பா.ஜ.க. பிரமுகர் கொலை: "மதத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரியவில்லை" - காவல்துறை

விஜய ரகு

திருச்சியில் கொல்லப்பட்ட பா.ஜ.க. பிரமுகரின் கொலை மதத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரியவில்லையென திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் பால்ராஜ் தெரிவித்திருக்கிறார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புப் பாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜய ரகு. இவர் பாரதிய ஜனதாக் கட்சியின் பாலக்கரை பகுதியின் செயலாளராக இருந்துவந்தார். காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவராக பணியாற்றிவந்த விஜய ரகுவை, திங்கட் கிழமை காலையில் ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்டியது. இதன் பிறகு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மிட்டாய் பாபு என்பவரை காவல்துறை தேடி வருகிறது. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த 11ஆம் தேதி சிறையிலிருந்து வெளியில் வந்த மிட்டாய் பாபுவுக்கும் விஜய ரகுவுக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விரோதத்தின் காரணமாக விஜய ரகுவின் உறவினர் ஒருவர் முன்பு தாக்கப்பட்டிருக்கிறார்.

விஜய ரகுவின் கொலையைக் கண்டித்து காந்தி மார்க்கெட் பகுதியில் கடைகளை அடைக்கும்படி பா.ஜ.கவின் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க. தலைவர்களும் இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

Image caption விஜய ரகு

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், இந்தக் கொலை மதத்தின் அடிப்படையில் நடந்த கொலையாக தெரியவில்லையெனக் கூறியிருக்கிறார்.

"குற்றம் செய்தது யார் என்பது தெரிந்துவிட்டது. குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். குற்றவாளிகள் அனைவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. குறைந்தது இரண்டு மதங்களை சார்ந்தவர்கள். காவல்துறை விசாரணையின் அடிப்படையில் பார்த்தால், இது மதத்தின் அடிப்படையில் நடந்த கொலையாகத் தெரியவில்லை" என்றார் ஆணையர் அமல்ராஜ்.

மேலும், குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து பல தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியிருக்கும் காவல்துறை, குறைந்தது மூன்று பேர் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்