பிரசாந்த் கிஷோர் - மு.க.ஸ்டாலின்: ஐ.டி நிறுவனத்தை நம்பி களம் இறங்கும் திமுக, என்ன காரணம்?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் வரவிருக்கிற 2021 சட்டமன்ற தேர்தலில் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பேக் நிறுவனம் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலில் வெற்றியை பெற, பிரசாந்த கிஷோரின் ஆலோசனை பெற்று வெற்றிபெற்றுள்ள நிலையில், ஐபேக் (Indian Political Action Committee) நிறுவனம் திமுக வலுவான வெற்றியைப் பெற உதவவுள்ளதாக அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

பிரஷாந்த் கிஷோரின் இந்தியன் பேக் நிறுவனத்தின் இணையதளத்தில், 2014ல் அந்த நிறுவனத்தின் ஆலோசனைப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பாஜக பெருவெற்றியை பெற்றது. அடுத்ததாக, 2015ல், பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ்குமாருக்காக பணியாற்றி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ததாக கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

2017ல் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் கேப்டன் அம்ரிந்தர் சிங்கின் வெற்றியை சாத்தியமாக்க விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்தினார் பிரஷாந்த் கிஷோர். தேர்தல் நேரத்தில், தனது வெற்றியை உறுதிசெய்த ஜோதிடர் பிரசாந்த் கிஷோர் என அம்ரிந்தர் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

2019ல், ஆந்திரப் பிரதேசத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியும் பிரசாந்தை தேர்தல் நேரத்தில் ஆலோசகராக நியமித்து, முதல்வர் பதவியை பிடித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. பாரம்பரியமிக்க அரசியல்கட்சியாக உள்ள திமுக ஏன் ஒரு தனியார் நிறுவனத்தை நம்புகிறது என்றும் தேர்தல் வெற்றியை பெறுவது கடினம் என்பதால் பிரசாந்த் கிஷோருடன் இணைந்துள்ளதா என திமுக செய்தித்தொடர்பாளர் ரவீந்திரனிடம் கேட்டோம்.

''2021ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி. எங்களது தேர்தல் வியூகத்தில் பிரசாந்த் கிஷோர் இணைந்துள்ளார். அவர் காட்டும் வழியில் மட்டும் சென்று வெற்றி பெற்றுவிடமுடியும் என புதிய அரசியல் கட்சிகளை போல நாங்கள் நினைக்கவில்லை. அவரையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். தேர்தல் வியூகங்களை சரியாக அமைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறோம்,'' என்கிறார் ரவீந்திரன்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

ஆழி. செந்தில்நாதன்

ஆனால் திமுக போன்ற ஒரு கட்சி தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த ஒரு நிறுவனத்தை நம்புவது ஆச்சரியம் அளிப்பதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளர் ஆழி.செந்தில்நாதன்.

''சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெருவாரியான வெற்றியை பெற்றது. இதற்குக் காரணம் அவர்களின் அரசியல் நிலைப்பாடு. தமிழகத்தில் மோதிக்கு எதிரான மனநிலை இருந்தது. திமுகவின் அரசியல் செயல்பாடுகளை மக்களும் அங்கீகரித்தார்கள் என்பதால் வெற்றி கிடைத்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலுக்காக ஒரு நிறுவனத்தை நம்புகிறார்கள் என்பது ஆச்சாரியமாக உள்ளது,'' என்கிறார் அவர்.

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட முடிவாக கருதப்படவேண்டும் என்று கூறும் அவர், ''தற்போதுள்ள அரசியல் சூழலில், எல்லா அரசியல் கட்சிகளும், அரசியல் நிலைப்பாட்டை விட மக்கள் மத்தியில் தங்களைப்பற்றிய சாதகமான எண்ணங்களை உருவாக்கி வெற்றி பெற உத்திகளை நம்புகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இந்த பந்தயத்தில் திமுக போன்ற கட்சிகளும் இருக்கின்றன என்பது வியப்பான ஒன்று,''என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: