இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள்: 2013க்குப் பிறகு 3 மனுக்கள் ஏற்பு, 32 மனுக்கள் நிராகரிப்பு

இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள்: 2013க்குப் பிறகு 3 மனுக்கள் ஏற்பு, 32 மனுக்கள் நிராகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கைதிகளின் கருணை மனுக்களை கையாளும் போது இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய ஆண்டுகல் 44 மனுக்களில் 40 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 2013க்குப் பிறகு 3 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு, 32 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நிராகரித்தார். 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்திய குடியரசுத் தலைவர்கள் மூன்று கருணை மனுக்களை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் 32 கருணை மனுக்களை குடியரசுத் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், 2000 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், 44 பேரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர்கள் முடிவு எடுத்து, நான்கு மனுக்களை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 40 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்களின் மரண தண்டனை ஆயுள் சிறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2012 வரையில் குடியரசுத் தலைவர் மிகவும் ``கருணையாக'' இருந்திருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான மனுக்களில், குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டில் (ஜூலை 2017 - 2012 ஜூலை) இதில் பெரும்பகுதி காலத்தில் பதவியில் இருந்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி 2012 ஜூலையில் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017 ஜூலையில் பதவியேற்றார்.

பட மூலாதாரம், Prakash singh

``ஒட்டுமொத்தமாக 60 கருணை மனுக்கள் மீது இந்தியக் குடியரசுத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். 24 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது'' என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு, அரசியல்சாசனத்தின் பிரிவு 72-ன் கீழ், மன்னிப்பு வழங்க, தண்டனையை நிறுத்தி வைக்க, தண்டனையைக் குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

குற்றவாளி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் இறுதியாக மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டால், அவருக்காக யார் வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் அலுவலகம் அல்லது உள்துறை அமைச்சகத்துக்கு கருணை மனு அனுப்பலாம். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநரிடமும் கருணை மனுவை சமர்ப்பிக்கலாம். அவர் அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார்.

குற்றவாளி சிறையில் இருந்து அதிகாரிகள், வழக்கறிஞர் அல்லது குடும்பத்தினர் மூலம் கருணை மனு அனுப்பலாம்.

குடியரசுத் தலைவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக அனுப்பும் தகவல், அமைச்சரவையின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப கருணை மனு மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதி கூறுகிறது. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் செயல்படுவார்.

விரைந்து முடிவெடுத்தல்

முகேஷ் மனு மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு எடுத்தது தான், இதுவரை விரைவாக எடுக்கப்பட்ட முடிவாக அமைந்துள்ளது. ஒரே நாளில் அவர் முடிவு எடுத்துள்ளார். மத்திய அமைச்சரவையிடம் இருந்து கடந்த வாரம் தகவல் வந்த சில மணி நேரங்களில் குடியரசுத் தலைவர் முடிவு எடுத்துள்ளார்.

கடந்த காலங்களில், குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க பல ஆண்டுகள் தாமதம் ஆனது உண்டு.

தங்கள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க பத்தாண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்ட நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்., தங்கள் மனுக்கள் மீது முடிவெடுக்க ``தேவையற்ற தாமதம்'' ஏற்படுவதாகவும், தங்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

பட மூலாதாரம், Getty Images

கடைசியாக வி. ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி. சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் மரண தண்டனையை குறைத்து உச்ச நீதிமன்றம் 2012ல் தீர்ப்பளித்தது.

``கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடிவு எடுக்க உதவும் வகையில் அரசு தனது ஆலோசனையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. கருணை மனுக்கள் மீது இப்போது முடிவு எடுக்கப்படுவதை விட, இன்னும் வேகமாக முடிவு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று அப்போது நீதிபதிகள் கூறினர்.

இதற்கு முந்தைய முடிவில், பிகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 2006 ஆம் ஆண்டு ஒரு வீட்டுக்குத் தீ வைத்து, அங்கே தூங்கிக் கொண்டிருந்த பெண் மற்றும் ஐந்து குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜகத் ராயின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்று 2013ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து 2016 ஜூலை மாதம் ராய் கருணை மனு சமர்ப்பித்தார்.

1992 ஆம் ஆண்டில், கயா அருகே பாரா கிராமத்தில் ஆதிக்க சாதியினர் 34 பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நான்கு பேரின் தண்டனையை 2017ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறைத்து உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு, இந்த தண்டனைக் குறைப்பை வழங்கினார்.

பாரா கொடூரக் கொலை என வர்ணிக்கப்பட்ட அந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணா மோச்சி, நான்ஹே லால் மோச்சி, பிர் குவேர் பாஸ்வான், தர்மேந்திர சிங் என்கிற தாரு சிங் ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. மிக சமீபத்தில் தண்டனை குறைப்பு நடந்தது அந்த சம்பவம்தான் என்று உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: