கேசினோ விவகாரம்: கிரண்பேடி - நாராயணசாமி இடையே மீண்டும் வெடித்த மோதல் - நடந்தது என்ன?

புதுச்சேரியில் ஆளுநருக்கும்-முதல்வருக்கும் முற்றும் உச்ச கட்ட மோதல் - அடுத்து நடக்கப்போவது என்ன? படத்தின் காப்புரிமை CM_PUDUCHERRY

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல், அவருக்கும் , முதல்வர் நாராயணசாமிக்கும் தொடங்கிய அதிகார மோதல் இன்று வரை நீடிக்கின்றது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

கிரண்பேடியை பேய் என நாராயணசாமி விமர்சித்ததும், தர்ணாவில் ஈடுபட்ட முதல்வரை ட்விட்டரில் காகம் படத்தோடு ஒப்பிட்டு கிரண்பேடி பகிர்ந்ததும் விமர்சனங்கள் கடுமையானது.

ஆளுநர் - முதல்வர் மோதல்களுக்கு இடையே அமைச்சர்களுள் ஒருவர் ஆளுநரை சந்தித்து, தான் சந்தித்தது முதல்வருக்கு தெரிய வேண்டாம் என்று கூறியதாக சில தகவல்கள் தெரிவித்தன.

கடந்த இடைத்தேர்தலில் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து, பிறகு அவரை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தது போன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சமீபத்தில், புதுச்சேரிக்கு வருகை தந்த குடியரசுத்தலைவரிடம் மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக கூறி அவரை திரும்பப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் நாராயணசாமி மனு அளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்தார். அதில் மாநில வளர்ச்சி என்ற பெயரில் கேசினோ (சூதாட்டம்), லாட்டரி விற்பனை, மதுபானக் கடைகள் திறப்பது என்பதுதான் வளர்ச்சியா? என்றும் புதுச்சேரி மக்கள் இதில் எதையும் விரும்பவில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நடந்துவரும் கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில், " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து,15வது நிதிக் குழுவில் புதுச்சேரியை சேர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும் அதனை தொடர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரைகளை மீறி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு போட்டி அரசை ஆளுநர் கிரண்பேடி செய்கிறார். அவரது செயல் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது, ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. ஆனால், தன்னிச்சையாக செயல்படுகிறார், எனவே கவர்னர் கிரண்பேடி உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவரிடம் வலியுறுத்தி உள்ளேன், " என தெரிவித்தார்.

குடியரசு தலைவரிடம் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அளித்துள்ள மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கிரண்பேடி, "கேசினோ(சூதாட்டம்), மதுபான கடைகளை திறப்பது, லாட்டரி விற்பனையை தொடங்குவது தான் புதுச்சேரியின் வளர்ச்சியா? இதுதான் மக்கள் நலன் என்று அழைக்கப்படுகின்றதா?

இதுகுறித்து முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும், புதுச்சேரி மக்கள் இது போன்ற வணிகம் எதையும் விரும்பவில்லை. கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணலாம். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தின் கீழ் இது நடைமுறையில் இருக்கிறது," என்றார்.

"கொள்கை ரீதியான விஷயங்களில் அமைச்சரவைக்கும், நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது மத்திய அரசு தலையிட்டு கொள்கையை முடிவு செய்வதில் தீர்வு காண்கிறது. இதை எவ்வாறு ஜனநாயக விரோதம் என்று சொல்லமுடியும்? புதுச்சேரியின் சமூக நலன், ஆன்மீக உணர்வு என்னுள் இருக்கிறது."என்பதை நான் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டுமா? பந்த் மற்றும் போராட்டம் பொருளாதாரத்தை பாதிக்கும் செயல், புதுச்சேரி சுற்றுலா நல்ல நிலையில் உள்ளது. அதை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டு கொள்கிறேன்," என கிரண்பேடி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிரண்பேடி

இதற்கிடையில் ஆளுநர் கிரண்பேடியின் கருத்திற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என மக்களுக்கு தெரியும். முட்டுக்கட்டை போட்டாலும் திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். பாஜக ஆளும் கோவாவில் கேசினோக்களை மூட ஆளுநர் கூற வேண்டியது தானே? புதுச்சேரியில் கேசினோ வரவேண்டும் என்று சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது."

"புதுச்சேரியின் வருமானத்தை பெருக்க கிரண்பேடி என்ன உதவி செய்தார்? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட, பட்ஜெட்டில் நிதி ஒதிக்கினாலும் நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் தான் ஜனாதிபதி ஆளுநர் மாளிகையில் தங்கி இருக்கும்போதே அவரை திரும்ப பெற மனுகொடுத்தோம். புதுச்சேரி சுற்றுலா மாநிலம், சுற்றுலா வளர்ச்சிக்கு எது தேவையோ அதை செய்து வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் விதிமுறைகளுடன் கேசினோ கொண்டுவரப்படும்," என முதல்வர் தெரிவித்தார்.

முன்னதாக தனது சமூக பக்கத்தில் கேசினோ(சூதாட்டம்) குறித்து ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டபோது, "புதுச்சேரி மக்கள் இதுபோன்ற கொள்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சூதாட்டத்தை கொண்டுவருவதை புதுச்சேரி மக்கள் விரும்பவில்லை. இதன் மூலம் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை மக்கள் இழந்துவிடுவார்கள். தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

ஒருவேளை கேசினோ (சூதாட்டம்), லாட்டரி , மதுபான உற்பத்தி ஆகியவை திறந்த சந்தையில் இருக்குமே என்றால், கற்பனை செய்து பாருங்கள் மாணவர்கள் அனைவரும் சூதாட்டம் மற்றும் மது பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள். இது புதுச்சேரி பிராந்தியம் முழுவதிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் பாதிக்கும்.

மேலும் தேசிய அளவில் சமூகம் மற்றும் ஆன்மிகத்தில் புதுச்சேரிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் சூதாட்ட ஓநாய்களிடம் இருந்து புதுச்சேரி மக்கள் விலகியிருக்க வேண்டும். மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் வளர்ச்சி என்ற பெயரில் எந்த நேரத்திலும் இதுபோன்ற ஓநாய்கள் உள்ளே நுழையக்கூடும். விழிப்புணர்வு என்பது சமூக நலன் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் என்பதாகும்," என்கிறார் கிரண்பேடி.

படத்தின் காப்புரிமை Getty Images

பின்னர், நேற்று (28.12.2019) நடந்த காங்கிரஸ் கட்சி துவக்க நாள் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதாகவும், அரசு அதிகாரிகளை மிரட்டும் செயலை கிரண்பேடி தொடர்ந்து செய்வதாகவும் குற்றசாட்டுக்களை முன்வைத்தார்.

"முதல்வர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுகின்றீர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி" என்றார்.

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மின்னஞ்சல் மூலமாக கடிதம் எழுதியுள்ளார், "ஆளுநரான என்னையும் அரசியலமைப்பு அலுவலகமாக உள்ள ஆளுநர் மாளிகையையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தரக்குறைவாகவும் பேசுகின்றீர். கடந்த சில தினங்களாக எல்லைமீறி கண்ணியத்தை இழந்து பேசுகின்றீர்."

"குற்றச்சாட்டுகளை கூறும் போது அதை ஏற்க மறுக்கவில்லை எனில் அது குற்றம் சாட்டுபவரைத்தான் சாரும் என்று புத்தர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். முதல்வர் அலுவலகம் என்ற கண்ணியத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். ஆளுநர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று நம்புகிறேன்."

"துணைநிலை ஆளுநர் அலுவலகம் முற்றிலும் புதுச்சேரிக்கும் அதன் மக்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகின்றது. தயவுசெய்து கருத்து வேறுபாடுகளை கண்ணியமான முறையில் கூற தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர விரும்புகிறேன்" என அக்கடிதத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: