ஊழல் குற்றச்சாட்டு: நாராயணசாமியின் சவாலும், கிரண் பேடியின் பதில் சவாலும்

கிரண் பேடி படத்தின் காப்புரிமை Getty Images

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் மீது துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அளித்த ஊழல் புகாரை, கிரண் பேடி பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டது, புதுவை முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையே இருக்கும் கசப்பான உறவை மேலும் கசப்பாகியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாய்மொழியாகத் தெரிவித்த புகாரை நிரூபிக்க முடியாவிட்டால் கிரண் பேடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும் நாராயணசாமியும், அவருக்கு பதிலடியாக சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் சவால் விடுங்கள் என்று கிரண் பேடியும் கூறியுள்ளனர்.

புதுச்சேரி முதல்வர், அவரது மகன் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் தொடர்ந்து ஊழலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, அண்மையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து புகார் கூறியிருந்தார்.

தனவேலு கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "ஒருவர் வந்து புகார் கொடுத்தால் அது எழுத்துப்பூர்வமாக ஆதாரங்களோடு இருக்க வேண்டும். அந்த ஆதாரங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும். அதில் உண்மை இருந்தால் அது சம்பந்தமாக காவல்துறைக்கோ சிபிஐக்கோ அனுப்ப வேண்டும். ஆதாரமில்லாமல், ஆவணங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை வாய்மொழியாக கூறியதை கவர்னர் ஒரு பத்திரிக்கைச் செய்தியாக வெளியிடுவது, அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை எனக் காட்டுகிறது."

"நானோ, என்னுடைய மகனோ, என் குடும்பத்தை சேர்ந்த யாராவது நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டிப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன். ஆனால் ஆதாரமில்லாமல் ஒருவர் வாய்மொழியாக தெரிவித்த புகாரை பத்திரிகைச் செய்தி கொடுத்த கிரண்பேடி, அந்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிடில் பொதுவாழ்வில் இருந்து விலக தயாரா?" என தெரிவித்தார்.

"மாண்புமிகு முதல்வர் அவர்களே உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரிடம் சவால் விடுங்கள். அவர்தான் உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்," என முதலமைச்சர் நாராயணசாமியின் சவாலுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார் கிரண் பேடி.

"சட்டமன்ற உறுப்பினர் என்னிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தபோது, புதுச்சேரியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு சென்று அணுகுங்கள் என்று அவரிடம் கூறினேன். சிபிஐ விசாரணை செய்தால் அதை நேரடியாக எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு எதிரான ஆதாரங்களை பொதுதளத்தில் வைக்கச்சொல்லி சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் சவால் விடுங்கள். அல்லது சட்டசபையில் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்து சபையில் இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினரை விவாதிக்க சொல்லுங்கள். அங்கே முதல்வரின் கருத்துகளையும் தெரிவிக்கலாம். உங்கள் சக்தியை என்னிடத்தில் வீணாக்காதீர்கள். உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது கவனத்தை செலுத்துங்கள்," என தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், "கட்சியில் ஏதேனும் பிரச்சனை என்றால் கட்சியில் விவாதிக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தூண்டுதலால் தனவேலு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கட்சிக்கு எதிராக செயல்பட்டது குறித்து விளக்கம் கேட்க தனவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேலிடத் தலைமை எடுக்கும்," என தெரிவித்தார்.

Image caption புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு

காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கூறுகையில், "ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவந்த என்னை முதல்வரும், அமைச்சர்களும் அழைத்துப் பேசவில்லை. ஊழல் இல்லை என முதல்வர், அமைச்சர்கள் கூறுவது பொய், நிச்சயமாக ஊழலை வெளிக்கொண்டு வருவேன். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு புதுவை மாநிலத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. நான் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால் என் மீது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராகுல்கந்தி நடவடிக்கை எடுக்கலாம். நான் வெளிக்கொண்டு வருவதாக சொன்ன அனைத்து ஊழல்கள் குறித்த பட்டியலை விரைவில் வெளியிடுவேன்," என்றார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளை சபாநாயகரிடம் சென்று முறையிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை சொல்வதற்கு நீதிமான் நேர்மையாக இருக்கவேண்டும், என்னுடைய குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்து அதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும். ஆனால் குற்றமே நீதிமான் மீது இருக்கும் பட்சத்தில், அவரிடம் சென்று சொல்லும்போது எங்கிருந்து நீதிக் கிடைக்கும். அதனால் சபாநாயகரிடம் சொல்வதில் எந்த பலனும் இல்லை," என தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :