ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க ஜெகன்மோகன் அமைச்சரவை ஒப்புதல் - விவசாயிகள் எதிர்ப்பு

ஜெகன் மோகன் ரெட்டி படத்தின் காப்புரிமை FB / ANDHRAPRADESHCM
Image caption ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க வகை செய்யும் மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை இடம் பெறும் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் மசோதாவை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

'அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி மசோதா 2020' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, ஆந்திரப்பிரதேச மாநிலத்தை பல்வேறு கோட்டங்களாகப் பிரிப்பதற்கும், கோட்ட அளவிலான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு வாரியங்களை நிறுவுவதற்கும் வழிவகை செய்கிறது.

இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையின் நீட்டிக்கப்பட்ட கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஆந்திர அரசு முன்வைத்துள்ள இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், அம்மாநிலத்தின் தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை ஆகியவை விசாகப்பட்டினத்திலும், உயர்நீதிமன்றம் கர்னூலிலும், சட்டப்பேரவை அமராவதியிலும் அமைக்கப்படும்.

மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, அமராவதியை தலைநகராக அறிவித்து, அதை நிர்மாணிப்பதற்காக சந்திரபாபு தலைமையிலான முந்தைய அரசு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி இருந்த நிலையில், தற்போதைய அரசின் இந்த மாற்று அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமராவதியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகளை கலைப்பதற்காக காவல்துறையினர் நடத்திய தடியடியில் சில காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போன்று, மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருவதால், பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவை வளாகம் அருகே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகராக அமராவதியே தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ள அம்மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் போட்சா சத்யநாராயணா, "ஆந்திரப்பிரதேசத்திலுள்ள 13 மாவட்டங்களை மேம்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம். ஒரே இடத்தில் அரசு இயந்திரத்தின் அனைத்து பிரிவுகளும் இருப்பது நல்லதல்ல. மேலும், அமராவதியை மட்டும் தலைநகரமாக்கும் திட்டத்தில் பல்வேறு நிதிசார்ந்த பிரச்சனைகள் இருப்பதாலேயே இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்