ஜாமியா நூலகத்தில் போலீஸ் தடியடி: அப்போது ஒரு இளைஞர் முகத்தை மூடியிருந்தது ஏன்?

டிசம்பர் 15 அன்று நூலகத்தில் காவல்துறையினரின் வன்முறை வீடியோவில் காணப்படுவரின் பெயர் சல்மான் படத்தின் காப்புரிமை BBC/JAMIA JCC

இந்தியத் தலைநகர் டெல்லியில் டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த வீடியோவை ஜாமியா மாணவர் ஒருங்கிணைப்புக் குழு ட்விட்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பகிர்ந்தது.

இதையடுத்து போலீஸ் தரப்பில் இருந்து வெளியானதாகக் கூறப்படும் மற்றொரு வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் நூலகத்தில் இளைஞர் ஒருவர் முகத்தை மூடிக் கொண்டிருப்பதாகவும், ஒருவர் மூடிய புத்தகத்தைப் படிப்பதாகவும், அது ஏன் என்றும் விமர்சனங்கள் பாஜக தரப்பில் இருந்து வைக்கப்படுகின்றன.

மூடிய புத்தகத்தை படிக்கிறாரா மாணவர்? நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படபடப்பாக வாயிலையே பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? நூலகத்தில் அமைதியாக அமர்ந்து படிக்கலாம் என்னும்போது, அவர்கள் பதற்றத்துடன் காணப்படுவது ஏன்? என்பது போன்ற கேள்விகளும் வைக்கப்படுகின்றன.

முதல் தளத்தில் எம்.ஏ., எம்.ஃபில் வாசிப்பு அறையில் எடுக்கப்பட்டது இந்த வீடியோ. ஆனால் இந்த வீடியோவில், நீல நிற ஸ்வெட்டர் அணிந்திருக்கும் இளைஞன் சர்ச்சைக்குள்ளாகியுள்ளான். சிலர் இந்த இளைஞரை 'கல்லெறிபவர்' என்று அழைக்கின்றனர். அவரது அணுகுமுறை மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Image caption பி.எச்.டி மாணவர் சல்மான்

நீல நிற ஸ்வெட்டரில் இருப்பது யார்?

வீடியோவில் அனைவருக்கும் முன்னதாக செல்லும் இளைஞன் யார் என்ற தேடலை பிபிசி மேற்கொண்டது. பலரை தொடர்பு கொண்டு, அந்த இளைஞனை சென்றடைந்தோம். இந்த இளைஞரின் பெயர் சல்மான். சிவில் இன்ஜினியரிங் துறையில் பி.எச்.டி முதல் ஆண்டு படிக்கும் சல்மான், ஜாமியா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்தவர்.

பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த இவர் ஜாமியா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். முதலில் காவல்துறையினரிடம் இருந்து விலகி இருக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை கேட்டவுடன், உரிய முறையில் பதிலளித்தார்.

நூலகத்தில் முகத்தை மூடிக் கொண்டிருப்பதற்கு காரனம் என்ன?

தனது முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு பேசும் சல்மான், "உண்மையில், போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிக்கொண்டிருந்தார்கள். நான் நூலகத்திற்கு வந்தபோது, சில மாணவ-மாணவிகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பதற்றமாக இருந்தனர். கண்ணீர்ப்புகையை அதிகமாக தொடர்ந்து சுவாசிப்பது மிகவும் கடினமானது" என்று சொல்கிறார்.

"இது உண்மையென்றால் போலீசாரும் தங்கள் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வீடியோவில் தெரிகிறதே? அவர்கள் ஏன் முகத்தை மூடிக் கொண்டிருக்கின்றனர்? அந்த வீடியோவில் நான் மட்டுமல்ல, என்னைப் போலவே போலீசாரும் முகங்களை மூடிக்கொண்டு எங்களை அடித்தனர். ஆனால் என்னை கல்லெறிபவன் என்று சுலபமாக குற்றம் சாட்டுகிறார்கள். கண்ணீர் புகை காரணமாக எங்கள் கண்களிலும் தோலிலும் எரிச்சல் ஏற்பட்டது" என்று கூறுகிறார் சல்மான்.

"வீடியோ வெளியானதிலிருந்து எனது குடும்பத்தினர் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். எனக்கு எதுவும் தவறாக நடந்துவிடக்கூடாது என்று பயப்படுகிறார்கள். நானும் இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இப்போது நான் குறிவைக்கப்படுகிறேன்" என்று சொல்கிறார் சல்மான்.

முன்னால் உள்ள புத்தகம் மூடப்பட்டுள்ளது ஏன்?

மாணவரின் முன் இருக்கும் புத்தகம் மூடப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் சல்மான். "நான் அன்று மாலை தொழுகை செய்வதற்காக நூலகத்திலிருந்து கீழே சென்றேன். மதியம் 2 மணி முதல் நான் வாசிப்பு அறையில் அமர்ந்திருந்தேன், நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை."

"எனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பச்சை புத்தகம் என்னுடையது தான். பொறியியல் படிப்பில் தொழில்நுட்பம் சாராத மற்றொரு பாடம் தொடர்பான புத்தகம் அது. நான் வெளியில் இருந்து தப்பித்து உள்ளே வந்திருந்தால், எனது சொந்த பாடத்துடன் தொடர்புடைய புத்தகத்துடன் அமர்ந்திருப்பேனா? அல்லது நூலகத்தில் இருந்த அந்த புத்தகத்தின் பெயர் தான் எனக்கு இன்னும் நினைவிருக்குமா? நூலகத்தின் வாயில் மூடப்பட்டிருந்தது, ஆனால் காவல்துறையினர் அந்த கதவை உடைத்துக்கொண்டிருந்தார்கள். "

"வாசலில் ஒரு பெரிய சத்தம் வந்தவுடன், சில மாணவர்கள் மூலைகளுக்குச் சென்று ஒளிந்து கொள்ளத் தொடங்கியதையும், நான் கதவை நோக்கிப் பார்க்கத் தொடங்கியதையும் நீங்கள் பார்க்கலாம். வெளிப்புறச் சூழல் மோசமாக இருப்பதும், காவல்துறையினர் கதவை உடைக்கத் துடிக்கிறார்கள் என்றும் தெரியும்போது, தொடர்ந்து எப்படி படிக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

காவல்துறையினர் அங்கு வருவார்கள் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதைப் போல நீங்கள் கதவைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களே என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் சல்மன். "காவல்துறையினர் கீழே இருந்து (தரை தளம்) மேலே வரும்போது, அனைவரும் நூலகத்தின் கதவை மூடிவிட்டார்கள். காவல்துறையினர் வாயிலை உடைக்கும்போது, மாணவர்கள் அனைவரும் பதற்றமாகிவிட்டார்கள். நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை காவல்துறையினர் பார்த்தால், அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதால் தான் நாங்கள் மேசைகளுக்கு கீழே மறையவில்லை".

"எனது தொலைபேசி அணைந்திருந்தது, இல்லையென்றால் நான் அங்கு இருந்திருக்கவே மாட்டேன். காவல்துறையினர் வாசிப்பு அறைக்கு வருகிறார்கள், வா வெளியே சென்றுவிடலாம் என்று சொல்வதற்காக நண்பர்கள் எனக்கு போன் செய்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய நேரம், தேவையில்லாமல் மாட்டிக் கொண்டேன்."

Image caption எம்.ஏ-எம்ஃபில் பழைய வாசிப்பு அறையின் படம் வைரலாகி வருகிறது

உண்மையில், அந்த அறையின் கீழ் இருக்கும் தரை தளத்தில் மற்றொரு படிப்பறையின் வீடியோவும் வெளிவந்துள்ளது, அங்கும் போலீசார் நுழைந்தனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், காவல்துறையினர் தாங்கள் இருக்கும் வாசிப்பு அறைக்கும் வரலாம் என்று அச்சம் ஏற்பட்டதாக சல்மான் கூறுகிறார். அதனால்தான் வீடியோவில் காணப்படும் மாணவர்கள் அனைவரும் கதவை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

"தரை தளத்தில் இருக்கும் அறையில் இருந்த பல மாணவர்கள் எங்கள் அறைக்கு வந்தார்கள். காவல்துறையினர் அங்கு மாணவர்களை அடித்து நொறுக்கியதாக தெரியவந்தது. இதையெல்லாம் பார்த்த பிறகுதான் நாங்கள் கதவை மூடினோம்."

Image caption தற்போது நூலகம் மூடப்பட்டுள்ளது

மற்றுமொரு வீடியோ

வீடியோவில் இடம்பெற்றிருந்த நூலகத்தைப் பார்த்தோம். நூலகத்தின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்திருந்தன. உடைந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் பார்த்தபோது, நாற்காலிகள் உடைந்த நிலையில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. நூலகத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டு, 'Library Under Renovation' என்ற பச்சைப் பலகை ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்தியா டுடே பத்திரிகைக்கு ஒரு பிரத்யேக வீடியோ கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, அதில் பல மாணவர்கள் வேகமாக வாசிப்பு அறைக்குள் நுழைகிறார்கள், ஒரு மாணவரின் கையில் கல் இருக்கிறது. அதன் பிறகு மாணவர்கள் கதவை மூடுவதற்காக கதவுக்கு முன்னால் மேசையை வைக்கின்றனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் வாசிப்பு அறையின் இந்த வீடியோ வெளியான பிறகு, சமூக ஊடகங்களில் ஒரு பகுதியினர், காவல்துறை நடவடிக்கையை நியாயப்படுத்தி கருத்துக்களை வெளியிடுகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ காவல்துறையினரின் நடவடிக்கைக்கு முந்தையதா அல்லது பிந்தையதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :