உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்: உத்தரகாண்ட் ரயில் நிலையங்களில் விரைவில் அமல்

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: உத்தராகண்ட் ரயில் நிலையத்தில் இனி உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்

படத்தின் காப்புரிமை Zzvet / getty

உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ராடூன் ரயில் நிலையத்தில் உள்ள அடையாளப் பலகைகள் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறுகிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி

வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் அடையாளப் பலகைகளில் இந்த மாற்றம் செய்யப்படும். தற்போது இந்தி, ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதப்பட்டிருக்கும் பலகைகள், இனி இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்படும்.

ரயில்வே பதிவேட்டில் உள்ள விதிகளின்படி, ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியில் இருக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2010ஆம் ஆண்டு, உத்தராகண்ட் அரசாங்கம், அம்மாநிலத்தின் இரண்டாம் மொழி அந்தஸ்தை சமஸ்கிருதத்திற்கு அளித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டது. இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அறிவித்தது உத்தராகண்ட் மாநிலம்தான்.

அப்போதைய முதலமைச்சர் ரமேஷ் போக்ரியல், சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். 2019ல் இதே காரணத்திற்காக இமாச்சல பிரதேசமும் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அறிவித்தது.

தினத்தந்தி: பெண்ணை முட்டாமல் சென்ற காளை - சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

படத்தின் காப்புரிமை DINATHANTHI

சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் பாய்ந்து வந்த காளையின் எதிரே 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் சிக்கினார். ஆனால் அந்த காளை அவர்களை முட்டாமல் தாவி சென்ற பரபரப்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பொங்கலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிராவயலில் நடத்தப்படும் மஞ்சுவிரட்டு புகழ்பெற்றதாகும். அங்கு இந்த ஆண்டுக்குரிய மஞ்சுவிரட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும் திடலில் கூடியிருந்தனர்.

அந்த திடலில் ஆங்காங்கே காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட தொடங்கினர். இளைஞர்கள் ஆர்வத்துடன் விரட்டி சென்று காளைகளை அடக்க முயன்றனர்.

இந்தநிலையில் அந்த திடலில் கைக்குழந்தை மற்றும் சிறுவனான மற்றொரு மகனுடன் தாய் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவிழ்த்து விடப்பட்ட வெள்ளை நிற காளை ஒன்று அசுர வேகத்தில் பார்வையாளர்களை மிரட்டியவாறு பாய்ந்து வந்தது.

2 குழந்தைகளுடன் எதிரே நடந்து வந்த பெண்ணை நோக்கி அந்த காளை ஓடியது. இதனால் பதறிய அவர் அந்த காளையிடம் இருந்து தப்பிப்பதற்காக குழந்தைகளுடன் தரையில் படுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த காளை சட்டென தனது வேகத்தை குறைத்துக்கொண்டு குழந்தைகளுடன் படுத்த அந்த பெண்ணை ஒன்றும் செய்யாமல் அவர்களை தாண்டி பாய்ந்து சென்றது.

தினமணி: ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க ஆலோசனை

ஜல்லிக்கட்டு விளையாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், `` ஜல்லிக்கட்டை சி.டி மூலம் மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட உள்ளோம். ஆனால் ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்த்தால் பாடச்சுமைகள் ஏறும். இருப்பினும் இது பற்றி கல்வியாளர்கள், மூத்த அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும்`` என தெரிவித்த்தாக தினமணி செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்