கரீம் லாலா: மும்பையை அதிர வைத்த தாதா குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது ஏன்?

கரீம் லாலா படத்தின் காப்புரிமை WIKIPEDIA
Image caption கரீம் லாலா

(இக்கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

இறந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த கால தாதாவான கரீம் லாலாவின் பெயர் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

மகாராஷ்டிராவின் சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தன்னையும் அறியாமல், கடத்தல் தாதா கரீம் லாலாவை இந்திரா காந்தி கூட சந்தித்திருக்கிறார் என்று சமீபத்தில் கூறியதை அடுத்து கரீம் லாலா பற்றி மீண்டும் பேச்சு எழுந்துள்ளது.

திட்டமிட்டு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது கரீம் லாலாவை சந்திக்க இந்திரா காந்தி அங்கு சென்றார் என்று எல்லோரும் கூறுகின்றனர்.

தெற்கு மும்பையின் பிரதான பகுதியான பைதோனியில் கரீம் லாலாவின் அலுவலகம் இருந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படம் இப்போது கவனத்தை ஈர்க்கும் விஷயமாகியுள்ளது.

தாவூத் இப்ரஹீம் காலத்துக்கு முந்தைய காலத்தில் மும்பையை அச்சுறுத்தி வந்த கரீம் லாலாவும் அவருடைய கும்பலைச் சேர்ந்தவர்களும் அச்சத்துக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர்.

தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஹாஜி மஸ்தான் அரசு நிர்வாகம் நடைபெறும் மந்திராலயாவுக்கு (மஹாராஷ்டிர அரசு நிர்வாகத்தின் தலைமையகம்) சென்று வந்தது உண்டு. இந்து - முஸ்லிம் மோதல்களின்போது நடந்த பல பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு 1993ல் இந்து - முஸ்லிம் மோதல் உச்சகட்டத்தில் இருந்த சமயத்திலும், அதுபோன்ற ஒரு பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

தங்கள் வாழ்வின் பிற்காலத்தில் இருவருமே தங்களின் அமைப்புகளுக்காகப் பணியாற்றினர். தலித் - முஸ்லிம் சுரக்சா மகாசங்கம் என்ற தந்து அரசியல் அமைப்பின் செயல்பாடுகளில் ஹாஜி மஸ்தான் தீவிர ஈடுபாடு கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வந்த பக்தூன் அல்லது பதான் பழங்குடியின மக்கள் நலன்களுக்காக உழைப்பதுபோல காட்டிக்கொண்ட பக்தூன் ஜிர்காய் ஹிந்த் அமைப்புடன் கரீம் லாலா தீவிர ஈடுபாடு கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெஷாவரில் கான் அப்துல் கப்பார் கான் மற்றும் மகாத்மா காந்தி

கரீம் லாலாவே பதான் பழங்குடியினத்தவர்தான். மிக இளம் வயதில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அவர், அவருடைய சித்தாந்தங்களுக்கு நேர் எதிரான பாதையில் செயல்படத் தொடங்கினார்.

இந்தியாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில், சூதாட்ட கிளப் தொடங்கி தன் செயல்பாடுகளை ஆரம்பித்தார். சூதாட்டத்தில் தோற்றவர்கள் வீட்டுச் செலவுகளுக்காக கான் தரப்பினரிடம் இருந்து பணம் கடன் வாங்குவார்கள்.

ஒவ்வொரு மாதம் 10 ஆம் தேதியும் இந்தப் பணத்துக்கு வட்டி வாங்கத் தொடங்கினால், அவர்கள் தன்னிடம் இருந்து கடன் வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள் என்று அவர் யோசித்தார். ஆனால், ஒவ்வொரு 10 ஆம் தேதியும் அவருடைய கஜானா நிரம்பி வழியத் தொடங்கியது. அப்படித்தான் அவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலைத் தொடங்கினார்.

கடைசியாக, வீடு, கட்டடங்களைக் காலி செய்ய மறுப்பவர்களை தன்னுடைய குண்டர்களை வைத்து காலி செய்யும் தொழிலிலும் இறங்கினார். அவருக்கு 50 வயதானபோது அவர் மீது மரியாதை வைத்திருந்த ஒருவர், தங்கத்தால் ஆன கைத்தடி ஒன்றை அவருக்குப் பரிசளித்தார்.

அது எப்போதும் அவருடனே இருக்கும் பொருளாகிவிட்டது. ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு, கைத்தடியை விட்டு வந்துவிட்டால், அதை எடுக்கும் துணிச்சல் யாருக்கும் வந்தது கிடையாது.

அந்த இடத்தை காலியாகவே வைத்திருப்பார்கள். அந்த கைத்தடி என்பது லாலாவே அமர்ந்திருப்பது போல கருதப்பட்டது. சில தீயவர்கள் லாலா வந்திருப்பதற்கு இணையாக அவருடைய கைத்தடியை பயன்படுத்தத் தொடங்கினர். காலி செய்ய மறுப்பவர்களை காலி செய்வதற்கு மிரட்டுவதற்கு அந்தத் தடியை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

Image caption 1998இல் மும்பை நகரம்

ஒரு வீட்டின் கதவுக்கு வெளியே ஒரு கைத்தடி வைக்கப்பட்டால், லாலாவுடன் மோதுவதற்குப் பயந்து, அந்த வீட்டில் வசிப்பவர் அவசர அவசரமாக காலி செய்துவிடுவார். சட்டபூர்வமற்ற ஒரு நோட்டீஸ் போல அதை பயன்படுத்தினார்கள்.

தெற்கு மும்பையில் மிரட்டல் பாணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், நியாயமாக நடந்து கொள்பவர் என்றும் கருதப்பட்டார். தெற்கு மும்பையில் பிரபலமாகக் கருதப்பட்ட சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த கங்குபாய் கதேவாலி என்ற பெண், தன்னை பதான் பழங்குடியைச் சேர்ந்த சௌகத் கான் என்பவர் இரண்டு முறை பாலியல் வல்லுறவுசெய்துவிட்டார் என்று கரீம் லாலாவிடம் முறையிட்டார்.

அதில் கரீம் லாலா தலையிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதுடன், சௌகத் கானை கடுமையாக அடித்து உதைத்தார். கரீம் லாலாவின் கையில் கங்குபாய் ராக்கி கட்டி தன்னைக் காப்பாற்றிய சகோதரராக ஏற்றுக் கொண்டார். பாலிவுட் உலகைச் சேர்ந்த சஞ்சய் லீலா பன்சாலி இப்போது இதை தன் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார். கங்குபாயாக அலியா பட் நடித்து வருகிறார்.

மும்பையில் கடத்தல் கும்பல்கள் உருவானதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது பலருக்குத் தெரியாது. தங்கம் கடத்தும் செயல்களுக்கு ஆள் பலம் தருவதாக ஹாஜி மஸ்தானுக்கு கரீம் லாலா உறுதி அளித்தார்.

கரீம் லாலா இல்லாமல் போயிருந்தால், தங்கம் கடத்தும் தொழிலில் ஹாஜி மஸ்தான் வளர்ந்திருக்கவே முடியாது. கரீம் லாலாவின் ஆள் பலம்தான் ஹாஜி மஸ்தானின் கடத்தல் வேலைகள் வளர உதவிகரமாக இருந்தன. கரீம் லாலா ஆதரவு இருந்ததால் மஸ்தான் சொகுசாக இருக்க முடிந்தது.

தாவூத்தின் போலீஸ் கான்ஸ்டபிள் தந்தை இப்ரஹிம் கஸ்கருக்கும், கரீம் லாலா மற்றும் ஹாஜி மஸ்தானுக்கும் இடையில் நட்பு ஏற்படாமல் போயிருந்தால், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற பாதையை தாவூத் தேர்வு செய்திருக்க மாட்டார்.

கரீம் லாலா அல்லது ஹாஜி மஸ்தானிடம் இருந்து பண வெகுமதி எதையும் கான்ஸ்டபிள் இப்ரஹிம் கஸ்கர் பெறாவிட்டாலும், அவருடைய மகன் தாவூத் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நியாயம் குறித்த சிந்தனைகளுக்கு வெகுதொலைவில் அவர் இருந்தார். தாதாக்களை போல தாமும் வாழ வேண்டும் என்று தாவூத் விரும்பினார். மற்ற எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட வேண்டும் என்று விரும்பினார்.

படத்தின் காப்புரிமை RAINDROP
Image caption கங்குபாய் திரைப்படத்தின் போஸ்டர்

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்திற்குப் பிறகு ஹாஜி மஸ்தானும், கரீம் லாலாவும் கைது செய்யப்பட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டது. ஹாஜி மஸ்தான் பாலிவுட் சினிமாவில் இறங்க விரும்பினார். தன்னுடைய நற்பெயரில் அக்கறை கொண்டிருந்த கரீம் லாலா தனக்கு நற்பெயரை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்தார்.

சஃபாரி சூட்டில், ஏறத்தாழ ஏழு அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கருப்புக் கண்ணாடி அணிந்தபடி வருவார். அப்போது தாவூத் இப்ரஹிம் குறிப்பிடத்தக்க கோஷ்டித் தலைவனாக உருவெடுத்துக் கொண்டிருந்தார். பதான்களை குறி வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கரீம் லாலாவின் உறவினர் சமத் கான் மற்றம் லாலாவுக்கு நெருக்கமான மற்ற பதான்களை கொலை செய்தபோதிலும், கரீம் லாலா அவருடைய குறியாக இருக்கவில்லை.

கடைசியாக மெக்காவில் அவர்கள் சமாதானம் செய்து கொண்டனர். அங்கு உணர்வுப்பூர்வமாக இணைந்த அவர்கள் கட்டித் தழுவிக் கொண்டனர்.

ஹாஜி மஸ்தான் மற்றும் கரீம் லாலாவுக்கு முஸ்லிம்கள் மரியாதை கொடுக்கத் தொடங்கினர். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர்களை அழைத்தனர். சமூக செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

அதுபோன்ற ஒரு தருணத்தில் இந்திரா காந்தியுடன் இருந்த காட்சியை புகைப்படமாக எடுத்துவிட்டனர். கரீம் லாலா ஒருபோதும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பி ஓடியதில்லை. அவர் மீது நீண்ட குற்ற வழக்குப் பட்டியல் எதுவும் கிடையாது. 1990களில் கட்டடத்தை காலி செய்வது தொடர்பான ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவ்வளவுதான்.

(வெள்ளி தேவர் மூத்த புலனாய்வு செய்தியாளர், மும்பையில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிரைம் செய்திகள் சேகரித்தவர்.)

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்