தலித் பிராண்ட்கள் எழுச்சி: பொருளாதாரம் மூலம் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான ஓர் உத்தி

தலித் பிராண்ட்

தெற்கு மும்பையில் பணம் படைத்த மக்கள் செல்லும் பேஷன் கடை ஒன்றின் வெளியே, 32 வயதான சச்சின் பீம்சாக்கரே ஒரு மூலையில் நின்று கொண்டு தலித் விடுதலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

பேஷன் உலகம் மற்றும், "புறக்கணிக்கப்பட்ட மக்களை'' ஒன்று சேர்க்கும் வகையிலான முயற்சி அது. டிசம்பர் 5ஆம் தேதி மாலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரால் தயாரித்த 66 பைகள் நல்லபடியாக விற்பனையானதாக அவர் கூறுகிறார். 'சமர்' அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அவற்றைத் தயாரித்திருந்தனர்.

சிறப்பு வடிவமைப்பில் குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பைகளைத் தயாரிக்கும் திட்டத்தில், விலங்குகளின் தோலில் இருந்து பொருட்களை தயாரிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழுவினர் 10 பேரில் பீம்சாக்கரேவும் ஒருவர்.

சவ்யசாச்சி, ராகுல் மிஸ்ரா, கௌரவ் குப்தா போன்ற வடிவமைப்பாளர்களுடன் "கூட்டு முயற்சியாக'' இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபம், சமீபத்தில் தொடங்கப்பட்ட சமர் அறக்கட்டளைக்கு, சான்டா குரூஸில் வகோலாவில் வடிவமைப்பு ஸ்டூடியோ திறக்கும் செலவுக்குப் பயன்படுத்தப்படும்.

"சிறப்பு வடிவமைப்பில்'' காலணிகள் தயாரிக்க பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த அறக்கட்டளை பயிற்சி அளிக்கும். அவர்களை இந்த தொழில்முனைவோர் பட்டியலில் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். ரப்பர் பைகளை மறுசுழற்சி செய்து "சேரிகளில் தயாரிக்கப்பட்டது'' என்ற குறிப்பு வாசகத்துடன் இவை விற்கப்படும்.

"சமர்" என்ற வார்த்தையால் இழிவுபடுத்தப்படும் நிலையை மாற்றி, அதை பேஷன் பிராண்ட் பெயராக மாற்றி அந்த வார்த்தைக்கு மரியாதையை உருவாக்கித் தருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிட சமர் என்ற வார்த்தையை பயன்படுத்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

"சமர் என்றால் தோல், சதை, ரத்தம் என்று அர்த்தம். வாழும் உயிரினங்களில் இவையெல்லாம் இருக்கின்றன. நாங்கள் பார்க்கும் தொழிலின் அடிப்படையில் எங்களை ஏன் இழிவாகப் பார்க்க வேண்டும்,'' என்று பீம்சாக்கரே கேள்வி எழுப்பினார்.

பகுஜன் ஸ்டோர் தொடங்கி, ஜெய் பீம் பிராண்ட் வரையில், மறுசுழற்சி செய்த சிறப்பு வடிவமைப்பிலான பைகள் வரையில், தலித் அடையாளம் நாட்டில் தூக்கி நிறுத்தப்படுகிறது.

தலித்துகளால் தயாரிக்கப்பட்ட, தலித்துகளுடன் அடையாளப்படுத்தப்படும் பிராண்ட்களுக்கு சமூக ஆதரவு கிடைத்தால், பொருளாதார சுதந்திரம் கிடைக்கும். அதன் மூலம் அரசியலில் அதிக பிரதிநிதித்துவம் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் உருவாகி வரும் தலித் பிராண்ட்கள், அரசியல் மற்றும் பொருளாதாரத்தை இணைத்து, அதன் மூலம் கலாசார தொடர்புகளை உருவாக்கும் அணுகுமுறையாக உள்ளது. 'ஜெய் பீம்' அல்லது 'பகுஜன்' என்பது போன்று, சமுதாயத்தினருடன் தொடர்புடைய பெயர்கள் மற்றும் வார்த்தைகளைப் பயன்படுத்தி, இந்தியாவில் சாதிய நடைமுறையால் ஏற்படும் அவமதிப்புகளுக்கு சவால் விடுப்பதாக இது உள்ளது.

2014 தேர்தலுக்குப் பிறகு, இந்துத்துவ சக்திகளின் வெற்றியால், தங்களை தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் தலித்கள் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தலித் சார்ந்த வார்த்தைகளில் பிராண்ட்கள் உருவாக்குவது அரசியலை ஒருமுகப்படுத்தும் மற்றும் தலித் நடுத்தர மக்களின் எழுச்சியை உணர்த்தும் முயற்சியாக உள்ளது என்று அந்த சமுதாயத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

"தலித்துகளின் உரிமையை உறுதிப்படுத்தும் புதிய வடிவமாக இது உள்ளது. 2014 தேர்தலுக்குப் பிறகு, இந்துத்துவம் வெற்றி பெற்றிருப்பது, மறுபடியும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதாக உள்ளது, புதிய வகையில் தலித்துகள் தனிமைப்படுத்தப் படுகிறார்கள் என்ற அச்சம் உருவாகியுள்ளது. எனவே இந்த பிராண்ட் உருவாக்கம் தேவைப்படுகிறது.

"தலித்தாக இரு, தலித் பொருட்களை வாங்கு'' என்பது தற்கால தலித் விழிப்புணர்வின் மையக் கருத்தாக இருக்கப் போகிறது'' என்று தலித் எழுத்தாளரும், செயல்பாட்டாளருமான சந்திரபன் பிரசாத் கூறுகிறார்.

Image caption ஆலியா மற்றும் அவந்திகாவின் பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை ஆகின்றன.

சமர் ஸ்டூடியோ மற்றும் சமர் அறக்கட்டளையின் நிறுவனரான சுதீர் ராஜ்பார், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். பார் சமூகத்தைச் சேர்ந்தவர். தோலுக்குப் பதிலாக ரப்பர் பயன்படுத்துவதன் மூலம், நீடித்த செயல்பாட்டை மேம்படுத்தி, பேஷன் உலகில் நுழைவதை இவர் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.

'தீண்டத்தகாதவர்கள்' என்று கூறி அவமதிக்கப்பட்டவர்களின் பதிலடி நடவடிக்கை போன்றதுதான் இது, ஆடம்பர பேஷன் உலகில் அவர்கள் கைகளால் தயாரித்த சிறப்பு வடிவமைப்பிலான காலணிகள் இடம் பெறுவது அந்த சூழ்நிலையை உருவாக்கும் என்று அவர் கருதுகிறார். சாதி அடையாளங்களால் பிளவு பட்டிருக்கும் ஒரு நாட்டில் இது உயர் லட்சியமான நோக்கமாக இருக்கிறது.

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மற்றும் இதர துறைகளில் 30 லட்சம் தலித்துகள் வேலை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ.3,50,000 கோடி வருவாயை அளிப்பதாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய மக்கள் தொகையில் 17 சதவீதம் அளவுக்கு உள்ளனர்.

இந்தியாவில் சொத்துரிமை மற்றும் சமத்துவமின்மை

சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம் (எஸ்.பி.பி.யு.), ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தலித்துகள் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து 2015 முதல் 2017 வரையில் சமூக - மத அடிப்படையிலான ஆய்வு நடத்தின. தாழ்த்தப்பட்டவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள மக்களைக் காட்டிலும், இந்து உயர் வகுப்பினர் (எச்.எச்.சி.) எனப்படுபவர்கள் நான்கு மடங்கு அதிகமான சொத்துகள் வைத்திருப்பது அந்த ஆய்வில் தெரிய வந்தது.

நாட்டில் மொத்த சொத்துகளில் 41 சதவீதம் இந்த இந்து உயர் சாதியினர் என குறிப்பிடப்படுபவர்களிடம் உள்ளது. மக்கள் தொகையில் அவர்கள் 22.28 சதவீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகை 27 சதவீதமாக உள்ளது. ஆனால் அந்த மக்கள் 11.3 சதவீத அளவு சொத்துகளுக்கு மட்டுமே உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.

சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்பின்படி சட்டவிரோத செயல். ஆனால் இந்த சமுதாயத்தினருக்கு எதிராக, பாரபட்சமான நடவடிக்கைகள் தொடர்து கொண்டுதான் இருக்கின்றன.

''முதல்வர் மாயாவதியின் உடை மற்றும் அணிகலன்களின் தேர்வு தலித்துகளுக்கு அதிகாரம் கிடைப்பதன் லட்சியங்களின் பிரதிபலிப்பாக உள்ளன. முன்பு மேல் சாதியினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட வாழ்க்கை முறையை அவரால் வாழ முடிகிறது என்பது தலித் பெண்களுக்கு வலுவான விஷயத்தைக் கூறுவதாக, சாதித்த உணர்வைத் தருவதாக உள்ளது,'' என்று பியர்ல் அகாடமியின் தலைவர் நந்திதா ஆபிரஹாம் கூறுகிறார்.

பிரசாத்தும் அதையேதான் வலியுறுத்துகிறார். உயர் லட்சிய விருப்பங்கள் பிராண்ட்களாக உருவாக்கப்படுகின்றன. போட்டிக்கு வரும் வாய்ப்பை உருவாக்குகின்றன. இறுதியில் சுயசார்பு உள்ளவர்களாக, அரசியல் அதிகாரத்தைப் பெறக் கூடியவர்களாக தலித்துகளை இது மாற்ற முடியும்.

டிசம்பர் 28ஆம் தேதி, பிரசாத் தனது bydalits.com இணையதளத்துக்காக போட்டோஷூட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தோலால் தயாரிக்கப்பட்ட தொப்பிகள், பைகள் போன்றவற்றை கருப்பு நிறத்தில் அணிந்து கொள்ளுமாறு ஆண்கள் மற்றும் பெண்களை அவர் கேட்டுக்கொண்டார்.

bydalits.com என்ற மின்னணு வணிக முனையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தலித்துகளால் தயாரிக்கப்பட்ட அல்லது தலித்துகளால் விற்கப்படும் பொருட்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டதாக இது இருக்கும். பிராண்டிங் செய்தல் மற்றும் சொத்து உருவாக்கத்தின் மற்றொரு உதாரணமாக இது இருக்கப் போகிறது.

தொப்பிகள், சோப்பு டப்பாக்கள், ஷூக்கள், உடைகள் என, இந்தியாவில் நடுத்தர தலித் சமுதாயத்தினர் விரும்பும் அனைத்தும் இந்த இணையதளம் மூலம் விற்கப்படும். அம்பேத்கரை பொருத்த வரையில், கோட் என்பது, அரசியல் தடைகளை உடைப்பதற்கான, அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான அடையாளமாக இருந்தது. தலித்கள் என்ன உடைகளை அணியலாம் அல்லது எதை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்த சமூகத்தில் அதை உடைப்பதற்கான அடையாளமாக அவர் அதைப் பயன்படுத்தினார் என்று பிரசாத் கூறினார்.

bydalits.com மூலம் இந்த அநீதியை முறியடிக்க வேண்டும் என்று பிரசாத் விரும்புகிறார். இந்த மின்னணு வணிக முனையம் மூலமாகவும், Zero Plus என்ற உடைகளுக்கான பிராண்ட் மூலமாகவும் இதைச் செய்ய விரும்புகிறார். தலித்துகள் மத்தியில் தொழில்முனைவோர் வாய்ப்பை ஊக்குவிப்பதாகவும், தலித் நடுத்தர பிரிவினர் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு அந்த சமூகத்திற்குள்ளேயே இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கருதுகிறார்.

"நன்றாக உடை அணிவது என்பது மனுதர்மத்தை எரிப்பதைப் போன்றது. இரண்டையும் செய்வது நல்லது. அவரைப் பின்பற்றுங்கள், அவரைப் போல உடை அணியுங்கள்'' என்று அவர் அம்பேத்கரை காட்டி சொல்கிறார்.

திருவாங்கூரில் 1924 வரையில் தீண்டப்படாத பெண்களுக்கு முலை வரி விதிக்கப்பட்ட கொடுமையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சேலை அடிமைத்தனத்தின் அடையாளம்

"சேலை என்பது அடிமைத்தனத்தின் அடையாளம்'' என்கிறார் அவர். "தலித் பெண்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சட்டைகள் மற்றும் கோட்களை அணிய வேண்டும். bydalits.com தளம் தலித்துகளின் பொருட்களை விற்கும் தளமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியக் குடியரசில் 1950ல் உருவான தேசிய கருத்தொற்றுமை சிதைந்து போனதன் தொடர்ச்சியாக, அதற்குப் பதிலடி தருவதாக இது அமைந்துள்ளது. தலித்துகள், பழங்குடியினருக்கு சமமான போட்டி களம் உருவாக்கப்படும் என்ற ஒருமித்த கருத்து அப்போது ஏற்பட்டது. தலித் நடுத்தர மக்கள் வளரும் போது, இந்து மேல் சாதியினர் பொறாமை கொண்டு, கடந்த காலத்தை, எதிர்காலத்தில் அமல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

தலித்துகளுக்கு பெருமை சேர்ப்பதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி சிலைகள் உருவாக்கப்பட்டன. பர்ஸ் வைத்துக் கொள்வது, அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளும் அம்சம். அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தலித் வரலாற்றைப் பார்த்தால், அடையாள அரசியலின் ஆணி வேரை மாயாவதி தகர்த்துள்ளார் என்பது தெரியும். மேல்தட்டு மக்கள் மட்டும் வைத்திருக்கக் கூடியதாகக் கருதப்பட்ட பர்ஸ் தலித் பெண்களிடமும் வந்துள்ளது.

"தலைமுடி அலங்காரத்தில் இருந்து 'மேம்சாப்' பாப் கட்டிங் வரை, சிறப்பு வடிவமைப்பில் தயாரித்த ஹேண்ட்பேக் முதல், வைர கம்மல்கள், பிங்க் சல்வார் கமீஸ் வரை, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் உடை மற்றும் அணிகலன்களின் தேர்வு தலித்களுக்கு அதிகாரம் கிடைப்பதன் லட்சியங்களின் பிரதிபலிப்பாக உள்ளன. முன்பு உயர் சாதியினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட கவனத்தை ஈர்க்கும் வகையிலான வாழ்க்கை முறையை அவரால் வாழ முடிகிறது என்பது தலித் பெண்களுக்கு வலுவான விஷயத்தைக் கூறுவதாக, சாதித்த உணர்வைத் தருவதாக உள்ளது,'' என்று பியர்ல் அகாடமியின் தலைவர் நந்திதா ஆபிரஹாம் கூறுகிறார்.

பிரசாத்தும் அதையேதான் வலியுறுத்துகிறார். உயர் லட்சிய விருப்பங்கள் பிராண்ட்களாக உருவாக்கப்படுகின்றன. போட்டிக்கு வரும் வாய்ப்பை உருவாக்குகின்றன. இறுதியில் சுயசார்பு உள்ளவர்களாக, அரசியல் அதிகாரத்தைப் பெறக் கூடியவர்களாக அவர்களை மாற்ற முடியும்.

ஜூன் 17 ஆம் தேதி, தலித் இளைஞர் பிரசாந்த் சோலங்கி என்பவர் தன் திருமணத்துக்கு, அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது அமர்ந்து சென்றார் என்பதற்காக தாக்கப்பட்டார். லெதர் ஷூ மற்றும் ஜீன்ஸ் அணிந்த காரணத்துக்காக குஜராத்தில் 13 வயது தலித் சிறுவன் தாக்கப்பட்டான் என்று கடந்த ஆண்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

2019 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 20 வயது தலித் இளைஞர் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார் என்பதற்காக தாக்கப்பட்டார். கடந்த டிசம்பரில் குஜராத்தில் கட்ச் பகுதியில் ''பத்தானி சூட்'' அணிந்ததற்காக தலித் இளைஞர் தாக்கப்பட்டார். ''தலித்துகள் பயன்படுத்தக் கூடாது'' என்று கூறப்பட்டவற்றை பயன்படுத்திய அல்லது அணிந்து கொண்ட தலித் சமூகத்தவர்கள் தாக்கப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

பொருளாதார சந்தையின் சக்தி, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் என்று பிரசாத் நம்புகிறார்.

கண்ணுக்குத் தெரியாத ஆதிக்கத்துக்கு சவால் விடுப்பதாக தலித் பிராண்ட்கள் இருக்கும். தலித்கள் தங்களது உரிமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடலாம் என்று நிரூபித்த அமெரிக்காவின் கருப்பின மக்கள் இயக்கம் மற்றும் பிற பகுதிகளில் நடந்த இயக்கங்களைப் போல, இந்த மக்கள் ஒன்றுபடுவதன் மூலம் இதை சாதிக்க முடியும்.

ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பாணிகள் பிராண்ட்கள் மூலமாக கலாசார தொடர்புகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

"இந்து தேசியவாதத்தை நிராகரித்து, அதிக சமநோக்கு தன்மை கொண்ட மேற்கத்திய கலாசாரத்தின் மூலம் அதை மாற்ற வேண்டும். தலித் நடுத்தர குடும்பத்தினர்தான் நாம் குறிவைக்கும் நுகர்வோராக இருக்க வேண்டும். நீங்கள் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள் என்றால், எங்கள் பொருட்களை வாங்குங்கள்'' என்கிறார் அவர்.

"பிராமணர்'' பிராண்ட்களும் கூட உண்டு. உதாரணமாக பிராமணர் மசாலாக்கள் அல்லது பிராமணர் உணவகங்கள், "பிராமணர் உணவுகள்'' என்ற இணையதளம், மாமிசம் அல்லாத பொருட்களை விற்பவை மற்றும் உணவுடன் சாதியை தொடர்புபடுத்தும் தளங்கள் உள்ளன. தீவிரமான அடையாள அரசியல் காலத்தில், அடையாளம் என்பது ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக மாறிவிட்டது.

ஆனால் சமூக நீதியை முன்னிறுத்தி பொருட்களை விற்க முடியுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். உணர்வுகள் உதவிக்கு வராது என்று ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஈஸ்தடிக்ஸ் பொருளாதார ஆசிரியரான பேராசிரியர் ஒய்.எஸ். அலோனே கூறுகிறார்.

"ஜெய் பீம், அம்பேத்கர், மகாத்மா பூலே போன்ற வார்த்தைகளை நுகர்பொருட்களுக்கு சூட்டுவது இந்த முன்னோடிகளை அவமதிப்பது போன்றது. பரிணாம மாற்றம் என்ற கோட்பாட்டின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தனர். மக்களுக்கு ஜனநாயக மாண்புகள் கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார்கள். இந்தப் பெயர்களுடன் சில முக்கிய விஷயங்கள் இணைந்துள்ளன'' என்றும் அவர் தெரிவித்தார்.

காசியாபாத் நகரில் உள்ள சந்தன் அண்ட் சந்தன் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த என்.கே. சந்தன், bydalits.com மூலம், பிளாஸ்டிக் பாட்டில்களை விற்க திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால் இதுபோன்ற முன்முயற்சிகள் பலன் தருமா என்று அவருக்கு சந்தேகம் உள்ளது. நோக்கம் தவறானது என்று அவர் கூறவில்லை. ஆனால், இந்தியாவில் நிலவும் சாதிய நடைமுறைகள் காரணமாக, இன்னமும் ''தீண்டாமை'' உள்ளது என்பதுதான் காரணம்.

"தலித்துகளால் தயாரிக்கப்படும் எந்தப் பொருளும் தரம் குறைந்ததாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. கீழ் சாதியினர் என கூறப்படும் பிரிவினரால் தயாரிக்கப்பட்டது என்ற காரணத்துக்காக, அவற்றை பலர் வாங்க மாட்டார்கள். உதாரணமாக அம்பேத்கர் ஜெயந்திக்கு நீங்கள் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்தால், ஏத்தனை பேர் அங்கே சாப்பிடுவார்கள்? அல்லது ஆளுங்கட்சியில் உள்ள எத்தனை தலித் உறுப்பினர்கள், இப்போதும் தாங்கள் கூடும் இடங்களில் ஜெய் பீம் என்று கூறுவார்கள்,'' என்று அவர் கேட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பிராண்ட்களை உருவாக்க பிரசாத் எடுத்துக் கொண்ட உதாரணங்கள், வேறொரு நாட்டில், வேறு மாதிரியான அரசியல் சூழ்நிலை உள்ள நாடுகளில் நடந்தவை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அங்க்ரேஜி தேவி கோவிலுக்குள் ஷூ அணிந்தபடி நீங்கள் செல்ல முடியும்.

கோவா மாநிலம் பனாஜியில் பழைய பொது மருத்துவமனைக் கல்லூரி கட்டடத்தில் ஓர் அறையில் சாமியார் போல பிரசாத் அமர்ந்திருந்தார். இந்த வீட்டுக்கு வெளியே பாருங்கள் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட கலைக் கண்காட்சியில் ஓர் அங்கமாக, தற்காலிக மர கோயிலை நான்கு கருப்புத் தூண்கள் தாங்கியிருக்கின்றன.

2019-ல் மும்பையைச் சேர்ந்த சுதர்சன ஷெட்டி என்ற கலைஞரால் அது உருவாக்கப்பட்டிருந்தது. 30 அங்குலம் உயரத்தில் வெண்கலத்தால் ஆன அந்தச் சிலையின் கையில் ஒரு கீபோர்டும், ஒரு பேனாவும் வேறு சிலவும் இருந்தன. கம்ப்யூட்டர் திரையில் அவர் உச்சியில் இருந்தார்.

அது புத்தமத நம்பிக்கையின் சக்கரம். அந்த தேவி கையில் இந்திய அரசியலமைப்பை வைத்திருந்தார். தொப்பி, கவுன் அணிந்து, தங்க நிற தலைமுடியுடன், சுதந்திரத்தின் உத்வேகத்தைக் கொண்டாட பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு பிரான்ஸ் பரிசளித்த சுதந்திர தேவி சிலையைப் போலவே இருந்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் பாங்கா மாவட்டத்தில் ஆங்கில தேவி சிலையும் பிரசாத் வைத்திருந்தார். பெண் கடவுளுக்கான இடம் நிரப்பாமலே உள்ளது என்று கூறுவதாக அது இருந்தது.

இந்து பெண் தெய்வங்கள் அணிந்திருக்கும் சேலைக்குப் பதிலாக கவுன் அணிந்த சிலை மூலம் தலித் அடையாளத்தை பிராண்டிங் செய்யும் முதலாவது பரிசோதனையாக அங்க்ரேஜி தேவி சிலை இருந்தது. கோவில் திட்டத்தை புதுப்பிப்பதன் மூலம், அவருடைய சமீபத்திய தொழில்முனைவோர் முயற்சியான bydalits.com -ஐ வலுப்படுத்துவதாக உள்ளது.

`தலித் பிராண்ட்களை முன்னிலைப்படுத்துவது, தலித் சொத்து உருவாக்கம் (மற்றும்) சாதி மேலாதிக்கத்தை உடைப்பது' என்று இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. வளம் கிடைக்காதவர்களின் பொருள் சார்ந்த விருப்பங்களை அடையாளப்படுத்தும் பொருட்களை விற்பது இந்த உத்தியாக உள்ளது.

மின்னணு சந்தைக்கான இணையதளம் அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இந்த இணையதளம் மூலம் விற்கப்பட்டுள்ளன என்கிறார் பிரசாத்.

2019 டிசம்பர் 10 ஆம் தேதி, கான்பூர் மாவட்டத்தில் RAD என்ற நிறுவனம் நடத்தி வரும் தலித் சகோதரிகள் - 21 வயதான ஆலியா, 20 வயதான அவந்திகா சௌகான் ஆகியோரை பிரசாந்த் சந்தித்தார். கான்பூர் அருகே உள்ள அந்த நிறுவனம் தோல் பொருட்கள் தயாரிக்கிறது. இந்தச் சகோதரிகள் 2019ல் தங்கள் நிறுவனத்துக்குப் பதிவு பெற்று, பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அங்கே Antique என்ற பெயரில் அந்தப் பொருட்களை விற்கிறார்கள்.

"கவனியுங்கள்......... பெண்களுக்கான, மார்பின் குறுக்கே போட்டுக் கொள்ளும் முடியுடன் கூடிய இந்த பை bydalits.com மூலம் விரைவில் விற்பனைக்கு வருகிறது'' என்று பிரசாத் ஒரு தகவலை பதிவிட்டிருக்கிறார்.

அபூர்வமான இந்த தோல் பதனிடும் தொழில்நுட்பத்தில், விலங்குகளின் முடி அப்படியே வைக்கப்படுகிறது. தொழில் திறன்மிக்க 30 பெண்களை இந்தச் சகோதரிகள் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். பொருட்களை அமெரிக்க சந்தைக்கு அனுப்புகிறார்கள். மற்றவர்கள் மூலமாக விற்காமல், தங்கள் பிராண்ட் பெயரை பதிவு செய்யும் நடைமுறைகளை இவர்கள் தொடங்கினர். அர்ஜென்டினா பசு தோலால் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் அமெரிக்காவில் Antique என்ற பெயரில் ரூ.14,500 விலைக்கு விற்கப்படுகின்றன.

"விரைவில் நாங்கள் பைகள் வடிவமைப்பு செய்வோம். தலித் பிராண்ட்கள் என்ற சிந்தனை மற்றும் முன்முயற்சி எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் அது எங்களுக்கு அதிக சுயசார்பையும், உறுதிப்பாட்டையும் தருவதாக இருக்கும்'' என்று ஆலியா கூறினார்.

49 வயதான சதீஷ்குமார் பாவுத் காஜியாபாத் நகரை சேர்ந்தவர், bydalits.com மூலம் பொருட்களை விற்க ஒப்புக்கொண்டிருக்கும் தலித் உற்பத்தியாளர்களில் ஒருவர்.

சம்யக் லெதர் என்ற பிராண்ட் பெயரில் அவருடைய பொருட்கள் விற்கப்படுகின்றன. ஏற்கெனவே தோல் கோட்கள் மற்றும் சட்டைகள் என 50 பொருட்களை அவர் பிரசாத்துக்கு அனுப்பியுள்ளார்.

"மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய முயற்சியாக இது உள்ளது. இதை மக்கள் கேலி செய்வார்கள் என எனக்குத் தெரியும். அவர்கள் கான்ஷிராமையும் கேலி செய்தார்கள். ஆனால் இந்த நாட்டில் அரசியலின் போக்கையே அவர் மாற்றிக் காட்டினார். அவர்கள் ஜெய் கிருஷ்ணா தூப பத்தி வைத்திருந்தால், நாம் ஏன் நமக்கான பிராண்ட்கள் வைத்துக் கொள்ளக் கூடாது'' என்று அவர் கேட்கிறார்.

61 வயதான பிரசாத் முன்னர் dalitfoods.com என்ற இணையதளத்தைத் தொடங்கினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அது மூடப்பட்டுவிட்டது. பாசி (பன்றிகள் வளர்க்கும் சமூகம்) வகுப்பைச் சேர்ந்த அவர் அஜம்கார் பகுதியைச் சேர்ந்தவர்.

2016-ல் dalitfoods.com என்ற இ-காமர்ஸ் தளத்தை அவர் தொடங்கியபோது மங்காய் ஊறுகாய், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை தூள், உலர் வேர்க்கடலை மாவு, பார்லி மாவு போன்றவை அதில் இடம் பெற்றிருந்தன. தலித்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற வகையில் ஒரு பொருளாதார மாடலை உருவாக்க அவர் முயற்சி செய்தார். அதன்பிறகு, தலித்களுக்கான ஆடை லேபிளாக Zero Plus வந்தது. 2017ல் அதைத் தொடங்கினார். பூஜ்ஜியம் என்ற கோட்பாடு மற்றும் கணிதத்தில் முடிவில்லா நிலை என்பதால் கவரப்பட்டு அவர் தொடங்கிய Zero Plus கூட ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மற்றும் ஒரு முயற்சி தான்.

ஏற்கெனவே ஜெய் பீம், பகுஜன் ஸ்டோர் போன்ற பிராண்ட்கள் சந்தையில் உள்ளன. சோப்கள் முதல், டி-சர்ட்கள் மற்றும் மசாலாக்கள் வரை அதில் விற்கப்படுகின்றன. ஜெய் பீம் பொருட்கள் 2017ல் தொடங்கப்பட்டன. BahujanStore.com இணையதளம் 2015ல் பயன்பாட்டுக்கு வந்தது. காஸ்மோபாலிடன் தோற்றத்துடன் ஆன்லைன் சில்லரை வணிக முயற்சியாக அது தொடங்கப்பட்டது.

2017 அக்டோபரில் ஹரியானாவில் ஜாஜ்ஜரில் தொடங்கப்பட்ட ஜெய் பீம் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், ஜெய் பீம் என்ற பெயரில் ஆம்லா ஹேர் ஆயில் மற்றும் சோப்கள் உள்பட 12 பொருட்களைத் தயாரிக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டியை தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம், பதஞ்சலி நிறுவனம் அளவுக்கு தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இது தலித் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக உள்ளது.

தங்கள் பொருட்களின் பட்டியலில் ஹேண்ட்வாஷ் மற்றும் சோப்பு பவுடர் ஆகியவற்றையும் சேர்க்க உள்ளதாக, அதன் நிறுவனர்களில் ஒருவரான விஜயேந்தர் குமார் பார்தியா தெரிவித்தார். ஏற்கெனவே மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் உள்பட நாடு முழுக்க 80 சில்லரை விற்பனை மையங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

"தொழில்முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்க நாங்கள் விரும்பினோம். வரலாற்றை குறை கூறிக் கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எதிர்காலத்தை நோக்கி தாவி முன்னேற விரும்புகிறோம்.

நாங்கள் முதலில் தொடங்கிய போது ஜெய் பீம் என்ற பெயரை பயன்படுத்துவது குறித்து நிறைய பேர் தயங்கினர். ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை'' என்று அவர் கூறினார்.

சாதி எதிர்ப்பு இயக்கங்களுக்கான முழக்கமாக ஜெய் பீம் உள்ளது. பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரில் வாழ்த்து கூறுவதாக இந்த வார்த்தை கருதப்படுகிறது.

அடையாள அரசியலால் பிளவுபட்ட தேசத்தில் ``ஜெய் ஸ்ரீராம்'' என்பது யுத்தத்துக்கான கோஷமாக இருக்கும் போது, தத்துவார்த்த நிலைப்பாட்டை உறுதி செய்யும் தலித்களின் உறுதியை வெளிப்படுத்துவதாக ஜெய் பீம் என்ற முழக்கமாக கருதப்படுகிறது.

ஆனால் ஜெய் பீம் என்ற வாழ்த்தை கேலி செய்வது போல இது உள்ளது என்று அலோனே கூறுகிறார்.

"இந்தப் பொருட்களை அரசியல்சாசன மாண்புகள், சுதந்திரம், சமத்துவம் அல்லது சகோதரத்துவத்தை வலியுறுத்துபவையாகக் கருத முடியுமா?'' என்று அவர் கேட்கிறார். ``இந்தப் பொருட்கள் பற்றி வாட்ஸப் மூலம் தகவல் பதிவிட்டபோது, மாற்றம் ஏற்படுத்தும் வகையில் இவற்றில் ஏதுமில்லை என்று விமர்சிக்கப்பட்டது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

அரசியல், சமூக மற்றும் மத இயக்கங்களை தலித் சமூகம் பார்த்துவிட்டது என்று பார்தியா கூறுகிறார்.

"ஆனால் நமக்கு பொருளாதார இயக்கம் தேவைப்படுகிறது'' என்கிறார் அவர்.

தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் செய்ய உற்பத்தியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தலித் அடையாள அரசியல் மற்றும் தங்கள் தயாரிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிராமங்களில் கூட்டம் நடத்த நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.

ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தலித் பிராண்ட்கள் சந்தையில் தொடர்ந்து தனக்கு உரிய இடத்தைப் பிடித்து வருகின்றன.

சஹரன்பூர் ரவிதாஸ் காலனியில், தலித்களின் பொருளாதார சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் பீம் படையின் உறுப்பினர்களில் ஒருவர், புத்தா பீம் டிடர்ஜென்ட் என்ற பெயரில் டிடர்ஜென்ட் வியாபாரம் தொடங்கியுள்ளார். இன்னொருவர் பீம் மசாலா வியாபாரம் தொடங்கியுள்ளார்.

இதற்கான வாதம் எளிமையானது தான். மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் உள்ள தங்கள் சமூகத்தவர்களிடம் அவர்கள் தங்கள் பொருட்களை விற்கத் தொடங்கினால், அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிடுவார்கள், அதுதான் மரியாதையை நிலைநாட்டுவதற்கான வழியாக இருக்கும்.

ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. டிசம்பர் 5 ஆம் தேதி மாலையில், Ensemble என்ற உயர் அந்தஸ்துள்ள விற்பனையகத்தில், அவர்கள் ஏலத்துக்காக கூடியபோது பீம்சாக்கரேவும் மற்றவர்களும் நல்ல உடைகள் அணிந்திருந்தனர்.

உடைகள் நாசூக்காகவும், அதிக ஆடம்பரமாகவும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். அது முக்கியமான விஷயம். சமூக ஊடகங்களில் ஆரம்பத்தில், வடிவமைப்பாளர்களின் பெயர்களுக்கான பதிவில் தங்கள் பெயரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போடவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம் கொண்டிருந்தனர். அநேகமாக சாதி அடையாளம் விநோதமான முறையில் வேலை செய்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

தொடக்க காலத்தில், சமூக ஊடகத்தில் அவர்களுடைய பெயர்களும், வடிவமைப்பாளர் பெயர்களும் இடம் பெற்றன.

அவர்களின் பெயர்கள் இடம் பெறுவதை ராஜ்பார் உறுதி செய்ய வேண்டியதாயிற்று.

32 வயதான பீம்சாக்கரே 2003ல் சாலை விபத்தில் தந்தையை இழந்துவிட்டார். மும்பையில் செருப்பு தைக்கும் கடையில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு கார் மோதியதில் அவர் இறந்துவிட்டார். தனது படிப்பை நிறுத்திவிட்டு, தந்தையின் சிறிய கடையை எடுத்து வேலை செய்து, தன் குடும்பத்தின் தேவைகளை சமாளிக்க தினமும் 100 ரூபாய் சம்பாதித்தார். இவர் செருப்பு தைப்பவராக வரக் கூடாது என்று தந்தை விரும்பியிருக்கிறார். இதைத் தொடங்கிய பிறகு, ஒரு கலைஞராக, வடிவமைப்பாளராக, தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகிறவராக தன்னை அவர் பார்த்தார்.

ரூ.10,000க்கும் அதிகமான விலையில் இவரது பைகள் விற்கப்படுகின்றன.

ஓர் இரவில் 60க்கும் மேற்பட்ட பைகள் விற்றன.

பயிற்சி பெற்ற கலைஞரான ராஜ்பார், மும்பையில் கண்டிவலி குடியிருப்புப் பகுதியில் வளர்ந்தவர். தம் பகுதியில் செருப்பு தைப்பவராக பீம்சாக்கரேவை அவர் சந்தித்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் பங்குதாரர் உறவு ஏற்பட்டது.

2015ல் மாடுகள் வெட்ட தடை வந்தபோது தோல் பொருட்கள் தயாரிக்கும் மகாராஷ்டிரா மாநிலம் தாராவியில் அந்தத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது தான் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் மூலம் பைகள் மற்றும் பொருட்களை தயாரிக்க சமர் ஸ்டூடியோவை தொடங்க ராஜ்பார் முடிவு செய்தார். தோல் பொருட்கள் தயாரிப்பில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பாகக் கூறும் வகையில் சமர் என்ற சொல்லைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம தடை விதித்துள்ள நிலையில், அந்த சொல்லுக்கு மரியாதையை உருவாக்கும் வகையில் சமர் ஸ்டூடியோ என்ற இணைப்புச் சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்.

மும்பை பெருநகரில் கழிவு மேலாண்மைத் துறையில் பகுதிநேர மேற்பார்வையாளராக பீம்சாக்கரே வேலை பார்க்கிறார். பைகளின் இணைப்புக் குறிப்பில் தன் பெயர் இடம் பெற்றதில் கொஞ்சம் பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார்.

வரலாற்றில் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டதற்கு பதிலடி தரும் வகையில் இந்த முயற்சி இருப்பதாக ராஜ்பார் கூறினார்.

மும்பையைச் சேர்ந்த கலை ஆலோசகர் பாரா சித்திக் உருவாக்கிக் கொடுத்த கூட்டு முயற்சியிலான இந்தத் திட்டம், Ensemble சங்கிலித் தொடர் நிறுவனத்தின் ஆதரவுடன், சாதிய அடையாளங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்படுகிறது. Ensemble நிறுவனம் மும்பையில் வசதியானவர்கள் வாழும் கோலாபா பகுதியில் லயன்ஸ்கேட் ஸ்டோரில் இதை அறிமுகம் செய்ய அனுமதி தந்தது.

ஆரம்பத்தில் இதை வடிவமைத்தவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சமர் என்ற பெயரை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினர். தலித்களுக்கு எதிராக சமர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினால் மற்றும் வன்முறையில் ஈடுபட்டால் அந்த உயர்சாதியினருக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் 1989ல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக அது கருதப்படும்.

இப்போதைக்கு, இந்த பிராண்டிங் மூலம் அவர்கள் வேகமான வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளனர். ஜோத்பூரை சேர்ந்த ஷூ தயாரிப்பாளர் கைலாஷ் பன்வர், இணையதளத்தில் சேர்க்க 24 ஜோடி ஷூக்களை பிரசாத்துக்கு அனுப்பியுள்ளார். தனது பிராண்டை பதிவு செய்யவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த சமூகத்தில் பெரும்பாலானவர்கள் பொருட்களை தயாரித்து ஏற்றுமதியாளர்களுக்கு விற்கிறார்கள் அல்லது வேறு வியாபார நிறுவனங்களுக்கு விற்கிறார்கள்.

நாட்டில் அரசியல் சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், தலித் விழிப்புணர்வு அதிகரித்துள்ள சூழலில், சொத்து, அதிகாரம் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றி பேசப்படும் நிலையில், மும்பையில் அன்றைய இரவில், தயாரித்த தொழிலாளியின் பெயரையும் தாங்கியிருந்த அந்தப் பைகள் விற்பனை ஆயின. அந்தப் பொருள்களின் அறிமுகத்தைப் பற்றி விவரிக்க கூடியிருந்தவர்களுக்கும் கூட, சாதி முரண்பாடுகள் புரியவில்லை. சமூக நீதி குறித்த விவாதத்தில் சரியான பக்கம் இருக்க அவர்கள் விரும்பினர்.

அன்று இரவு பீம்சாக்கரே முகத்தில் புன்னகையுடன் சென்றார்.

"நாங்கள் எல்லா இடங்களிலும் இடம்பெறும் காலம் வந்துவிட்டது'' என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்