வேலைவாய்ப்புக்காக திருப்பூர் வரும் காஷ்மீர் பெண்கள் - நரேந்திர மோதி

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

2019ன் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.

திருவள்ளுவர், திருப்பூர் வரும் காஷ்மீர் பெண்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

"2019-ஆம் ஆண்டு இன்னும் 3 நாட்களில் கடந்துவிடும். 2020-ஐ நாம் புது ஆண்டாக மட்டும் வரவேற்கவில்லை, மற்றொரு தசாப்தத்தின் தொடக்கமாகவும் வரவேற்கிறோம். 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்கு வகிப்பவர்கள் 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்" என்று கூறினார்.

வேறுபாட்டை பார்க்காத இளம்தலைமுறையினர்

"இன்றைய இளைஞர்கள், இந்த நூற்றாண்டின் மிக முக்கிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இந்த தலைமுறையினர் இந்திய அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த அமைப்பின் உத்தரவுகளை கடைப்பிடிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவ்வாறு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி கொள்ளவில்லை எனில் அரசை தைரியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்கின்றனர்" என்று மேலும் நரேந்திர மோதி கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

”இன்றைய இளைஞர்கள் அராஜகம், நிலையற்றதன்மை, ஒழுக்கமின்மை ஆகியவற்றை வெறுக்கிறார்கள். ஜாதி, மத, பாலின வேறுபாடுகளை அவர்கள் பார்ப்பதில்லை. இந்த புது சிந்தனை நாட்டை மற்றொரு உச்சத்திற்கு கொண்டு செல்லும்” எனவும் கூறினார்.

5 தசாப்தங்களாக வசீகரிக்கும் சுற்றுலா தலம்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை குறித்து பேசிய போது, கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம் கடந்த 5 தசாப்தங்களாக இந்தியாவின் வசீகர சுற்றுலா தலமாக இருந்து வருகிறது என்று நரேந்திர மோதி கூறினார். மேலும் குடிமக்களை இது போன்ற வரலாறு சிறப்புமிக்க சுற்றுலா தலங்களுக்கு சென்று வர அவர் அறிவுறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மன் கி பாத் நிகழ்சியில் பிகாரில் நடந்த `சங்கல்ப் 95` என்ற மருத்துவ முகாம் குறித்து நரேந்திர மோதி கூறினார். பிகாரின் ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒரு சந்திப்பில் கலந்துகொண்டு செய்த முயற்சிதான் இந்த மருத்துவ முகாம். இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது போன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மோதி கேட்டுகொண்டார்.

தமிழகத்தில் பணிபுரியும் காஷ்மீர் பெண்கள்

நாட்டு மக்களின் வருமானத்தை பெருக்கவும், உள்நாட்டில் பொருளாதாரம் பெருகவும், மக்களை உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 2022 ல் 75வது சுதந்திரதினத்தை இந்தியா கொண்டாடும் வரையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க மக்களுக்கு அறிவுறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த உள்நாட்டு உற்பத்தி என்பதை நோக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஹிமாயத் என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற கார்கில் பகுதி கிராமத்தில் வாழ்ந்த பர்வீன் பாத்திமா இன்று திருப்பூரில் இருக்கும் ஒரு ஆடை தொழிற்சாலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராக இருக்கிறார். அவரைப் போல லே லடாக்கில் இருக்கும் பல பெண்கள் ஹிமாயத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அதே ஆடை தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஹிமாயத் என்னும் திட்டத்தின் மூலம் 77 வெவ்வேறு விதமான தொழில்களில் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 18000 இளைஞர்கள் பலனடைந்தனர் எனக் கூறினார்.

சரித்திரமும் வானியலும்

இந்தியாவின் வானியல் குறித்து பேசும்போது, "இந்தியாவின் சரித்திரத்திற்கும் வானியலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் ஜந்தர் மந்தர் என்ற பெயரில் பல இடங்கள் பல இடங்களில் உள்ளன. இது வானியல் தொடர்பான பல தகவல்களைத் தருகிறது. ஆரியபட்டா தன்னுடைய புத்தகத்தில் சூரிய கிரகணத்தை தத்துவ ரீதியிலாகவும் கணக்கியல் ரீதியாகவும் விளக்கியுள்ளார். இந்தியா வானியல் துறையில் முன்னணியில் இருக்கிறது" எனவும் கூறினார்.

மேலும் அவர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 60 ஆண்டுகளின் சாதனையை முறியடித்து திறம்பட செயல்பட்டுள்ளனர் என அறிவித்தார்.

பயிர்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகை

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் ஜனவரியில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்து, "சூரியனின் நகர்வை வைத்து ஜனவரியில் இந்தியா முழுவதும் நிறைய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைகள் அனைத்தும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை வைத்து கொண்டாடப்படுகிறது. இது நாட்டின் ஒற்றுமையில் வேற்றுமை என்பதை காட்டுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் திருவள்ளுவருக்கு அர்பணிப்பதாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைகள் அனைத்தும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவே கொண்டாடப்படுகிறது" என்றார் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: