தமிழக உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் களேபரங்கள்: நடந்தது என்ன? - விரிவான தகவல்கள்

தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் பல களேபரங்கள் நடந்தேறியுள்ளன. கூடுதலான உறுப்பினர் இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க. குறைவான தலைவர் பதவிகளையே பிடிக்க முடிந்துள்ளது. பல இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலரே உடல் நலக் குறைவு காரணமாக வரவில்லை.

தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் பல காரணங்களால் தள்ளிப்போடப்பட்டு, 2019ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்றன. அதுவும் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகளில் மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளிலும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, மாவட்ட வார்டு கவுன்சிலர் இடங்களில் 270 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2,362 இடங்களையும் கைப்பற்றியது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மாவட்ட வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியிடங்களில் 242 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2195 இடங்களையும் பிடித்தன.

இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர்களையும், 9,624 ஊராட்சி துணைத் தலைவர்கள் இந்த முறையில் தேர்வுசெய்யப்படவிருந்தனர்.

இந்தத் தேர்தல்களில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி துணைத் தலைவரை தேர்வு செய்ய அந்தந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்தத் தேர்தல்களில் மொத்தமுள்ள 27 மாவட்ட பஞ்சாயத்துகளில் 13 மாவட்ட பஞ்சாயத்துகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. ஒரு மாவட்டப் பஞ்சாயத்தை (சேலம்) பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியது. எதிர்க்கட்சியான தி.மு.க. 12 மாவட்ட பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றது.

ஆனால், பல இடங்களில் தலைவர்களையும் துணைத் தலைவர்களையும் தேர்வுசெய்வதில் பல பிரச்சனைகள் நடைபெற்றன. குறிப்பாக போதிய உறுப்பினர்கள் வராததால் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் 11ஆம் தேதியன்று நடைபெறவில்லை.

மேலும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல்களின்போது பிரச்சனைகள் காரணமாக 12 இடங்களிலும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வராததால் 13 இடங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திடீரென தங்களுக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்து மருத்துவமனையில் சேர்ந்துவிட்டதால் 2 இடங்களிலும் நடக்கவில்லை. ஆகவே மொத்தமாக 27 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவில்லை.

மீதம் இருந்த 287 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் 150 இடங்களைக் கைப்பற்றின. தி.மு.க. 133 இடங்களைக் கைப்பற்றியது. அ.ம.மு.க. 2 இடங்களிலும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

ஆனால், இந்த மறைமுகத் தேர்தல்களில் பல குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தி.மு.கவுக்கு சாதகமான இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடல் நலக் குறைவைக் காரணமாகக் காட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் அலுவலர் உடல் நலக் குறைவின் காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டார். இதனை, தி.மு.கவின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியே சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில், உறுப்பினர்கள் வந்தால்தான், தேர்தல் நடக்குமென்ற இடங்களில், எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்பிருந்தால், ஆளும்கட்சியினர் வராமல் இருந்து, தேர்தலைத் தள்ளிவைத்ததாகவும் கூறப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை பொறுத்தமட்டில் 314 பதவிகளில் 41 பதவிகளுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வருகை இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை.

பல இடங்களில் மோதல்கள், தேர்தல் அலுவலரைத் தாக்குவது போன்ற சம்பவங்களும் நடைபெற்றன.

சில இடங்களில் ஒரு கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், வேறு கூட்டணிக்கு வாக்களித்த சம்பவங்களும் நடந்தன. உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 ஊராட்சி வார்டுகளில் 13-ஐ தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. 9 இடங்களையே கைப்பற்றியது. ஆனால், தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயலட்சுமி 12 இடங்களைப் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் பத்து வாக்குகளையே பெற்றார். துணைத் தலைவருக்கான தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க. சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி போட்டியிட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தார்.

"திமுக உறுதியாக வெற்றிபெறக்கூடிய இடங்களில் வெற்றிபெற்றுவிட்டது. இழுபறியாக உள்ள இடங்களில் சுயேச்சைகளை ஈர்க்க இருதரப்புமே முயன்றன. ஆனால், ஆட்சி அவர்களிடம் இருப்பதால், அவர்களுக்கே கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இது வழக்கமாக நடப்பதுதான். ஆட்சி மாறும்போது இதுவும் மாறும்" என்கிறார் தர்மபுரி தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில்குமார்.

தாங்கள் ஆதரவு கோரியிருந்த பல சுயேச்சை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அழைத்துப் பேசியதால் மாறிவிட்டதாக சுட்டிக்காட்டும் செந்தில்குமார், புதுக்கோட்டையைத் தவிர, வேறு எங்கும் கூட்டணிக் கட்சியினர் மாற்றி வைக்களிக்கவில்லை என்று தெரிவித்தார்.

"இதையெல்லாம் புதிதுபோலப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. 1958 சட்டத்தின் அடிப்படையில் ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தல்கள் நடந்தபோதும் இதேபோலத்தான் நடந்துகொண்டிருந்தது. இப்போதும் நடக்கிறது; அவ்வளவுதான்" என்கிறார் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள காந்திகிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் பழனித்துரை.

ஊரகப் பகுதிகளில் தலைவர் பதவிக்கான தேர்தல் எப்போதுமே மறைமுகத் தேர்தலாகத்தான் நடத்தப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டும் அவர், நகர்ப்புறங்களில்தான் தலைவர் பதவிக்கான தேர்தல் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் மாற்றி மாற்றி நடத்தப்படுவதாகக் கூறுகிறார்.

"இதுபோல தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்தான் நடந்துவருகிறது. இதை சரிசெய்ய வேண்டுமானால், ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்; தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மாநில தேர்தல் ஆணையத்தை, மத்திய தேர்தல் ஆணையத்துடன் இணைக்க வேண்டும்" என்கிறார் பழனித்துரை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: