பெரியார் பற்றிய பேச்சு: "ரஜினி உரிய விலையை கொடுப்பார்" - கி. வீரமணி

பட மூலாதாரம், Getty Images
ரஜினிகாந்த்
பெரியார் தொடர்பாக நடிகர் ரஜினி காந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய பேச்சு பற்றி கேட்டபோது, ரஜினி காந்த் அதற்கு உரிய விலை கொடுப்பார் என்று தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மேற்கொள்ள விழிப்புணர்வு பிரசாரத்துக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீரமணி தூத்துக்குடி வந்திருந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ரஜினி காந்த் பேச்சு பற்றி கருத்து கேட்கப்பட்டது. "அவருக்கு இருக்கும் மரியாதை என்ன என்பது தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த் தவறான தகவலைப் பேசும்போது அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால் பேசுவது எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். தூத்துக்குடி நகரில் நடந்த பெரிய துப்பாக்கிச் சூடு தொடர்பாக அவர் என்ன சொன்னார் என்பதே அவர் யார் என்பதை புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாகிறது. ஏழு பேரின் நிலை என்ன என்று கேட்டபோதே, எந்த ஏழு பேர் என்று கேட்ட சிறந்த அரசியல் ஞானி அவர்" என்று குறிப்பிட்டார் வீரமணி.
2- 3 ஆண்டுகளாக நீட் தேர்வு நிலை நிறுத்தப்பட்டுவிட்டதால் இனி இதை நிறுத்துவார்களா என்று சிலர் நினைக்கலாம். திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் 21 ஆண்டுகள் நுழைவுத் தேர்வுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. அத்தகைய இயக்கங்கள் இப்போது ஒன்று சேர்ந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN
நீட் தேர்வு நடத்துவதில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. ஆள்மாறாட்டங்கள் நடந்திருக்கின்றன. நீட் தேர்வு விலக்குக்கு 2 முறை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. எல்லா விஷயத்திலும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தலையாட்டி கொண்டிருக்கும் தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கூறிய அவர், தற்பொழுது நுழைவுத் தேர்வு, 5, 8, 9, 10 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று கொண்டுவந்து இடைநிற்றலை அதிகரிக்கும் அளவுக்கு இதை ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த புதிய கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டுவரும் அளவுக்கு இருக்கும் என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: