புதுவை முதல்வர் நாராயணசாமி மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து ஊழல் புகார்

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு

புதுவை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் குறித்து ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதியில் உள்ள ஆராம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்ற காரணத்திற்காக புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் போராட்டம் நடத்தினார். போரட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் தனவேலு புதுச்சேரி அரசின் மீது பொய் குற்றச்சாட்டை வைக்கிறார் என்றும், இவர் மீது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிடத்தில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது, இதற்கான நடவடிக்கையை கட்சி மேலிடம் எடுக்கும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை தான் ஒருபோதும் முன்வைத்ததில்லை. தான் கூறிய அனைத்தும் உண்மை என தெரிவித்த தனவேலு, ஆளும் கட்சியில் உள்ளவர்கள் தன்னை அச்சுறுத்துவதாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் ஆட்சி தொடர்ந்தால் புதுச்சேரியில் காங்கிரஸ் அழிவுப் பாதைக்கு செல்லும் என்றும் அவர் கூறினார்.

Image caption புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்து சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பேசியது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு நேற்று மாலை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ராஜ்நிவாஸ் சென்று சந்தித்தார். சந்திப்புக்கு பிறகு ஆளுநர் கிரண்பேடி அலுவலகத்தில் இருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் "சட்டமன்ற உறுப்பினர் தனவேலு முதல்வர் தனது மகனுடன் நில ஒப்பந்தங்களில் ஊழல் செய்ததற்கான ஆதாரங்களை தயார் செய்து வருவதாக கூறினார். இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை நேரடியாக அணுகி பதிவு செய்யலாம் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கிரண் பேடியை மறுபடியும் சந்தித்து, சிபிஐக்கு அனுப்ப வேண்டிய ஆதாரங்களை காண்பிப்பதாக கூறினார்," என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. புதுச்சேரி காங்கிரஸ் அரசை கலைப்பதற்கு பாஜகவின் கை கூலியாக அவர் செயல்படுகிறார் என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்