JioMart: அமேசானை வீழ்த்துமா ரிலையன்ஸின் புதிய நிறுவனம்? - சலுகைகள் என்னென்ன?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
அமேசானை வீழ்த்துமா ஜியோமார்ட்டின் அதிரடி சலுகைகள்?

பட மூலாதாரம், Getty Images/ JioMart

ஜியோ மூலமாக இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஒட்டுமொத்த போக்கையே புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்ததாக இணையதள வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.

ஜியோமார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் ஜெஃப் பெசோசின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜியோமார்ட் நிறுவனம் எப்படி செயல்படும், அதிரடி சலுகைகள் ஏதும் அறிவிக்கப்பட்டுள்ளதா, ஜியோமார்ட்டுக்கும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன, ஜியோமார்ட் அமேசானை தோற்கடிப்பது சாத்தியமா, உள்ளிட்ட பல்வேறு கோணங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

ஜியோமார்ட்டில் என்னென்ன கிடைக்கும்?

இந்தியாவின் மிகப் பெரிய பல்தொழில் குழுமமான ரிலையன்ஸ், ஜியோவுக்கு அடுத்து விடுக்கும் மிகப் பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது ஜியோமார்ட்.

இணையதள வர்த்தகத்தில் உலகளவில் மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் ஆகியவை இந்தியாவின் இணையதள வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோமார்ட்டில் இப்போதைக்கு கிட்டத்தட்ட 50,000 விதமான மளிகை சாமான்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய பகுதிகளில் சோதனை ரீதியில் தொடங்கியுள்ள ஜியோமார்ட்டின் சேவை விரைவில் நாடுமுழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

ஜியோமார்ட்டின் சலுகைகள் என்னென்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தொடங்கப்பட்டபோது, ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், இந்திய தொலைத்தொடர்பு துறையே ஆட்டம் கண்டதுடன், போட்டியை சமாளிப்பதற்காக மற்ற நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டன.

அந்த வகையில், தொடங்கப்பட்ட நான்கே ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ள ஜியோவின் 322 மில்லியன் வாடிக்கையாளர்களை மையாக கொண்டே இந்த ஜியோமார்ட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜியோமார்ட் நிறுவனத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு சுமார் 50,000 மளிகை சாமான்கள் விற்பனை செய்யப்படும் ஜியோமார்டில் எவ்வித குறைந்தபட்ச விற்பனை தொகையும் இல்லாமல், மளிகை சாமான்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும், அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் பொருட்களை திரும்ப அளித்தால் எவ்வித கேள்வியும் இன்றி அவை பெற்றுக்கொள்ளப்படும் என்றும், தங்களது இணையத்தில் வாங்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் அதிவேகத்தில் விநியோகம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிப்பதாகவும், முன்னெப்போதுமில்லாத வகையில் தங்களது சேவையில் பணத்தை சேமிக்க முடியும் என்றும் அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது வர்த்தக நிறுவனத்தின் செயலிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜியோமார்ட் கூறுகிறது.

கடந்த ஆண்டு நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டு பொது கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இணையதள வர்த்தகத்தில் ஈடுபட உள்ளது குறித்த யோசனையை முதன்முதலில் வெளியிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

"இணையதள வர்த்தகத்தில் 700 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தொழில் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் சில்லறை வர்த்தக தொழிலில் 90 சதவீத பங்கை கொண்டுள்ள ஒழுங்கமைக்கப்படாத சில்லறை சந்தையை முழுமையாக மாற்றுவதே எங்களது இந்த புதிய வர்த்தகத்தின் நோக்கம். மூன்று கோடி வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரங்களை உருவாக்கி, இந்தியாவின் வர்த்தக அமைப்பின் முதுகெலும்பாக உள்ளனர். தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய முடியாததால், ஆற்றல் மற்றும் சுய ஊக்கமுள்ள தொழில்முனைவோர் சமீபத்திய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று முகேஷ் அம்பானி கூறியிருந்தார்.

காலங்காலமாக வீதிகளில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப தங்களது வணிகத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பை தங்களது புதிய வர்த்தக முறை உருவாக்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக சோதனை முயற்சிகளில் வணிகர்களின் லாபம் பெருகியுள்ளதாகவும் முகேஷ் அம்பானி அப்போது மேலும் தெரிவித்திருந்தார்.

ஜியோமார்ட் எப்படி செயல்படும்?

ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுடன் கைகோர்ப்பதன் மூலம், அவர்களது கடைகளில் உள்ள பொருட்களை வாடிக்கையாளர்கள் தங்களது திறன்பேசிகளில் இருந்தே தேர்ந்தெடுத்து, அவற்றை இலவசமாக உடனுக்குடன் வீட்டில் இருந்தபடியே பெறுவதே ஜியோமார்ட் சேவையின் அடிப்படை.

உதாரணமாக, உங்களது வீட்டுக்கு அருகில் 10 மளிகை கடைகள் இருப்பதாகவும் அவை அனைத்தும் ஜியோமார்ட்டில் இணைந்து கொள்வதாகவும் வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் ஜியோமார்ட் செயலியை திறந்து பார்த்தால் இந்த 10 கடைகளும் அதிலுள்ள பொருட்களும் அதில் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களது தேவையான பொருட்களை தெரிவு செய்து இணையத்தில் பணம் செலுத்தியோ அல்லது விநியோகத்தின்போது பணம் செலுத்துவதாக குறிப்பிட்டோ அடுத்த ஒருசில மணிநேரங்களில் இலவசமாக அந்த பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெற முடியும்.

சுருங்கச்சொல்லப்போனால், ஸ்விகி நிறுவனம் உணவகங்களை தங்களது செயலில் உறுப்பினர்களாக இணைய செய்து, அதன் மூலம் வாடிக்கையாளர்கள் திறன்பேசி மூலம் உணவை தெரிவு செய்து வாங்குவதை போன்று ஜியோமார்ட்டில் மளிகை பொருட்களை வாங்க முடியும்.

அமேசானுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images

ஜியோமார்ட்டின் வருகையினால் அமேசான் நிறுவனம் பின்னுதள்ளப்படுமா என்ற கேள்விக்கு உடனடியாக பதில் கூற முடியாது. தற்போது வெளிவந்துள்ள தகவல்களை கொண்டு பார்க்கும்போது, ஜியோமார்ட் நிறுவனத்துக்கும் அமேசானின் பிரதான இணையதள வர்த்தகத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே கிடையாது எனலாம்.

ஏனெனில், இந்தியாவில் அமேசானின் பிரதான இணையதளத்தின் மூலம் மளிகை பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதில்லை. திறன்பேசிகள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள், ஆடைகள் போன்றவைகளே அமேசான் இந்தியா நிறுவனத்தால் விற்கப்படுகிறது.

ஆனால், அதே சமயத்தில் 'அமேசான் ப்ரைம் நவ்' என்ற தனிப்பட்ட செயலியின் மூலம் இந்தியாவின் நகர்புறப்பகுதிகளில் மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி திறன்பேசிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, அமேசான் பாண்ட்ரி, அமேசான் பிரெஷ் உள்ளிட்ட பெயர்களிலும் அமேசானால் சில சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட சேவைகளின் மூலம் வாங்கப்படும் பொருட்களை குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் முதல் சில நாட்களுக்குள்ளதாக விநியோகம் செய்யும் வசதியை அமேசான் அளித்து வருகிறது.

அதே போன்று, அமேசானின் மளிகை சாமான்கள் சேவையில் 600 ரூபாய்க்கு மேல் வாங்கினால்தான் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், ஜியோமார்ட் நிறுவனம் எவ்வித குறைந்தபட்ச தொகையும் இல்லாமல் இலவசமாக பொருட்களை விநியோகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

எனினும், ஜியோமார்ட் இந்தியா முழுவதும் சேவையை தொடங்குவதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கடந்து ஜியோமார்ட் சேவையை விரிவுப்படுத்தினாலும், அதன் மூலம் அமேசானின் மிகப் பெரிய வருவாய் மூலமாக விளங்கும் அதன் பிரதான இணைய வர்த்தக சேவைக்கு குறுகிய காலத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.

வெளிநாடுகளை சேர்ந்த இணையதள வர்த்தக நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் மூலம், அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது சொந்த தயாரிப்புகளை அல்லது துணை நிறுவனங்களின் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்படும் ஜியோமார்ட் நிறுவனத்துக்கு மேற்கண்ட அறிவிப்புகள் எவ்வித பிரச்சனை ஏற்படுத்தாது என்பதால், அந்நிறுவனத்துக்கு சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது.

100 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் அலைபேசியை பயன்படுத்தும் நிலையில், அவர்களில் வெறும் 0.15% பேர்தான் மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை இணையதளம் வாயிலாக பெறும் சேவையை பயன்படுத்தி வருகின்றன. தற்போது ஓராண்டுக்கு 870 மில்லியன் டாலர்கள் சந்தை கொண்ட இந்த துறை வருங்காலத்தில் மென்மேலும் வளரும் பட்சத்தில் அது அமேசான், ஜியோமார்ட் போன்ற நிறுவனங்களிடையே கடுமையான போட்டி உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: