குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலானது - 5 எளிய கேள்வி, பதில்கள்

இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெறக் காரணமாக இருந்த குடியுரிமை திருத்த சட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு வழிவகை செய்யும் வகையிலான இந்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணை, இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தின் சரத்துகள் ஜனவரி 10, 2020 இந்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளாக மத்திய அரசு அறிவிக்கிறது என்று அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியக் குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்கிய குடியுரிமை திருத்த சட்டம் டிசம்பர் 10, 2019 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமல்லாது, அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின்போது சட்டவிரோத குடியேறிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் ரத்து செய்யப்பட்ட இந்தியக் குடியுரிமையை மீண்டும் பெறலாம்.

1. சட்டத் திருத்தம் கூறுவது என்ன?

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.

இந்திய அரசின் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைக்கு ஆளாகாதவாறு, அவர்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பு வழங்கும்.

பட மூலாதாரம், http://egazette.nic.in

சட்டத்திருத்தத்துக்கு முன்புவரை, குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் இந்தியாவில் 11 ஆண்டுகள் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

1955-இல் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த தகுதி வரம்பு, தற்போதைய சட்டத்திருத்தத்தின் மூலம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

2. இந்தியா முழுவதும்போராட்டங்கள் ஏன்?

இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் இந்தியா முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்கள் எழுந்தன.

இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.

அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதரீதியிலான பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

பட மூலாதாரம், Getty Images

மத ரீதியான பாகுபாடு மட்டுமே இந்த எதிர்ப்புக்கு காரணமல்ல. வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளின் குடியேறிகள் அதிக அளவில் வர வழிவகுக்கும் என்றும் அது தங்கள் கலாசாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

3. திருத்த சட்டம் சேர்த்துக்கொள்ளாத சிறுபான்மையினர் யார்?

இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆகியோர் இலங்கையில் சிறுபான்மை மதமாக உள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனும்போதும் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்படவில்லை என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இலங்கை தமிழர்கள் இந்தப் பட்டியலில், இந்தியாவில் அகதிகளாக உள்ள தமிழர்கள் நாடு திரும்பி இலங்கையிலேயே உரிமைகள் பெறுவதை அது தடுக்கலாம் என்றும் அவர்கள் மத ரீதியில் அல்லாமல் இன ரீதியாகாவே துன்புறுத்தலுக்கு உள்ளதாகவும் இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கீழ்புத்துப்பட்டு அகதி முகாமில் இலங்கை தமிழ் அகதிக் குடும்பம் ஒன்று.

அகமதியா இன மக்களும் பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அவர்கள் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்படவில்லை.

1835இல் பிறந்த மிர்ஸா குலாம் அகமது என்பவரால் அகமதியா மதக் குழு நிறுவப்பட்டது. நபிகள் நாயகமே கடைசி இறைத் தூதர் என்று நம்பும் பாரம்பரிய இஸ்லாமியர்கள், இன்னொருவரையும் இறைத் தூதராக ஏற்றுக்கொண்டுள்ள அகமதியா மக்களை இஸ்லாமியர்களாக கருதுவதில்லை.

தாங்களும் இஸ்லாமியர்கள்தான் என்று அகமதியா மக்கள் கூறினாலும் அவர்களுக்கான மத அங்கீகாரம் மறுக்கப்படுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

4. இந்திய அரசு கூறுவது என்ன?

அகமதியா மக்கள் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்கள் இந்த சட்டத் திருத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என இந்திய அரசு தெரிவித்தது.

மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளான காரணத்தை தவிர்த்து, வேறு உலக நாடுகளின் குடிமக்கள் இந்தியக் குடுடியுரிமை பெறுவதற்கான வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் முஸ்லிம்களும் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்றும் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images

என்.ஆர்.சி. என்று பரவலாக அறியப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்தில் அமலானபின் அங்கு 19 லட்சம் பேர் சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களின் இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட்டது.

இந்த சட்டத் திருத்தம் இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முதல் படி என்று எதிர்ப்பாளர்கள் கூறும்போதும், இவை இரண்டுக்கும் தொடர்பில்லை என்கிறது மத்திய அரசு.

5. திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதா?

கேரளா, பஞ்சாப், ஒடிஷா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகள் இந்த சட்டத் திருத்தத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. எனினும் அவ்வாறு செய்யவது சட்டப்படி முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா உள்ளிட்டோர் பல்வேறு தருணங்களில் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து நடந்த போராட்டங்களில் வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நிகழ்ந்தன

இந்த சட்டத்தை பொதுமக்களுக்கு விளக்க மூன்று கோடி மக்களை சந்திக்கும் பிரசார இயக்கத்தையும் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்த சட்டம் உள்ளது என்று கூறி இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் உயர் நீதி மன்றங்களில் இதை ரத்துக் செய்யக்கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றம் மதத்தை குடியுரிமை பெற காரணமாக உள்ளது என்று ரத்து செய்தாலோ, இந்திய நாடாளுமன்றம் மீண்டும் இந்த சட்டத்தை திருத்தும் வரையிலோ இப்போது அமலுக்கு வந்துள்ள சரத்துகள் செல்லுபடியாகும்.

ஒரு வேளை இந்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், தீர்ப்புக்கு முன்னரே குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களுக்கு, அக்குடியுரிமை செல்லுமா என்பது கேள்விக்குறிதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: