ரஜினிகாந்திற்கு பதிலடி கொடுத்த முரெசொலி: "இதை வைத்திருந்தால் தமிழன் என்று பொருள்"

ரஜினிகாந்திற்கு பதிலடி படத்தின் காப்புரிமை Getty Images

முரசொலி படிப்பவர்கள் தி.மு.கவினர் என்றும் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு பதில் தரும் விதமாக, முரசொலி படிப்பவர்கள் யார் என அந்த நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் நடந்த துக்ளக் இதழின் பொன் விழா நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன் பேச்சின் இடையில் "முரசொலியை வைத்திருந்தால் தி.மு.ககாரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிறலாம்" என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது பேச்சுக்குப் பதில் சொல்லும் வகையில் தலையங்கம் ஒன்றை முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில், "முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவன் என்று பொருள். எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். ஒடுக்கப்பட்ட சமூகத்தவன், தன்னை ஒடுக்கியவர் யார் என உணரத் தொடங்கியவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமையில்லை; தனக்கு யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்" என வரிசையாக பட்டியலிட்டுள்ளது முரசொலி.

மேலும், "முரசொலி வைத்திருந்தால், இந்தித் திணிப்பை எதிர்ப்பவன் என்றும் சமஸ்கிருத மயமாக்கலை எப்போதும் எதிர்ப்பவன் என்றும் மொழிக்காக தனக்குத்தானே சிதைவைத்த தியாகத்தின் தொடர்ச்சி என்று பொருள். சமூகத்தின் உயர்வுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும் சமூக நீதியே அடித்தளம் என நினைப்பவன் என்று பொருள்" என்றும் பதிலளித்துள்ளது.

இறுதியாக, "முரசொலியை நீங்கள் வைத்திருந்தால், மனிதன் என்று பொருள்" என்றுகூறி அந்தத் தலையங்கம் முடிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு தி.மு.கவிலிருந்து யாரும் அதிகாரபூர்வமாக பேசாத நிலையில், இந்தத் தலையங்கம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்