கோவையில் காணாமல் போன சிறுமிக்காக தீபாவளி, பொங்கலை புறக்கணித்து காத்திருக்கும் கிராமம்
- மு. ஹரிஹரன்
- பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி தொலைந்துபோய் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் மீட்கப்படாததால் கிராமவாசிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை கொண்டாடாமல் சிறுமிக்காக காத்திருக்கின்றனர்.
குமாரபாளையம் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் தறி ஓட்டியும், தினக்கூலிகளாகவும் பணிபுரிந்து, ஓட்டு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசித்துவரும் ஜெயக்குமார் மற்றும் கவிதா தம்பதியின் மகள் சாமினி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கையில் காணாமல் போய்விட்டார்.
சிறுமி தொலைந்த சம்பவம் குறித்து பேசிய அவரது தந்தை ஜெயக்குமார், ''நானும் எனது மனைவி கவிதாவும் தறி ஓட்டும் வேலை செய்து வருகிறோம். காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீட்டுக்கு வருவோம். நாங்கள் வேலைக்கு சென்றபின்னர் எங்களது மகன் வெற்றிவேல் (வயது 7) மற்றும் மகள் சாமினி (வயது 5) ஆகிய இருவரையும் எனது பாட்டி கவனித்து கொள்வார். அக்டோபர் 5ஆம் தேதி மாலை, வீட்டின் எதிரே உள்ள மைதானத்தில் இருவரும் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கையில் சாமினி காணாமல் போய்விட்டாள்."
"இரவு வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். ஆனால், இன்று வரை எனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் காணாமல் போன அன்று எனது மனைவி, சாமினிக்கு மதிய உணவு ஊட்டிவிட்டு வேலைக்கு சென்றார், திரும்பி வந்து பார்க்கையில் மகள் தொலைந்துவிட்டாள் என தெரிந்தது முதல் இன்றுவரை யாரிடமும் சரியாக பேசுவதில்லை, சாப்பிடுவதில்லை, வேலைக்கும் செல்லவில்லை. எனது மனைவி மட்டுமல்ல, நானும், உறவினர்களும், இப்பகுதி மக்களும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே இருக்கிறோம்," என உருக்கத்தோடு தெரிவித்தார்.
கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற தன்னார்வ அமைப்பு, சாமினி தொலைந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றது.
கவிதா தனது மகளின் படத்துடன் சிறுமியின் தாய் கவிதா.
"குழந்தை கடத்தல் செய்பவர்களிடம் சிக்கிய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை 108 நாட்களில் கண்டுபிடித்தோம், திருவண்ணாமலையில் 47 நாட்களுக்கு பிறகு ஒரு சிறுமியை கண்டுபிடித்துள்ளோம். அதேபோல் சூலூரில் காணாமல் போன சாமினியையும் தேடி கண்டு பிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். சாமினியின் புகைப்படம் மற்றும் தொடர்பு எண்களோடு நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டிவருகிறோம், சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகிறோம்."
"சிறுமியின் பெற்றோரிடமும் காவல் துறையினரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் சிறுமி கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது. ஆனால், ஊர் மக்கள் விசாரணைக்காக அழைத்தாலும் பயந்துகொண்டு பேச மறுக்கின்றனர். எங்களது குழு மேற்கொண்ட ஆய்வின்படி சாமினி அந்த கிராமத்தில்தான் இருக்கிறார், வெளியில் இருந்து யாரும் வந்து கடத்திச்செல்ல வாய்ப்புகள் மிகக்குறைவு," என கூறினார் இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி.
கோவை அருகே காணாமல் போன சிறுமி
குமாரபாளையம் கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடுகளும், வயல்வெளிகளும் காணப்படுகிறது. இப்பகுதிகளிலும் தொடர்ந்து ஊர்மக்கள் தேடி வருகின்றனர்.
"சிறுமி தொலைந்து போன சம்பவத்தையடுத்து இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை புறக்கணித்துவிட்டோம். மேலும், இன்னும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காதது அனைவரின் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை வெளியில் விடுவதற்கே பயமாக இருக்கிறது" என்கிறார் ஒரு கிராமவாசி.
சிறுமியை மீட்டுத்தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் மீட்க்கப்படாததால், அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கடும் அச்சத்தில் தங்களின் குழந்தைகளை வளர்த்துவருதாக தெரிவிக்கின்றனர்.
தொலைந்துபோன சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மட்டுமே மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் - விவசாயிகள் எதிர்ப்பு
- சீனாவின் புது வைரஸ் தலைநருக்குப் பரவியது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்கானது
- "ஹைட்ரோ கார்பன் ஆய்வு விதி மாற்றம் பற்றி மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை" - முதல்வர்
- "இந்தியா மீது எந்த பதில் நடவடிக்கையும் இல்லை" : மலேசிய பிரதமர் மகாதீர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: