பெரியார் - ரஜினிகாந்த் விவகாரத்தில் தி.மு.கவின் அமைதி எதற்காக?

ரஜினிகாந்த் விவகாரத்தில் தி.மு.க. கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? படத்தின் காப்புரிமை Getty Images

ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதால் எழுந்த சர்ச்சையில் தி.மு.க. தரப்பிலிருந்து பெரிதாக பதிலடி தரப்படவில்லையென கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தி.மு.கவின் அமைதி எதற்காக?

கடந்த வாரம் துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், "முரசொலியை வைத்திருந்தால் தி.மு.ககாரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிறலாம்" என்று கூறினார்.

மேலும், "1971ல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு அடுத்த நாள், ரஜினிகாந்த் முரசொலியைக் குறித்துப் பேசியது சர்ச்சையானது. தி.மு.கவினர் இதற்கு சமூகவலைதளங்களில் பதிலளித்துவந்தனர். அதற்கு மறுநாள் வெளியான முரசொலியில், முரசொலி படிப்பவர்கள் யார் என்று கூறும் வகையில் நீண்ட தலையங்கம் ஒன்றை எழுதியது. ஆனால், அதில் ரஜினிகாந்தின் பெயர் இடம்பெறவில்லை.

தி.மு.கவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக சில கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். "முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி 'தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்" என்றும் "முரசொலி தமிழினத்தின் தன்மானத்தை உயர்த்திய முதுகெலும்பு. தேநீர்க் கடை, முடிதிருத்தும் நிலையங்களை படிப்பகங்களாக்கி, கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் பாடம் நடத்திய கழகத்தின் அறிவாயுதம். இது என்றும் எளியோரின் குரலாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்றும் கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஜினிகாந்த்

ஆனால், அடுத்த சில நாட்களில் சர்ச்சை, ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது தொடர்பாக உருவெடுத்தது. 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின்போது, ராமர் - சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும் செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகவும் அந்த விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது.

இது தொடர்பாக திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன; விளக்கங்களை அளித்தன. தி.மு.க. தரப்பிலிருந்து அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, "ரஜினிகாந்த் நடிகர். அரசியல்வாதி அல்ல. அவர் பெரியார் குறித்துப் பேசும்போது யோசித்துப் பேச வேண்டும்" என்று கூறினார்.

மேலும், தி.மு.கவினர் இது தொடர்பாக நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, ரஜினியின் கூற்றை மறுத்தனர். இதுதவிர, தி.மு.கவின் அடுத்தகட்ட தலைவர்கள் பெரிதாக கருத்துக்களைத் தெரவிக்கவில்லை.

ஆளும் அ.தி.மு.கவைப் பொறுத்தவரை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ரஜினியின் கருத்தைக் கண்டித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தந்தை பெரியார் மதிக்கப்பட வேண்டியவர். அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.கவினர் கண்டித்துப் பேசும் அளவுக்கு தி.மு.கவினர் பேசவில்லையென சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

தி.மு.கவின் அமைதி ஆச்சரியமளிப்பதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "பெரியாரை இந்த அளவுக்கு இழிவுபடுத்திப் பேசிய ரஜினி குறித்து தி.மு.க. தலைமையிடமிருந்தும் வேறு மூத்த தலைவர்களிடமிருந்தும் பெரிய எதிர்வினை இல்லை. தி.மு.க. ஏன் இப்படி செய்கிறது என்பது புரியவில்லை. ரஜினியின் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒரு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்யவிருக்கிறது. அதனால்தான் இந்த அமைதி என சமூக வலைதளங்களில் பலரும் எழுதுகிறார்கள். ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் அளவுக்குகூட தி.மு.க. எதிர்வினை ஆற்றாதது ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் அவர்.

ஆனால், தி.மு.க. இதனை ஏற்கவில்லை. ரஜினியைத் தாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன்.

"நானே பல ஊடகங்களில் கண்டித்துப் பேசியிருக்கிறேன். தலைவரைப் பொறுத்தவரை ஒரு முறை பேசிவிட்டார். அதற்கு மேல் பேச ஏதுமில்லை. ரஜினி பேசியதை கண்டுகொள்ளக்கூடாது என்பதுதான் நோக்கம். 1971ல் நடந்ததெல்லாம் ரஜினிக்கு என்ன தெரியும்? அப்போது அவருக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமே கிடையாது. அவர் அரசியலிலேயே இல்லையெனும்போது, அவர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.

"எங்களுடைய அரசியல் எதிரி அ.தி.மு.கவும் பா.ஜ.கவும்தான். ரஜினி சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், அதையே விவாதித்துக்கொண்டிருப்பார்கள். உண்மையிலேயே பேச வேண்டிய விஷயங்கள் அடிபட்டுப்போய்விடும். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார் அவர்.

தி.மு.க. ரஜினிக்கு பதில் சொல்ல வேண்டாம் என நினைத்தால் அது சரியான முடிவுதான் என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி. செந்தில்நாதன். "அதற்கு அர்த்தம் ரஜினியின் வியூகத்தைப் புறக்கணிப்பது என்பதல்ல. மாறாக, ரஜினிக்கெல்லாம் பதில் சொல்லி, அதை தினமும் விவாதிப்பதிலிருந்து விலகிச் செல்வது. ரஜினி அரசியலில் இல்லாத நிலையில், அவர் சொன்ன கருத்தை வைத்துக்கொண்டு தினமும் விவாதிப்பது தேவையில்லாதது" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்