மத்திய பட்ஜெட் 2020: மத்திய அரசு வருமான வரியை குறைத்தால் அரசுக்கு சாதகம், பாதகம் என்னென்ன?

  • நிதி ராய்
  • பிபிசி வணிக செய்திப்பிரிவு
இந்திய பொருளாதார மந்தநிலை

பட மூலாதாரம், Getty Images

கடந்த 10 ஆண்டுகளிலேயே மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வரும் சூழலில் இன்று மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதமான 5%, கடந்த 11 ஆண்டுகளிலேயே மிகவும் குறைவான அளவு. தனிநபர் வாங்கும் திறன் கடந்த ஏழு ஆண்டுகளில் குறைவான நிலையில் உள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடுகள் குறைந்துள்ளன. உற்பத்தி துறையின் வளர்ச்சி 15 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது.

வேளாண்மை துறையும் கடைசி நான்கு ஆண்டுகளில் குறைவான வளர்ச்சியை இந்த நிதியாண்டில் பதிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி 3.5% எனும் அளவுக்குள் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே எப்போதும் இலக்கு வைத்திருக்கும். ஆனால், பணவீக்கம் அதை மீறியதால் விலைவாசி ஏறியுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்வது?

அரசு அதிக செலவு செய்வது தீர்வுக்கு ஒரு வழி என்கின்றனர் வல்லுநர்கள். உதாரணமாக உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் வேலைவாய்ப்புகளை உண்டாக்கலாம். 2019இல் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.5% என்கிறது சென்டர் பார் மானிட்டரின் இந்தியன் எக்கனாமி எனும் அமைப்பு.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேறு திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. அவர் பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை குறைத்துள்ளார்.

இதனால் அரசுக்கு வரும் வரி வருவாய் குறைவதால், செலவு செய்ய அரசிடம் நிறைய பணமில்லை.

"தனிநபர் வரிகளை குறைத்தால், அதில் மிச்சமாகும் பணத்தை மக்கள் செலவு அல்லது முதலீடு செய்வார்கள். இது பொருளாதாரத்துக்கு நல்லது. பெரிய, வளரும் பொருளாதாரங்களில் சில்லறை வர்த்தகத்தின் மூலம் அதிகமாக மக்கள் வாங்குவது மற்றும் பெரிய அளவிலான மூலதன முதலீடுகள் சரிவில் இருந்து மீள உதவும். பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கும் எளிதாக கடன் கிடைக்கச் செய்வதும் இப்போது முக்கியம், " என்கிறார் எம்கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் கே. ஜோசப் தாமஸ்.

தனிநபர் வரி எப்படி மாறலாம்?

லோக்கல் சர்க்கிள் எனும் அமைப்பு இந்தியா முழுதும் 80,000 பேரிடம் கருத்துக் கேட்டதில், வருமான வரி விலக்கு 2.5 லட்சம் ரூபாய் என்பதற்கு பதில் 5 லட்சம் ரூபாய் என்று மாற வேண்டும் என்று 69% பேர் கூறினார்கள்.

பட மூலாதாரம், Getty Images

எல்லா வருவாய் பிரிவினருக்கும் வருமான வரி குறைக்கப்பட வேண்டும் என்று 30% பேர் கூறினார்கள்.

வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

"வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் வருவாயை உயர்த்தி தங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டை அரசு அதிகரிக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். தனிநபர் வரியைக் குறைப்பது அதற்கான முக்கியஎதிர்பார்ப்பாக உள்ளது. இது இந்த பட்ஜெட்டில் சாத்தியமாகலாம். காரணம் தனிநபர் வருவாயை பெருக்கி, வாங்கும் திறனை அதிகரித்தால் சந்தை தட்டுப்பாட்டை அதிகரிக்க வைக்கலாம் என்று அரசு நம்புகிறது," என்கிறார் டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் திவ்யா பவேஜா.

சிலர் இது அரசுக்கு பாதகமாகலாம் என்கின்றனர். "வருமான வரி அரசுக்கு வரும் முக்கிய வருவாய்களில் ஒன்று. பொருளாதார மந்தநிலையால் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு குறையும் சமயத்தில் வருமான வரியை நம்பியே அரசு இருக்கும்போது, அதைக் குறைப்பது கடினம்," என்கிறார் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநர் கவிதா சாக்கோ.

ஏர் இந்தியா மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களை விற்று நிதி திரட்ட இந்திய அரசு முயன்று வருகிறது.

50க்கும் மேலான பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தி, அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்தினால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யவும் முடியும் என்றும் வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

மக்களையும் மகிழ்விக்க வேண்டும். அரசுக்கு வருமானத்தையும் பெருக்க வேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இது சவாலான பட்ஜெட்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: