சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள் - அனுமதி வழங்குமா அரசு?

சேவல் சண்டை

சேவல் சண்டை என்ற விளையாட்டை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க சேவல்களை தயார் செய்து வருகிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள். உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்ததை போல் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தவும் அனுமதி வழங்கிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

சேவலுக்கு பயிற்சி

சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதேபோல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.

பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும்கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சியோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.

உணவு

வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே ரகசியமாகப் பண்ணை தோட்டங்களில் வைத்து ஒத்திகை நடத்துவார்கள்.

இந்த போட்டிகள் தமிழகத்தில் ராமநாதபுரம், சேலம், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, பட்டுக்கோட்டை, வாடிப்பட்டி, சோழவந்தான், நாகர்கோயில் மற்றும் வேலூர் உள்ளிட்டஇடங்களில் நடத்தப்பட்டுவந்தன. இந்த போட்டி பொங்கல் விழாவின்போது நடத்தபட்டு வந்த நிலையில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறிவிட்டதாக கூறி 2009ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேவல்சண்டை விதிகள்

சேவல் சண்டையை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு எந்த சேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படும். இது 'ஜோடி சேர்த்தல்' என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி சேர்க்கப்படுகிறது. சண்டைக்கு முன்னதாக சேவல்களில் கால் நகங்களையும், காலில் இருக்கும் முட்களையும் கூர்மையாக்கி தயார் செய்வார்கள்.

15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் ஓய்வு என ஒரு மணிநேரம் சண்டை நடக்கும். இதில் சேவல் சோர்வில் விழுந்துவிட்டாலோ அல்லது சண்டையில் இறந்துவிட்டாலோ அந்த சேவல் தோற்றதாக அறிவிக்கப்பட்டு வென்ற சேவலின் உரிமையாளருக்கு சண்டை களத்திலேயே பரிசுகள் வழங்கப்படும். பல இடங்களில் தோற்ற சேவலையும் வென்றவருக்கு பரிசாக அளிப்பார்கள்.

பட்டதாரி இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கீழக்கரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் அதிலும் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் பலர் சேவல் சண்டைகளுக்கு சேவல்களை தயார் செய்து வருகின்றனர். பாரம்பரிய விளையாட்டுகளில் மிக முக்கியமான விளையாட்டான சேவல் சண்டை அழிந்து விட கூடாது என்ற ஒரே நோக்கத்தில் இரவு பகலாக சேவல்களை தயார் செய்து வருகின்றனர்.

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த போது தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை தென் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் வலுவாகி கொண்டே வருகிறது.

இது குறித்து ராமேஸ்வரத்தில் சேவல் வளர்க்கும் பொறியியல் பட்டதாரி ஹரிஹரன் பிபிசி தமிழிடம் பேசுகையில் , 'பாதாம், பிஸ்தா, அத்திபழம், பேரீச்சை, நாட்டு மருந்துகள் ஆகிய சத்தான பொருட்களை கொடுத்து சேவல்களை வளர்க்கிறோம். பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீச்சல் பயிற்சி கொடுத்து சேவல்களை சண்டைக்கு தயார் செய்கிறோம்' என்றார்.

சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம்

'ஒரு நாளுக்கு 15 மணி நேரம் சேவல்கள் உடன் இருக்கிறோம். சேவலை எங்கள் வீட்டின் ஒரு ஆளாக நினைத்து வளர்ப்போம், சேவல்களை தூக்கும் போது காலில் செருப்பு கூட அணிய மாட்டோம். அந்தஅளவு மரியாதையாக இருப்போம்.'

'சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். இந்த வீர விளையாட்டு ராஜாக்கள் காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது'

'எப்படி ஜல்லிகட்டு விளையாட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதோ அதே போல் சேவல் சண்டை அழியாமல் தடுக்க போராட்டம் நடத்தி அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும்' என்கிறார் ஹரிஹரன்.

சேவல் சண்டைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்?

இது குறித்து பாரி என்பவர் பிபிசி தமிழிடம் கூறுகையில் "தடைவிதிக்கும் அளவிற்கு சேவல் சண்டை போட்டியில் ஒன்றுமே இல்லை. இதுபோன்று விதிக்கப்பட்ட தடையால் தமிழர்களின் விளையாட்டுக்கள் அனைத்தும் அழியும் சூழலுக்கு சென்று விட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியது மகிழ்ச்சி. ஆனால், அனைத்து வீர விளையாட்டுக்களையும் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.

'சண்டை கோழிகளை தங்களது பிள்ளைகளாக பாவித்து வரும் தங்களை போன்றவர்களிடம் எந்தவிதமான கருத்தும் கேட்காமல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட சேவல்கள் அழிந்து வருவதால் நல்ல மரபணு பரிமாற்றம் தடைபடுகிறது' என்று அவர் கூறினார்.

அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சண்டை சேவல்களை வளர்த்து வருவதாக பாரி தெரிவித்தார்.

இது குறித்து விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'மனிதர்களிடம் இல்லாத ஒரு மேலான குணம் சண்டைக் கோழிகளிடம் உள்ளன. அவைகள் எதிரிகளை ஒருபோதும் முதுகில் தாக்குவதில்லை, நேருக்கு நேராக மோதியே எதிரியை வீழ்த்துகின்றன. இத்தனை சிறப்பு மிக்க தமிழர்களின் வீர விளையாட்டுக்களின் ஒன்றான, சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பது மட்டுமே தென் மாவட்ட இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்