தமிழ்நாடு அரசியல்: திமுக - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா? படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குப் போதிய இடங்கள் ஒதுக்கப்படாதது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்த அறிக்கையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லையெனக் கூறி, மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் மாவட்ட அளவில் பேசி இடங்களைப் பெற்றுக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லையென குற்றம்சாட்டிய அந்த அறிக்கை, 303 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் தங்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகக் கூறியது.

மேலும் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு பதவிகூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லையென்றும் இது கூட்டணி தர்மத்திற்கு முரணானது புறம்பானது என்றும் அந்த அறிக்கை கூறியது.

இது எதிர்பார்த்ததைப் போலவே தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அழகிரி, அந்த விவகாரம் முடிந்துபோன ஒன்று எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 13ஆம் தேதியன்று தில்லியில் காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனால், உள்ளாட்சித் தேர்தலையடுத்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் தொடர்ந்து பெரிதாகிறது என்ற விவாதங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று தில்லி சென்ற மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே,எஸ். அழகிரி சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

அதே நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு, தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை விளக்கினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அந்த அறிக்கையைப் பார்த்த கழகத் தோழர்கள், நேரில் பார்க்கும்போதும் போனில் பேசும்போதும் சங்கடமாக இருக்கிறது. அவர்கள் நம் கூட்டணியில்தான் இருக்கிறார்களா என்று கேட்டார்கள். இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினேன். அந்த அறிக்கையில் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்கள். அதனை எங்கள் தலைவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாகக் கருதினோம். அதனால், சிஏஏ எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றபடி, கூட்டணி குறித்து காலம் பதில்சொல்லும்," என்று கூறினார்.

இதற்குப் பிறகு, தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரியிடம் டி.ஆர். பாலுவின் கருத்து குறித்து கேட்டபோது, "அவரது கருத்துக்கு பதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒரு குடும்பம் இருந்தால், ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். வருத்தமும் கோபமும் கிடையாது. கூட்டணியில் சலசலப்பே இல்லை," என்று தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க. ஏன் வரவில்லை என்பது குறித்து டி.ஆர். பாலுதான் கூறவேண்டும் என்று கூறிய கே.எஸ். அழகிரி, இந்தப் பஞ்சாயத்துத் தேர்தல் விவகாரம் எந்த காலத்திலும் எங்களுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள உறவை எப்போதும் பாதிக்காது என்றும் தங்கள் இணைப்புக்குக் காரணம், இதன் பின்னாலிருக்கும் கொள்கைதான் என்றும் தெரிவித்தார். ஆகவே, கூட்டணி தொடருமென்றும் கூறினார்.

2004ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையிலும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாகச் செயல்பட்டன. ஈழப் பிரச்சனையை அடுத்த, அந்தக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. இதற்குப் பிறகு, 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. பிறகு மீண்டும் 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றின.

படத்தின் காப்புரிமை Getty Images

2019ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றபோது, தொகுதி பங்கீடு குறித்து மாவட்ட மட்டத்தில் பேசிப் பிரித்துக்கொள்ளும்படி தி.மு.க. தலைமை கூறியது. ஆனால், மாவட்ட மட்டத்தில் தங்களுக்குப் போதுமான ஒத்துழைப்பில்லையென காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல. கணேசன், காங்கிரஸ் கூட்டணியைவிட்டு தி.மு.க. விலகுவதே அக்கட்சிக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

"இந்திய அளவில் ஒரு மாநிலக் கட்சியாக தி.மு.க. விமர்சித்ததைப் போல வேறு எந்தக் கட்சியும் பிரதமர் மோதியை விமர்சித்ததில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பெற்ற இடங்களில் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பெற்றது. இந்தப் பின்னணியில்தான் இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும். கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்கிறார் டி.ஆர். பாலு. இதற்கு நடுவில் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆக, தி.மு.க. மீதான அழுத்தத்தை பா.ஜ.க. அதிகரித்து வருகிறது. தி.மு.க. என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: