கர்நாடகா பள்ளியில் நடந்த நாடகத்தால் சிறைக்கு சென்ற தாய் - நடந்தது என்ன?

ஷஹீன் பள்ளி

"எனக்கு இந்த நிலைமை ஏன் வந்தது என்று எனக்கு தெரியவில்லை," என்கிறார் நஸ்புனிசா.

இவர் வீட்டு வேலை செய்து தனியாக தன் குழந்தையை வளர்த்து வரும் 26 வயது தாய்.

இவரும் 52 வயதுள்ள ஃபரிதா பேகம் என்னும் ஆசிரியரும் கடந்த ஜனவரி மாதம் தேச துரோக வழக்கில் செய்து செய்யப்பட்டனர்.

ஃபரிதா பேகம் நஸ்புனிசா மகளின் ஆசிரியர். இவர்கள் இருவரும் முஸ்லிம்கள்.

அவர்கள் இருவரும், கர்நாடகாவில் உள்ள பிடார் மாவட்டத்தில் சிறை அதிகாரி அலுவலகத்தில் பிபிசியிடம் பேசினர்.

கண்ணீருடன் பேச தொடங்கிய அவர்கள், தாங்கள் திடமாக இருக்க முயல்வதாகவும் ஆனால் தங்களின் வாழ்க்கை திடீரென தலைகீழாய் மாறிவிட்டது என்றும் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் ஒரு பள்ளி நாடகம்.

இவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பிடார் மாவட்டத்தில் உள்ள ஷஹீன் பள்ளி சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து நாடகம் நடத்த ஏற்பாடு செய்தது. அதில் 9-12 வயதிலான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந்த நாடகத்தில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த நாடகத்தை லைவ்வாக பதிவிட்டனர்.

அந்த நாடகத்தில் தனது குடியுரிமையை நிரூபிக்க எந்தவித ஆவணங்களையும் காட்டப்போவதில்லை என்றும், `மோதியை செருப்பால் அடிக்கப்போவதாகவும்` வயதான பெண்மணி ஒருவர் தெரிவிப்பார்.

Image caption புகார் அளித்த ரக்‌ஷல்

இதுதான் தனது புகாருக்கு காரணம் என புகார் கொடுத்த நீலேஷ் ரக்ஷல் தெரிவிக்கிறார். இவர் தன்னை சமூக ஆர்வலர் என்கிறார்.

"மோதியை தவறாக பேசுவதற்கும், வெறுப்பை பரப்புவதற்கும் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக" இவர் புகார் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் மீதும் அந்த நாடகத்தை லைவ்வில் பதிவிட்ட பெற்றோர்கள் மீதும் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.

"அவர்கள் சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்த தவறான தகவல்களை பரப்ப முயன்றனர், முஸ்லிம் சமூகத்திற்கு இடையே அச்ச உணர்வை தூண்டினர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பிரதமரை செருப்பால் அடிக்கப்போவதாக கூற வைத்தனர்" என காவல்துறை கைது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பெண்கள் ஏன் கைது செய்யப்பட்டனர்?

ஜனவரி 21ஆம் தேதி ஷஹீன் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நாள் முழுவதுமே கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடாரில் உள்ள அந்த பள்ளியில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஷஹீன் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி தெளசீஸ் மடிகெரி, "ஷஹீன் பள்ளி சிறுபான்மை சமூகத்தினர் பயிலும் ஒரு பள்ளியாகும், இந்த பள்ளிக்கு 9 மாநிலங்களில் 43 கிளைகள் உள்ளன. பிடாரில் உள்ள பள்ளியில் 50% முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயில்கின்றனர்" என தெரிவித்தார்.

அவர் நடந்தவற்றை நம்மிடம் கூறுகிறார். லைவ்வில் பதியப்பட்ட அந்த நாடகத்தின் மூன்றரை நிமிட வீடியோ புகார் தெரிவிக்கும்போது ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தற்போது அந்த வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது.

அந்த வீடியோ முகமது யூசஃப் ரஹீம் என்பவரது பெயருள்ள சமூக ஊடக கணக்கிலிருந்து பதியப்பட்டுள்ளது. அவர்தான் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3ஆவது நபர். அவரை தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம்.

ஜனவரி 25ஆம் தேதியன்று, நீலெஷ் ரக்ஷல் என்பவர் சமூக ஊடகத்தில் இந்த வீடியோ வலம் வருவதை கண்டுள்ளார். அதன்பின் ஜனவரி 25ஆம் தேதி தனது நண்பர்கள் இருவர் மற்றும் ஒரு வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் தெரிவித்ததாக கூறுகிறார் ரக்ஷல்.

அந்த புகாரில் ஷஹீன் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகம் ஒன்றில் பிரதமர் குறித்து அவதூறாக பேசப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேபோல் அங்கு தேச துரோக குற்றம் நடப்பதாகவும், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஜனவரி 26ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அதில் அந்த பள்ளியில் தலைவர் முதல் குற்றவாளி என்றும், பள்ளி நிர்வாகம் 2ஆம் குற்றவாளி என்றும், முகமது யூசஃப் ரஹீம் மூன்றாம் குற்றவாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூண்டிவிடும்விதமாக வேண்டுமென்ற அவதூறாக பேசுதல், தேசத் துரோகம், மதத்தை அடிப்படையாக கொண்டு எதிரித்தன்மையை தூண்டுதல், பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தல் போன்ற பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஜனவரி 27ஆம் தேதியன்று போலீஸார் அந்த பள்ளிக்கு சென்று சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்தனர்.

மீண்டு ஜனவரி 8ஆம் தேதி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் ஆயுதங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டதாக பள்ளி தலைமை நிர்வாகி தெளசீஃப் தெரிவிக்கிறார்.

ஆனால் காவல்துறை கண்காணிப்பாளர் நாகேஷ்.டி.எல் இதனை மறுக்கிறார்.

அந்த விசாரணை நிகழ்வின்போது 12 வயது மாணவர் ஒருவர் தனது தாய் இந்த நாடகத்திற்கு வசனம் எழுதுவதற்கு உதவுவியதாக தெரிவித்துள்ளார். எனவே அந்த தாயையும் விசாரித்துள்ளனர் என்கிறார் தெளசிக்.

ஜனவரி 30ஆம் தேதி வயதான பெண்ணாக நடித்த 12 வயது மாணவியின் தாயும், 52 வயது ஆசிரியரையும் போலீஸார் காவலில் எடுத்தனர்.

அதன்பின் அவர்கள் மாவட்ட நீதிமன்றத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதன்பின் பிடார் மாவட்ட சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

ஜனவரி 31ஆம் தேதி போலீஸ் மீண்டும் குழந்தைகள் நல துறையுடன் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர் அந்த விசாரணை மூன்று மணி நேரம் நீடித்துள்ளது.

"பள்ளியில் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களையும் சந்திக்க முடியவில்லை என்பதால் எங்களின் விசாரணை அதிகாரி பள்ளிக்கு பலமுறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாங்கள் பள்ளியின் சிசிடிவி வீடியோவை கைப்பற்றினோம் ஆனால் சம்பவ தினத்தன்று பதிவான வீடியோ அழிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆதாரம் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது," என்று காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.நாகேஷ் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அந்த பள்ளியின் தலைவர் தலைமறைவாகிவிட்டனர்.

யார் இந்த பெண்கள்?

சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி நாங்கள் பிடார் சிறையில் உள்ள பெண்களை நாங்கள் சந்தித்தோம். இவர்கள் இருவரும் ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து சிறையில் உள்ளனர்.

சிறையில் இருக்கும் தனது மகளை தனியாக வளர்க்கும் அந்த 26 வயது தாய், "எனது மகள் நாடகத்திற்காக வீட்டில் தயார் செய்து கொண்டிருந்தார். அது என்னவென்றோ அல்லது சிஏஏ அல்லது என்ஆர்சி தொடர்பான சர்ச்சை குறித்தோ எனக்கு ஏதும் தெரியாது நான் அந்த நாடகத்தை பார்க்க கூட போகவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவில் சிஏஏவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன

"எனது மகள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றுகூட எனக்கு தெரியவில்லை. அவள் என்னை இங்கு வந்து சந்திப்பாள். நான் அவள் முன் அழாமால் தைரியமாக காட்டி கொள்வேன்," என்கிறார் அந்த தாய்.

அவரின் மகள் உறவினர் முகமது ஹஃபீசின் பாதுகாப்பில் வசித்து வருகிறார். "அவளை நீண்ட சமாதனாத்திற்கு பிறகு நாங்கள் தூங்க வைத்தோம். அவள் ஏதோ கெட்ட கனவு கண்டது போல் அலறி எழுவாள்; தனது தாயை நினைத்து அழுவாள்.. தான் செய்த தவறுக்காக அவர் தண்டனை பெறக் கூடாது என அவர் தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார்" என்கிறார் அவர்.

இதேபோல் சிறையில் உள்ள 52 வயது ஆசிரியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது மற்றொரு மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். "எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது என்று தெரிவித்தார். இவர் பள்ளியில் நிர்வாக பணியைதான் கவனித்து வந்ததாக தெரிவிக்கிறார்.

என்ன சொல்கிறது பள்ளி நிர்வாகம்?

தாங்கள் ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதாலேயே இலக்கு வைக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. ஒரு சின்ன வழக்கை தேசத் துரோக வழக்காக மாற்றிவிட்டனர். என்கிறார் தெளசீஃப்.

"அது மாணவர்கள் நடத்திய நாடகம். அதற்கு எதற்காக தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்று தெரியவில்லை. சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் நீதிமன்றத்தில் இதனை எதிர்கொள்வோம். குழந்தைகளிடம் ஐந்து முறை கேள்விகள் கேட்கப்பட்டன. அது குழந்தைகளுக்கு மன ரீதியிலான துன்புறுத்தல். நாங்கள் எங்கள் பள்ளிக்கு போலீஸாரை வரவேண்டாம் என்று தெரிவித்தோம். நாங்கள் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் இலக்கு வைக்கப்படுகிறோம் என்று நினைக்கிறோம்." என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: