பினராயி விஜயனிடம் மன்னிப்பு கேட்ட ஜாமியா மில்லியா மாணவி ஆயிஷா - விரிவான தகவல்கள்

பினராயி விஜயனிடம் மன்னிப்பு கேட்ட ஜாமியா மில்லிய மாணவி ஆயிஷா

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பினராயிவிஜயனிடம் மன்னிப்பு கேட்ட ஆயிஷா"

கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஓர் ஆண் போராட்டக்காரரை இரண்டு மாணவிகள் தடி அடியிலிருந்து காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த காணொளியில் இருந்த ஜாமியா மில்லியா மாணவி ஆயிஷா ரீனா கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் மன்னிப்பு கோரவேண்டும் எனக் கேரளா இடதுசாரி அமைப்பினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிஷா கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காணொளி ஒன்றை வெளியிட்டார். அதே காணொளியில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் பேசி இருந்தார்.

கேரளா முதல்வருக்கு எதிராக ஆயிஷா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, குரல் எழுப்பி, கேரளாவில் அதை அமல் படுத்த விடமாட்டேன் என்று கூறிய பினராயி விஜயனிடம் ஆயிஷா மன்னிப்பு கோரவேண்டும் எனக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் ஆயிஷா சனிக்கிழமை அன்று மன்னிப்பு கோரினார்.

அவர் மன்னிப்பு கோரியது, பல விவாதங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சிடம் பேசிய ஆயிஷா, ''இதுதான் சி.பி.எம் கட்சியினரின் இயல்பு. பெண்களின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை சி.பி.எம் கட்சியினர் நடத்துவார்கள், அதே நேரம் பெண்களின் குரல் வெளிப்படக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். எனக்குத் தெரிந்த வரை சி.பி.எம் உறுப்பினர்களில் சிலர், நான் மன்னிப்பு கோருவதை விரும்பவில்லை'' என்கிறார் ஆயிஷா ரீனா.

மேலும், ஒரு போராட்டத்தை வழிநடத்துபவராக, போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். தனிப்பட்ட முறையில் பினராயி விஜயனை தாக்கிப்பேச வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.

''இதன் பிறகும் போராட்டங்களில் கலந்து கொள்வதைப் பின்வாங்க மாட்டேன், இவ்வாறான எதிர்ப்புகள் பலவற்றை டெல்லியில் போராட்டம் நடத்தத் துவங்கியதிலிருந்து எதிர்கொண்டு வருகிறோம். எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் பாஜகவுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதில் எந்த மாற்றமும் இல்லை'', என்று மேலும் தெரிவித்தார்.

இந்து தமிழ்: தஞ்சாவூர் வங்கிகளிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தில் கள்ளநோட்டுகள்

படத்தின் காப்புரிமை Getty Images

தஞ்சாவூர், கும்பகோணம் வங்கிகளிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் 37 எண்ணிக் கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளிலிருந்தும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையிலிருந்தும் வாடிக்கையாளர்களால் செலுத்தப்பட்ட பணம், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பப் பட்டது.

அப்போது, அங்குள்ள அதிகாரிகள் இந்தப் பணத்தை வழக்கமான முறையில் ஆய்வு செய்தபோது, ரூ.500 நோட்டுகளில் 37 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் டி.எம்.சேனாதிபதி, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்மூலம் வங்கிகளில் அதிகளவில் பணம் செலுத்தியது யார்? அதிக முறை வந்து சென்ற வாடிக்கையாளர்கள் யார்? சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.5 மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட பணத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ரூ.500 நோட்டுகளில் 37 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

தினத்தந்தி: "65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்"

படத்தின் காப்புரிமை Facebook

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர் (வயது 70). இவர் சமையல் வேலை செய்தார். இவரிடம் கொச்சுஅனியன் (67) என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணய்யர் இறந்து விட்டதால் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளை (66) ராமபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இவரை கொச்சுஅனியன் அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். அப்போது இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் வகையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த முடிவை முதியோர் இல்லத்தில் உள்ள சூப்பிரண்டு வி.ஜி.ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். அவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதையொட்டி 2 பேரின் திருமணமும் முதியோர் இல்லத்தில் வைத்து நடந்தது. இந்த திருமண விழாவுக்கு மாநகராட்சி மேயர் அஜிதா விஜயன் தலைமை தாங்கினார்.

விழாவில் மந்திரி சுனில்குமார் கலந்து கொண்டு 2 பேருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தினமணி: 2020 - இல் இந்தியப் பொருளாதாரம் மீண்டெழக் கூடும்

மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வரும் 2020-ஆம் ஆண்டில் மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியத் தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் விக்ரம் கிா்லோஸ்கா் கூறியதாவது:

புத்தாண்டில் காலடி எடுத்து வைப்பதற்குத் தயாராகி வருகிறோம். 2020-இல் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கி இணைந்து மேற்கொண்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனிடையே, சர்வதேச அளவில் காணப்பட்ட வர்த்தக பதற்றம் தணிந்துள்ளதும் இந்தியப் பொருளாதார மந்தநிலை மீட்சிக்குக் கூடுதல் பலமாக இருக்கும்.

தயாரிப்பு மற்றும் சேவைத் துறை உற்பத்தியில் மேம்பாடு, விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, பயணிகள் கார் விற்பனையில் முன்னேற்றம் உள்ளிட்ட பல சாதகமான அறிகுறிகள் இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டில் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளன.

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு உள்படப் பல காலாண்டுகளாக தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிவைக் கண்டு வந்தபோதிலும், எதிர்வரும் காலாண்டுகளில் ஜிடிபியின் வளர்ச்சி உத்வேகம் பெறும் என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: