தமிழக அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை குறைக்குமா?

tamil nadu budget 2020 tamil , sexual assault படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிக்கும் படம்

பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்திற்கு ரூ.75 கோடி தமிழக பட்ஜெட் 2020-21ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அரசுப்பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தால் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார் பன்னீர்செல்வம்.

எனினும் போக்குவரத்துக்கு கழகத்தில் அமலாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் தொடர்ந்து நீடிக்காது போல இந்தத் திட்டமும் ஆகிவிடக் கூடாது என்றும், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது மட்டுமே பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் போதுமானதல்ல என்றும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஆண்டான 2021இல் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே இந்த அரசால் தாக்கல் செய்யப்படும் என்பதால் தற்போதைய அதிமுக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை இது.

பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண் பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளதா என பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

பெண் பயணிகள் கூறுவது என்ன?

தர்மபுரியைச் சேர்ந்த சுதா ஒவ்வொரு வாரமும் பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்பவர். பெரும்பாலான பயணங்களில் ஒருவித அச்சத்துடன்தான் இருந்ததாகக் கூறுகிறார். ''ஒரு பெண் பயணியாக இந்த திட்டத்தை வரவேற்கிறேன். சிசிடிவி கேமரா கொண்டுவருவது நல்லது. ஒரு சில பேருந்துகளில் பயணிகளின் பக்கத்தில் உள்ள விளக்கை அணைத்துவிடுகிறார்கள். இரவு நேரத்தில் பயணம் செய்வதுதான் மிகவும் சிக்கலாக இருக்கும். இரவு நேரத்திலும் தெளிவான காட்சிகளைப் பதிவு செய்யும் கேமரா பொருத்தினால்தான் நன்மை கிடைக்கும். இல்லாவிட்டால் இந்த திட்டமும் பெயரளவில் கொண்டுவந்த திட்டமாக இருக்கும்,''என்கிறார் சுதா.

படத்தின் காப்புரிமை Getty Images

''சிசிடிவி கேமரா இருப்பது பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். சிசிடிவி கேமராவை நிறுத்தமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் தேவை. சிசிடிவி கேமராவுடன் ஜிபிஎஸ் கருவியும் பேருந்துகளில் இருக்கவேண்டும். அதேபோல, பேருந்துகளை இரவில் ஆள்நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலையில் உணவகத்தில் நிறுத்துகிறார்கள். அங்கு கழிவறைகள் மோசமாக இருப்பதால், பல பெண்கள் கழிவறை பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். பேருந்தில் கழிவறை வசதி கொண்டுவந்தால், பலரும் பயனுள்ளதாக இருக்கும்,''என்கிறார் திண்டுகல்லைச் சேர்ந்த தேவி.

'பாலியல் தொந்தரவுகளை இந்த திட்டம் ஓரளவு கட்டுப்படுத்தும்'

தொலைதூர பேருந்து பயணத்தில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளை இந்த சிசிடிவி கேமரா திட்டம் ஓரளவு கட்டுப்படுத்தும் என்கிறார் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி.

''ரயில் பயணத்தின்போது, மகளிருக்கான பெட்டியில் பல பெண்கள் நம்பிக்கையுடன் சிக்கல் இல்லாமல் பயணிக்கிறார்கள். பெண்களை தொலைதூரம் அனுப்பும் குடும்பத்தாரும் பாதுகாப்பு கருதி பேருந்தில் அனுப்புவதற்கு யோசிப்பார்கள். சிசிடிவி கேமரா இருப்பதால், பாலியல் வன்முறையில் ஈடுபட ஆண்கள் யோசிப்பார்கள். பாதிப்பு ஏற்பட்டால், பெண்களுக்கும் துணிவுடன் சிசிடிவி காணொளி ஆதாரத்தைக் கொண்டு வழக்கு தொடரமுடியும்,'' என்கிறார் சுகந்தி.

படத்தின் காப்புரிமை Suganthi

அதேமசயம், இந்த கேமராக்கள் பயத்தை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இதுமட்டுமே தீர்வாகாது என்கிறார். ''சிசிடிவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். பெண்கள் அச்சமின்றி பயணிக்கப் போதுமான மகளிர் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. நெரிசலான நேரத்தில், விழாக்காலங்களில் மகளிருக்கான சிறப்புப் பேருந்து இயக்கினால் உதவியாக இருக்கும். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகப்படுத்தலாம்.பேருந்தில் பாதுகாப்பு அலாரம் இருந்தால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்ணுக்காக குரல்கொடுக்க எளிதாக இருக்கும்,''என்கிறார் அவர்.

'சில மாதங்கள் மட்டுமே பின்பற்றப்படுகின்றன'

சிசிடிவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே பயணிகளுக்கு உதவும் திட்டமாக இருக்கும் என்கிறார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஒய்வுபெற்ற ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த கி.கர்சன்.

படத்தின் காப்புரிமை chingyunsong / getty images
Image caption கோப்புப்படம்

''விரைவு போக்குவரத்து கழகத்தில் விதவிதமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாக, பேருந்து அடுத்து நிறுத்தப்படும் இடம் பற்றிய அறிவிப்பு ஒலிக்கும் என்ற திட்டம் இருந்தது. தற்போது அது செயல்பாட்டில் இல்லை. இதுபோன்ற விதவிதமான திட்டங்களை அரசு அறிமுகபடுத்துகிறது. ஆனால், செயல்பாட்டில் ஒரு சில மாதங்கள் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. இதனை போல இல்லாமல், இந்த சிசிடிவி கேமரா திட்டம் செயல்பட, நீண்டகால ஏற்பாடு செய்யப்படவேண்டும்,''என்கிறார் கர்சன்.

மேலும், சிசிடிவி காட்சிகளின் பதிவு எங்கு சேமிக்கப்படும், காட்சிகளை நிகழ்வு நேரத்தில் பார்க்கமுடியுமா போன்றவை பற்றிய தெளிவான விவரங்கள் வெளியிடப்படவேண்டும் என்கிறார் கர்சன். ''பாதுகாப்பிற்காக சிசிடிவி வைக்கிறார்கள் என்பது நல்லதுதான். செயல்பாட்டை பொருத்துதான் திட்டத்தின் வெற்றி அமையும். சிசிடிவி காட்சிகளை யார் பார்க்கலாம். அது பேருந்தில் ஒரு ஸ்கிரீனில் தெரியுமா, சிசிடிவி வைப்பதை பெண் பயணிகள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதும் முக்கியம்,''என்கிறார் கர்சன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: