"ஜாமா மசூதி என்ன பாகிஸ்தானா? போராட்டம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது?" - டெல்லி நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: "ஜாமா மசூதி என்ன பாகிஸ்தானா? போராட்டம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது?"

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி தர்யாகஞ்ச் பகுதியில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் டெல்லி போலீஸ் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

"போராட்டம் நடத்துவது ஒருவரின் உரிமை" என்று குறிப்பிட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கமினி லா, சந்திரசேகர ஆசாத்தின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி காவல்துறையை சாடியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜாமா மசூதி பகுதியில் சந்திரசேகர ஆசாத் போராட்டம் நடத்தினார் என்றுதான் குற்றச்சாட்டு.

"ஜாமா மசூதி அருகே போராட்டம் நடத்தியதில் என்ன தவறு? என்ன வன்முறை நடந்தது? போராட்டம் செய்யக்கூடாது என்று யார் சொல்வது? நீங்கள் அரசமைப்பை படித்தீர்களா இல்லையா? ஜம்மா மசூதி என்ன பாகிஸ்தானா. அப்படியே பாகிஸ்தானாக இருந்தாலும் அங்கும் சென்று போராட்டம் நடத்தலாம். பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதிதான் பாகிஸ்தான்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.

"நாடாளுமன்றத்தில் கூறப்பட்டிருக்க வேண்டிய சில விஷயங்கள் கூறப்படவில்லை. அதனால்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். நமது கருத்துகளை சொல்ல நமக்கு முழு உரிமை உண்டு. ஆனால் நாம் நாட்டை அழிக்கக்கூடாது. நாட்டை சிதைக்கக்கூடாது" என்றும் தெரிவித்த நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமலர்: மருத்துவமனையில் கைக்குழந்தையை கடித்துக்கொன்ற நாய்

படத்தின் காப்புரிமை NurPhoto / Getty

உத்தர பிரதேசத்தில் ஆபரேஷன் தியேட்டரில் நுழைந்த நாய், புதிதாய் பிறந்த குழந்தையை கடித்து குதறியதில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாதில் ரவிக்குமார், அவரது மனைவி காஞ்சன் என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர், காஞ்சன் மட்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு, குழந்தையை ஆப்ரேஷன் தியேட்டரிலேயே வைத்துள்ளனர். இது குறித்து ரவிக்குமார் கேட்டதற்கு, சிறிது நேரம் அங்கேயே மருத்துவர்களின் பாதுகாப்பில் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த சில நிமிடங்களில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்தேறியது. ஊழியர்களின் அலட்சியத்தால், ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த நாய், அங்கிருந்த குழந்தையை கடித்து குதறியுள்ளது. இதில், குழந்தையின் கழுத்து மற்றும் சில பாகங்களில் காயங்களுடன் குழந்தை இறந்துள்ளதை கண்டு ரவிக்குமார், காஞ்சன் மற்றும் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரம் அறிந்து மாவட்ட நீதிபதி மன்வேந்திர சிங், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி: சிஏஏ-க்கு எதிராக கேரள அரசு மனு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டம், சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது என அறிவிக்குமாறும் அந்த மனுவில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), பிரிவு 21(தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை), பிரிவு 25 (எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற, பரப்புவதற்கான சுதந்திரம்) ஆகியவற்றை மீறும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், அரசமைப்பு சட்டத்தின் முக்கிய சாராம்சமான மதச்சார்பின்மை கொள்கையை இந்த சட்டம் மீறுகிறது. அதனால் இந்த சட்டத்தை அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை அணுகிய முதல் மாநில அரசு கேளரமாகும். முன்னதாக, இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :