கோலம் வரைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பெண்கள்

கோலம் வரைந்து போராட்டம் படத்தின் காப்புரிமை Instragram/Gunavathy

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கலந்துகொண்ட ஏழு பேர் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

காயத்ரி, ஆர்த்தி, கல்யாணி, பிரகதி, மற்றும் மதன் என கோலம் வரைந்த 5 பேருடன், அவர்களுக்கு ஆதரவாக சென்ற இரண்டு வழக்கறிஞர்களும் தடுத்து வைக்கப்பட்டனர். J5 சாஸ்த்திரி நகர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இந்த 7 பேரும் தடுத்து வைக்கப்பட்டு, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

கோலத்தில் ''NO CAA , NO NRC'' என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே சென்னை சேப்பாக்கதில், இசை, கலை நிகழ்ச்சி என போலீசாரின் கெடுபிடியுடன் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, எம்.பி-க்கள் கனிமொழி, தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சூழலியல் போராளிகள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் நேற்று, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, 650 அடி நீள தேசிய கொடி ஏந்தி முஸ்லிம்கள் பேரணி நடத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னை ஆலந்தூர் பகுதியில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Instragram/Gunavathy

கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தியவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் "குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போரட்டம் நடத்துபவர்களை தடுக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறான சிறிய குழுக்கள் பெரிதாக மாறலாம், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும். அதனால் ஆரம்ப கட்டத்திலேயே இவர்களை தடுக்க வேண்டும்" என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: