சென்னை புத்தகக் கண்காட்சி - "வெங்காயம் பற்றி பேசக்கூடாது, உப்பைப் பற்றிப் பேசக் கூடாது" - சு. வெங்கடேசன்

வெங்கடேசன்

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகம் விற்ற பத்திரிகையாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு, கைதுசெய்யப்பட்ட விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதனைக் கண்டித்து புத்தகக் கண்காட்சி அரங்கில் பேச மறுத்து வெளியேறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

புத்தகக் கண்காட்சி அரங்கிற்கு வெளியில் தினமும் எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. திங்கட்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் 'கீழடியில் ஈரடி' என்ற தலைப்பில் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் பேசுவதாக இருந்தது.

அவர் பேச அழைக்கப்பட்டவுடன், சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக, தான் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசப்போவதில்லை என்று தெரிவித்த வெங்கடேசன், "தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் - விற்பனையாளர் சங்கத்திற்கு (பபாசி) என தனித்த மாண்புகள், கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாறு இருக்கிறது. அரசை விமர்சித்தாக காவல்துறை கூறலாம், அரசு கூறலாம். ஆனால் அதை பபாசி கூற கூடாது.

அரசை விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியை பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணாவின் நூல்கள் விற்கக்கூடாது. வெங்காயத்தை பற்றி எழுதக் கூடாது. உப்பைப் பற்றி பேசக்கூடாது. கீழடி பற்றியே பேச முடியாது.

கீழடி என்றாலே மத்திய அரசுக்கு எதிரான சொல்தான். ஆனால், கீழடி தொடர்பாக ஒரு அரங்கமே இருக்கிறது. அதை எதிர்க்க முடியுமா? எனவே பபாசியின் நடவடிக்கையை கண்டித்து எனக்களித்த கீழடி ஈரடி தலைப்பில் உரையாற்ற மறுத்து என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்