உறுப்பினர் ராம்கோபால் அகர்வாலா தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டு இருக்கும் மந்தநிலைக்குப் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். திவால் நடவடிக்கைச் சட்டமும் முறையான திட்டமிடல் இன்றி கொண்டு வரப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கருப்புப் பணப் புழக்கம் பொருளாதாரத்தைப் பாதித்து வந்தது உண்மைதான் என்றாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை உரியத் திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இவையனைத்தும் தன் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். தற்போது இந்தியா பொருளாதார ரீதியாகக் கடினமான கால கட்டத்தில் உள்ளது. ஆனால் அது தீவிர நெருக்கடி அல்ல.

2025-க்குள் 5 டிரில்லியன் டாலர் என்பது அடையக்கூடிய இலக்குதான். ஆனால் அதற்கு ஏற்ப நடுத்தர வர்க்கத்தினரின் வரு வாயை அதிகரிக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8% வளர்ச்சி மிக அவசியம் என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ் திசை

தினத்தந்தி: "நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது"

படத்தின் காப்புரிமை Facebook

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்திவந்தார். அங்கு 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை இடித்து தள்ளினர். உரிய சட்டப்படியும், போலீசுக்கும், கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆசிரமத்தை இடித்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: `அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்'

படத்தின் காப்புரிமை Getty Images

அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நீதிமன்றங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடத்தில் உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய நீதித்துறை தரவு ஆவணங்களின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 607 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதில் 22 சதவீதம், அதாவது 91,021 வழக்குகள் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் ஆகும்.

அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நீதிமன்றங்களில் முதலில் உள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்