இந்திய நாடாளுமன்ற கேன்டீன் முழு சைவமாக மாற்றப்படுகிறதா?

இந்திய நாடாளுமன்ற கேன்டீன் படத்தின் காப்புரிமை Rklfoto / Getty

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: நாடாளுமன்ற கேன்டீன் முழு சைவமாக மாறுகிறதா?

நாடாளுமன்ற கேண்டீனில் இனி சைவ உணவுகள் மட்டுமே விற்கப்படலாம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி.

நாடாளுமன்ற கேண்டீனின் உணவை தற்போது இந்திய ரயில்வேக்கு உட்பட்ட ஐஆர்சிடிசி கேட்டரிங் சேவை தயாரித்து வருகிறது. ஆனால், இது விரைவில் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தனியார்மையமாக்கப்பட்டு, பிகானெர்வாலா மற்றும் ஹல்திராம் ஆகிய இரு நிறுவனங்களில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவை இரண்டுமே பிரபல சைவ உணவகங்கள். சைவ உணவுகளுக்கு பெயர் போனவை. அதனால், இனி எம்பி-க்களுக்கு இனி சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உணவுக்குழு இல்லாத பட்சத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இது தொடர்பான முடிவை எடுப்பார்.

நாடாளுமன்றத்தில் மலிவு விலையில் எம்பிக்களுக்கு உணவு விற்கப்படுவது அவ்வப்போது விவாதிக்கப்படும் விஷயம். சமீபத்தில் அங்கு உணவு விலை திருத்தப்பட்டது. பிரியானி, சிக்கன் கட்லெட்டுகள், மீன் மற்றும் சிப்ஸ் ஆகியவை அங்கு அசைவத்திற்கு பெயர்போன உணவுகள். மேலும் கிச்சடி, பொங்கல், பழங்கள் போன்றவையும் அங்கு கிடைக்கும்.

ஆனால், அங்கு உணவு தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பிகானெர்வாலா அல்லது ஹல்திராம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டால் அசைவ உணவுகள் விற்கப்படாது. இது தொடர்பாக எந்த முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

தி ஹின்டு:கும்பகோணம் பாலியல் வல்லுறவு வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

படத்தின் காப்புரிமை Getty Images

கும்பகோணத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லி பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தி ஹின்டு நாளிதழ் செய்தி.

தனது பணிக்கான பயிற்சி பெறுவதற்காக 27 வயது பெண் ஒருவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். அவரது ஹோட்டலுக்கு செல்வதற்காக ஆட்டோ பிடித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் பைபாஸ் சாலையில் அந்தப் பெண்ணை விட்டுச் சென்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.

பைபாஸ் சாலையில் இருவரிடம் உதவி கேட்டுள்ளார் அப்பெண். அந்த இருவரும் அப்பெண்ணை தனியாக ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அவர்களுடைய நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணை பாதுகாப்பற்ற இடத்தில் இறக்கிவிட்டதற்காக ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தினமணி: சிஏஏ அமலானதை தொடர்ந்து அகதிகளை கண்டறியும் பணி உத்தர பிரதேசத்தில் தொடங்கியது

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த ஏதுவாக, அகதிகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று, அந்த மாநில அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கை வழங்கப்பட்டு, அனைத்து மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதிகளிடம் அகதிகள் குறித்த தரவுகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சஹாரன்பூர், கோரக்பூர், அலிகர், ராம்பூர், பிரதாப்கர், பிலிபிட், லக்னெள, வாராணசி, பஹ்ரய்ச், லகிம்பூர், மீரட், ஆக்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து முதல் பட்டியல் கிடைத்துள்ளது. முதல் பட்டியலில், 21 மாவட்டங்களில் 32,000-க்கும் அதிகமான அகதிகள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த தகவலின்படி, மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரவுகள் கிடைப்பதன் அடிப்படையில் பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றார்.

அகதிகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சோ்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக, மத்திய அரசு சார்பில் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிகோலுகிறது.

அமலானது குடியுரிமை திருத்த சட்டம் - இனி திரும்பப்பெற வாய்ப்புள்ளதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :